Wednesday, 1 October 2025

டெண்டுல்கர் நினைவுகள்

எனக்கு பத்து வயது இருந்த போது நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒன்றில் முதன் முதலில் சச்சின் டெண்டுல்கரைக் கண்டேன். சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் வழியாகவே கிரிக்கெட்டைப் புரிந்து கொண்டேன். சச்சின் அப்போது பதின்வயதைக் கடக்காத ஒருவராக இருந்தார். தொலைக்காட்சியின் காலமும் சச்சினின் காலமும் ஒன்று. கிரிக்கெட் மேட்ச்களை டி.வி யில் மட்டுமே காண முடியும். பகலிரவு ஆட்டங்கள் அறிமுகமானது நினைவில் இருக்கிறது. தூர்தர்ஷனில் இரவு 8.30க்கு செய்திகளுக்காக கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். இன்று அவ்வாறான நிலையை கற்பனை செய்வது கடினம். கல்கத்தாவில் நடைபெற்ற ஹீரோ கோப்பை இறுதிப் போட்டி நன்றாக நினைவிருக்கிறது. பரபரப்பான ஆட்டம் ஒன்றில் மேட்ச்சின் கடைசி ஓவரை டெண்டுல்கர் வீச வருவார். யாரும் எதிர்பாராத ஒரு முடிவு அது. அதில் டெண்டுல்கர் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவுக்கு கோப்பையை வாங்கித் தந்தார். மறக்க முடியாத போட்டி.   

ராகுல் திராவிட் விளையாடத் தொடங்கிய போது எனக்கு மிகவும் பிடித்த வீரராக திராவிட் ஆனார். நிதானமாக நிலைத்து விளையாடும் ராகுலின் பாணி மீது எனக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. இப்போதும் இருக்கிறது. ராகுல் திராவிட் அளவு ஈர்ப்பு கொண்ட இன்னொரு கிரிக்கெட் வீரர் இல்லை. 

தோனி மீதும் பிரியம் உண்டு. 

பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் கிரிக்கெட் விளையாட்டைக் கவனிக்கும் வழக்கம் இருந்தது. அதன் பின் மிக மிகக் குறைந்து விட்டது. இன்று இந்திய கிரிக்கெட் அணியில் யார் யார் விளையாடுகிறார்கள் என்னும் அளவு கூட அவதானம் இல்லை.