Thursday, 11 December 2025

செய்தித்தாள் வாசித்தல் ( நகைச்சுவைக் கட்டுரை)

இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்கும் மத்திய அரசு மாநில அரசு வங்கித் தேர்வுகள் ஆகியவற்றுக்கும் தயார் செய்யும் பலரை நான் அறிவேன். அவர்கள் அனைவருமே தங்கள் தேர்வு தயாரித்தலின் ஒரு பகுதியாக தினமும் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் செய்தித்தாள் வாசிப்பார்கள். அவர்கள் வாசிக்கும் செய்தித்தாள் ‘’தி ஹிந்து’’. நான் அவர்களிடம் ‘’ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ சேர்த்து வாசிக்குமாறு சொல்வேன்.   அவர்களிடம் நான் ஒரு விஷயம் கவனித்ததுண்டு. பட்டப்படிப்பு முடித்து 21 வயதுக்கு மேல் மட்டுமே அவர்கள் செய்தித்தாள் வாசிக்கத் துவங்கியிருப்பார்கள். அதற்கு முன் அவர்களுக்கு அந்த வழக்கம் இருந்திருக்காது. மூன்றிலிருந்து நான்கு வருடம் தேர்வுக்குத் தயார் செய்கிறார்கள் என்றால் அந்த காலகட்டத்தில் தீவிரமாக செய்தித்தாள் வாசிப்பார்கள். அரசுப் பணி கிடைத்து உத்யோகத்துக்கு வந்த பின்னர் செய்தித்தாள் வாசிப்பதை நிறுத்தி விடுவார்கள். ஜனநாயக நாட்டில் செய்தித்தாள் என்பது ஆயிரக்கணக்கானோர் கவனத்துக்கு ஒரு விஷயத்தைக் கொண்டு செல்லும் சாதனம். ஒரு செய்தித்தாள் சில ஆயிரம் அல்லது சில லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு காலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் சில ஆயிரம் அல்லது சில லட்சம் நபர்களை அடைந்து அவர்களால் வாசிக்கப்படுகிறது என்றால் வாசிக்கப்படும் விஷயம் மேலும் துலக்கமும் அடர்த்தியும் கொள்கிறது. இன்று ஏகப்பட்ட நாளிதழ்கள் வெளியாகின்றன. ஒருவர் அனைத்து நாளிதழ்களையும் படிக்க வேண்டியதில்லை. அது அவசியமும் இல்லை. ஆனால் ஏதேனும் ஒரு நாளிதழையாவது வாசிக்கும் வழக்கம் கொண்டிருப்பது உகந்தது . இன்று பெரும்பான்மையான செய்தித்தாள்கள் இணையத்தில் இலவசமாக வாசிப்புக்குக் கிடைக்கின்றன. அதற்கென செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வளவு எளிதாக நாளிதழ்கள் எப்போதும் வாசகரை அடைந்ததில்லை. செய்தித்தாள் வாசிக்கும் வழக்கம் கொண்டிருக்கும் மாநில அரசு மத்திய அரசு அதிகாரிகளை நான் கண்டதில்லை. அந்த பொறுப்பில் இருக்கும் நண்பர்களிடம் தினமும் செய்தித்தாள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருங்கள் என்று கூறுவேன். அது அவர்களை அசௌகர்யமாக உணர வைக்கிறது என்பதை அறிந்தேன். அவர்கள் செய்தித்தாள் வாசிக்கத் தயாராக இல்லை. அதில் அவர்களுக்கு பெரும் மனத்தடையும் எதிர்ப்பும் இருக்கிறது என்பதை அவதானித்துக் கொண்டேன். 

