எனக்கு சிதம்பரத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் பல வருடப் பழக்கம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அவரை மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது சந்திப்பேன். கோவிட்டுக்குப் பின் அவரைச் சந்திப்பது மிகவும் குறைந்து விட்டது. நான் ஒருவரை அடிக்கடி சந்தித்தாலும் நீண்ட நாள் சந்திக்காமல் இருந்தாலும் உணர்வுநிலையில் ஒன்றாகவே இருப்பேன். சந்திக்காமல் இருந்ததால் எந்த இடைவெளியையும் நான் உணர மாட்டேன். அவருக்கு மூன்று குழந்தைகள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் குழந்தைகள். இப்போது மூத்த பையன் அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு படிக்கிறான். இரண்டாவது பையன் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயில்கிறான். நண்பரின் மகள் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். நண்பரின் மகளை சின்னஞ் சிறு பெண்ணாகப் பார்த்தது. மிக மெல்லிய கீச்சுக்குரல் அப்பெண்ணுக்கு நான் பார்த்த போது. மூன்று குழந்தைகளின் கல்வியிலும் நண்பரை விட நண்பரின் மனைவி மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டார். குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைப்பதை ஓர் அன்னையாக உறுதி செய்ய வேண்டும் என்ற தீரா வேட்கை கொண்டவர் அவர். மூன்று குழந்தைகளையும் அவர் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவார். பின்னர் பள்ளியிலிருந்து அழைத்து வருவார். சிறப்பு வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வார். இசைப் பயிற்சிக்கு அழைத்துப் போவார். கோடை விடுமுறை நாட்களிலும் கலையோ நுண்கலையோ குழந்தைகள் பயில வேண்டும் என முனைப்புடன் செயல்படுவார். நண்பர் இந்த விஷயங்களில் பெரிதாக தலையிட மாட்டார். இன்று நண்பரின் மகள் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்த போது சட்டக் கல்லூரியிலிருந்து தனது தந்தையிடம் பேசினார். கணீர் குரல். வழக்கறிஞர்களுக்கேயுரிய தொனி. ‘’கீச்சுக்குரல்ல பேசிக்கிட்டு இருந்த குழந்தையா சார் இப்ப அட்வகேட் மாதிரி பேசுது’’ என்றேன். நண்பருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நண்பர் தன் மகள் தமிழ் , ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, ஹிந்தி, ஜெர்மன் ஆகிய ஆறு மொழிகள் அறிந்தவர் என்று கூறினார். எனக்கு பெருவியப்பாக இருந்தது. தனது சுய ஆர்வத்தின் விளைவாக இத்தனை மொழிகளையும் கற்றுக் கொண்டார் என சொன்னார் நண்பர். மேலும் தனது மகள் சிறு குழந்தையாயிருந்த நாளிலிருந்து தினமும் குமரகுருபரரின் ‘’சகலகலாவல்லி மாலை ‘’ நூலை மாட்டுக் கொட்டகையில் அமர்ந்து பாராயணம் செய்து பசுவை வலம் செய்து பின் அடி பணிந்து வணங்கும் கொண்டவர் என்றும் கூறினார். தமிழகத்திலிருந்து ஆன்மீகப் பணியாற்ற காசி சென்ற ஸ்ரீகுமரகுருபரர் ஹிந்தியை விரைவாகப் பயில கல்விக் கடவுள் சரஸ்வதியைப் போற்றி ‘’சகலகலாவல்லி மாலை’’ இயற்றி மொழியை சுலபமாகக் கற்கும் அருளைப் பெற்றார் என்பது ஐதீகம். பல மொழித் திறன் பெற விரும்புபவர்கள் குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையைப் பாராயணம் செய்வது தமிழகத்தின் மரபுகளில் ஒன்று.