2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் கடைசி நாள் ஊரில் ஒரு திரைப்படம் வெளியானது. அத்திரைப்படம் வெளியான திரையரங்கம் ஊரின் பழமையான திரையரங்குகளில் ஒன்று. 1969ம் ஆண்டு கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. அரங்கின் முன்னால் இரண்டு இரும்பு கிரில் கதவுகள் கொண்ட பழைய பாணி முன்பக்க சுற்றுச் சுவர். சுற்றுச்சுவருக்கும் அரங்குக்கும் இடையே நூறு அடிக்கும் மேலாக திறந்தவெளி. அதன் வலதுபுறம் பாக்ஸ் ஆஃபிஸ். இடதுபுறம் இரு சக்கர வாகன பார்க்கிங். 50 ஆண்டுகளுக்கு முன்பு எவ்விதமான ஏற்பாடு இருந்ததோ அதே விதமான ஏற்பாடுகளே அப்படியே தொடர்ந்தன. அந்த திரையரங்கினுள் நுழைந்தால் சென்ற தலைமுறைக்கு சென்று விட்ட உணர்வு ஏற்பட்டு விடும். அவ்விதமான தன்மை திரையில் காணும் சினிமா அனுபவத்துக்கு உகந்ததாகவே அமைந்திருக்கும். சற்று முயன்றால் என்னால் எந்த திரையரங்கில் எந்த திரைப்படம் பார்த்தேன் என்பதை நினைவுபடுத்திக் கூறிட முடியும். ஒப்பீட்டளவில் நான் குறைவாகவே சினிமா பார்ப்பவன். சினிமா பார்த்தால் அது திரையரங்கில் மட்டுமே என்னும் வழக்கம் உள்ளவன். எனவே அவ்வாறு நினைவுபடுத்திக் கொள்வது இயல்கிறது.
30.09.22 அன்று மதியம் அத்திரையரங்கை கடந்து செல்கையில் அங்கே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைக் கண்டேன். அப்படத்தின் பெயர் புதிதாக இருந்தது. வழக்கமான தமிழ்ப் பெயர் போல் தெரியவில்லை. அது டப்பிங் செய்யப்பட்ட திரைப்படம் போல் இருந்தது. சுவரொட்டியிலிருந்து டப்பிங் திரைப்படமா அல்லது பல மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படமா என்பதையும் அறிய முடியவில்லை. அக்கணத்தில் ஏற்பட்ட ஆர்வத்தில் எனது இரு சக்கர வாகனத்தை திரையரங்கினுள் நுழைத்தேன். காட்சிசீட்டு பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தேன். கடலோர தென் கன்னட தேசத்தில் நிகழும் ஒரு கதை. அந்த படத்தின் கதையும் காட்சிகளும் மறக்க முடியாத சினிமா அனுபவமாயின. இந்திய அளவில் பல மொழிகளில் அத்திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
இன்று அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது அந்த திரையரங்கம் அதே பெயருடன் இருக்கிறது. பழைய திரையரங்க நிர்வாகத்துடன் ஒரு மல்டிஃபிளக்ஸ் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு பழைய திரையரங்கை முழுமையாக இடித்து புதிய மல்டிஃபிளக்ஸ் திரையரங்கம் கட்டியிருக்கிறார்கள். சுற்றுச்சுவருக்கும் அரங்குக்கும் இடையே இருக்கும் இடம் முழுமையாக நான்கு சக்கர வாகன பார்க்கிங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் அரங்கின் முன்பகுதியில் அமைந்துள்ளது. இப்போது அந்த அரங்கில் ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்கள் திரையிட முடியும். அதி நவீன ஒலி அமைப்புகள் கொண்டதாக இப்போது இருக்கிறது.
இன்று வெளியாகும் இரண்டாம் பாகம் அதே திரையரங்கில் வெளியாகிறது. நேற்று மாலை அந்த வழியாகச் சென்ற போது அப்படத்தின் சுவரொட்டியைக் கண்டேன். இன்றைய காலைக்காட்சிக்கு ஒரு டிக்கெட் முன்பதிவு செய்து வாங்கிக் கொண்டேன். டிக்கெட் கொடுக்கும் சாளரத்தினுள் மூன்று பெண் ஊழியர்கள் கணினி மூலம் டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்கு டிக்கெட் வழங்கியவரிடம் இப்படத்தின் முதல் பாகத்தை இங்கேதான் பார்த்தேன் என்று சொன்னேன். அவருக்கு நான் சொல்வது என்ன என்பது புரிந்தது. மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.
காலச்சக்கரம் கணமும் நில்லாமல் சுழன்று கொண்டேயிருக்கிறது !