ஊருக்கு அருகில் முக்கியமான சாலை ஒன்றையொட்டி அமைந்திருந்த பள்ளியின் வளாகத்தினுள் பத்து ஆண்டு வளர்ந்திருந்த மரம் ஒன்று அரசு அனுமதியின்றி வெட்டப்பட்டது. அந்த பாதை வழியாக நான் தினமும் செல்வேன். அந்த மரம் வெட்டப்பட்ட அன்று நான் ஊரில் இல்லை ; வெளியூர் சென்றிருந்தேன். மறுநாள் அந்த பாதையில் சென்ற போது அந்த மரம் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டப்பட்டதற்கு பொறுப்பு என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வெட்டப்பட்ட மரத்துக்கான அபராதம் செலுத்தப்பட வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஒரு பிரபலமான பத்திரிக்கை ஒன்றின் உள்ளூர் நிருபரைச் சந்தித்து இந்த விஷயத்தை எடுத்துக் கூறி மரம் வெட்டப்பட்ட புகைப்படங்களை அளித்து ‘’பொது இடங்களில் மரங்கள் மாயம் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?’’ என செய்தி வெளியிடுமாறு கேட்டுக் கொண்டேன். இந்த விஷயம் குறித்து நிருபர் விசாரித்து அறிந்து தலைமை அலுவலகத்துக்கு செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். அவர் அந்த இடத்தை நேரில் சென்று பார்த்தார். விசாரித்தார். மேற்படி தலைப்பிலேயே செய்தி வெளியானது. அதில் இன்னொரு விஷயமும் இணைந்திருந்தது. அது என்னவெனில் மாவட்டத்தின் புராதானமான விஷ்ணு ஆலயம் ஒன்றின் சன்னிதித் தெருவில் இருந்த 14 வேம்பு, மலைவேம்பு, புங்கன் மரங்களை தனது செங்கல் காலவாய்க்கு எரிபொருளாகப் பயன்படுத்த வெட்டி எடுத்துச் சென்ற ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரூ.2100 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்னும் செய்தியும் மேற்படி செய்தியுடன் இணைந்து வெளியானது. நூற்றுக்கணக்கானோர் வாசிக்கும் செய்தித்தாளில் வெளியானதால் அந்த மரம் வெட்டப்பட்ட பள்ளி இருந்த கிராமத்தின் மக்களுக்கும் கல்வித்துறை சம்பந்தப்பட்ட செய்தி என்பதால் ஆசிரியர்களுக்கும் இந்த விஷயம் தெரியவந்தது. அவர்கள் அனைவருமே நாளிதழில் செய்தியாக வாசித்திருப்பார்களா என்பது ஐயம் ஆனால் யாரோ சிலர் தாங்கள் வாசித்த செய்தியை ஒளிப்படம் எடுத்து தங்கள் வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்தனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நாளிதழின் தலைமை அலுவ்லகத்துக்கு ஃபோன் செய்து நாளிதழ் மேல் வழக்கு போடுவேன் எனக் கூறினார். வழக்கறிஞர் மூலம் நோட்டிஸ் அனுப்பவும் செய்தார். நாளிதழ் நிர்வாகம் பள்ளி வளாகத்தில் இருக்கும் மரம் வெட்டப்பட்டிருப்பதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரே பொறுப்பாவார் என்பதால் வெளியான செய்தி சரியானதே அதில் எந்த பிழையும் இல்லை என பதில் கூறியது. நாளிதழில் செய்தி வந்து பலரின் கவனத்துக்கு விஷயம் வந்ததால் கல்வித்துறை இந்த விஷயத்தை நிலுவையில் வைத்தது. வருவாய்த்துறை அதிகாரிகளும் நிலுவையில் வைத்தனர். தலைமை ஆசிரியரிடம் புகார் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டது. இந்த செய்தியை வாட்ஸ் அப் மூலம் மாவட்ட நிர்வாகம் அறிந்திருந்ததால் தலைமை ஆசிரியரை உடனடியாகப் பாதுகாக்க கல்வித்துறை தயங்கியது. 

