இந்த சம்பவம் நடந்தது 1992ம் ஆண்டாகவோ அல்லது 1993ம் ஆண்டாகவோ இருக்கலாம். எனது தந்தைக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் வெளியூரைச் சேர்ந்தவர். இங்கே ஊரில் அவருக்கு பலர் நண்பர்கள். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஊருக்கு வருவார். வந்தால் அனைத்து நண்பர்களையும் சந்திப்பார். அப்போது இன்றிருக்கும் அத்தனை தொலைத்தொடர்பு வசதிகள் கிடையாது. தொலைபேசியே சிலரிடம் தான் இருக்கும். நண்பர் ஊருக்கு பேருந்தில் வந்திறங்கி பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கும் ஒரு வாடகை சைக்கிள் கடையில் சைக்கிள் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது நேரம் மாலை 5 மணி இருக்கும். நான் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்திருந்தேன். வழக்கமாக எனது தந்தை காலை 8.30 மணிக்கு அலுவலகம் கிளம்பி விடுவார்கள். காலை 8.30க்கு கிளம்பினால் இரவு 7.30 மணி அளவில் வீடு திரும்புவார்கள். இது அவருடைய பல ஆண்டு வழக்கம். அவருடைய மொத்த பணிக்காலத்தில் ஓரிரு நாட்கள் இந்த வழக்கத்துக்கு மாறாக இருந்திருக்கும். 99 சதவீதம் இவ்வாறுதான். சனி ஞாயிறு ஆகிய தினங்களிலும் பணி இருக்கும். அப்போதும் பணிக்குச் செல்வார்கள். இன்று அது வியப்புக்குரிய ஒன்றாகத் தோன்றக் கூடும். ஆனால் அது யதார்த்தம். இன்றும் பல துறைகள் அவ்விதம் செயல்படுகின்றன. விஷயம் தெரிந்தவர்களுக்கு அது தெரியும். அபூர்வமாக அன்றைய தினம் வீட்டில் இருந்தார்கள். நண்பரும் அலுவலகம் சென்று விட்டு தான் வீட்டுக்கு வந்திருந்தார். நண்பருடன் இன்னொரு நண்பரும் இன்னொரு சைக்கிளில் வந்திருந்தார். எனது தந்தையின் நண்பர் என்ற முறையில் அவர் எனக்கும் அறிமுகமாகியிருந்தார். அவருடைய ஊருக்கு என்னை எனது தந்தை பலமுறை அழைத்துச் சென்றிருக்கிறார். முதல் சந்திப்பிலிருந்தே அவர் மீது எனக்கு பெரும் அன்பும் பெரும் பிரியமும் உண்டு. இனிமையான மனிதர் அவர். அவர் வந்திருந்த சமயத்தில் தந்தை நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தார். தந்தை வீட்டில் இருக்கும் போது நடைப்பயிற்சிக்கு செல்லும் போது என்னையும் அழைத்துக் கொண்டு செல்வார் என்பதால் அவர் நடக்க சாத்தியமுள்ள பாதைகள் எனக்கும் தெரியும். நண்பர் வந்திருக்கிறார் என்பதை தந்தை எங்கே நடைப்பயிற்சி செய்கிறாரோ அங்கே சென்று சொல்லி அழைத்து வர வேண்டும். இந்த பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் என்னுடைய சின்ன சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு பாதையை யூகித்துச் சென்றேன். ஐந்து நிமிடத்தில் தந்தையைக் கண்டு விட்டேன். அவர் நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தந்தையிடம் விஷயத்தைச் சொன்னவுடன் அவர் நண்பர் வருகையால் மகிழ்ந்து என்னிடம் சின்ன சைக்கிளை வாங்கி அவர் அதில் பயணித்து வீட்டுக்குச் சென்று விட்டார். நான் நடந்து வீடு வந்து சேர்ந்தேன்.
அதன் பிறகும் நண்பர் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
நான் முன்னர் சொன்ன சம்பவம் நடந்து 33 ஆண்டுகள் ஆகிறது. நண்பர் இன்று தந்தையைக் காண வீட்டுக்கு வந்திருந்தார். இம்முறை அவருடைய நான்கு சக்கர வாகனத்தில் வந்திருந்தார். நண்பரும் தந்தையும் நீண்ட நேரம் அளவளாவினார்கள். அவர்கள் இருவருக்கும் பொதுவான இன்னொரு நண்பரைக் காண நண்பர் விரும்பினார். அவரை அலைபேசியில் இருவரும் தொடர்பு கொண்டார்கள். அவர் அலைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தது. எனக்கு அவரது வீடு தெரியும் என்பதால் நான் எனது பைக்கில் முன் செல்ல நண்பரின் கார் என்னைத் தொடர்ந்து வந்தது. நண்பரின் வீட்டைச் சென்றடைந்தோம். அழைப்பு மணியை ஒலித்தோம். உள்ளே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. வாசலில் கார் வந்து நிற்பதைக் கண்டு அண்டை வீட்டில் இருக்கும் பெண்மணி ஒருவர் அவர் நடைப்பயிற்சிக்கு சென்றிருப்பார் என்று கூறினார். நண்பரிடம் நான் எனது பைக்கில் சென்று பார்த்து வரட்டுமா என்று கேட்டேன். அதற்குள் அந்த பெண்மணி அவர் வீட்டில் ‘’இரு சக்கர வாகனம் இருக்கிறதா எனப் பாருங்கள்’’ என்றார். வாகனம் இல்லை. அவ்வாறெனில் அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்றிருப்பார் என்று சொன்னார்கள்.
அப்போது நண்பரிடம் 33 ஆண்டுகள் முன்னால் நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தினேன். ஆங்கிலத்தில் We have come around a full circle என்பார்கள்.