அமெரிக்கா நாட்டின் நிர்வாகத்தில் ஒரு வழக்கம் உண்டு என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சந்தேகத்துக்கு இடமான விதத்தில் ஏதேனும் விஷயம் பொதுமக்கள் கண்ணில் பட்டால் அவர்கள் அதனை ஓர் அரசாங்க தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள். இந்த வழக்கம் அமெரிக்கர்களுக்கு உண்டு. அந்த அடிப்படையிலேயே நான் இந்த விஷயங்களைக் காண்கிறேன். செய்தித்தாள் செய்திகளைக் கூட இவ்விதமாகவே அணுகுகிறேன். அரசாங்கம் போன்ற பொதுமக்கள் தொடர்பு கொண்ட பணிகளில் ஓர் அதிகாரிக்கு நிறைய விதமான பணிகள் பொறுப்புகள் வேலைகள் இருக்கும். எனினும் பொது ஊடகங்கள் மூலம் பொதுமக்கள் குறித்த செய்திகளை விபரங்களை அறிந்து கொள்வது என்பதும் அரசாங்க அதிகாரியின் பணிகளில் ஒன்றே. 

எனது நண்பர் ஒருவர் ரயில்வேயில் உயர் அதிகாரியாக இருந்தார். அவர் சிதம்பரத்துக்கு ரயில்வே தொடர்பான நிகழ்ச்சி ஒன்றனுக்கு வந்திருந்தார். புவனகிரி அவருடைய சொந்த ஊர். நிகழ்ச்சி முடிந்து அவர் சொந்த ஊருக்குச் சென்று தனது வீட்டில் இருந்தார். அன்று காலை எனக்கு ஃபோன் செய்தார். அவரைச் சந்திக்க வரும் போது இரண்டு குறிப்பிட்ட செய்தித்தாள்களைக் கூறி அதனை வாங்கி வர முடியுமா என்று கேட்டார். எதற்காக என்று நான் கேட்டேன். நேற்றைய நிகழ்ச்சி குறித்த பதிவு அந்த நாளிதழ்களில் வெளியாகியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் கோப்புகளில் பதிவு செய்ய அது தேவை என்றார். எனது ஊருக்கு நாளிதழ்களின் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் பதிப்புகளே வரும். நிகழ்ச்சி நடந்திருப்பது சிதம்பரத்தில் என்பதால் அங்கே புதுச்சேரி கடலூர் பதிப்புகளில் அந்த செய்தி இருக்கும் என யூகித்து சிதம்பரம் சென்று நண்பர் கூறிய நாளிதழ்களில் முதல்நாள் ரயில்வே நிகழ்வு குறித்த செய்தி வெளியாகியிருக்கிறதா என்று பார்த்தேன். வெளியாகியிருந்தது. மேலும் அந்த கடையில் இருந்த எல்லா ஆங்கில தமிழ் செய்தித்தாள்களிலும் அந்த செய்தி வெளியாகியிருக்கிறதா என்று பார்த்தேன். அனைத்திலும் வெளியாகியிருந்தது. அனைத்து செய்தித்தாள்களையும் வாங்கிக் கொண்டேன். நண்பருக்கு குறுஞ்செய்தி மூலம் முதல்நாள் நிகழ்வு எல்லா பத்திரிக்கைகளிலும் வெளியாகியிருக்கிறது என்றும் அவற்றுடன் நண்பர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன் என தகவல் அனுப்பினேன். நன்றி என நண்பர் பதில் அனுப்பினார். நண்பர் வீட்டுக்குச் சென்றேன். வரவேற்பு அறையின் மையத்தில் ஒரு நாற்காலி இருந்தது. அதன் இடதுபுறமும் வலதுபுறமும் நாற்காலிகள் இருந்தன. நான் இடதுபுறத்தின் முதல் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து ரயில்வேயின் அதிகாரி ஒருவர் எனக்கு நேர் எதிரில் வலதுபக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். என் மடி மீது ஏகப்பட்ட செய்தித்தாள்கள் இருந்தன. ரயில்வே உயர் அதிகாரி வந்தார். நாங்கள் இருவரும் எழுந்து வணக்கம் சொல்லி விட்டு அமர்ந்து கொண்டோம். தனது வலதுபக்கத்தில் இருந்த அதிகாரியிடம் நேற்றைய நிகழ்வு குறித்த செய்தி ஏதேனும் செய்தித்தாளில் வெளியாகியிருக்கிறதா என்று உயர் அதிகாரி கேட்டார். அதற்கு அந்த அதிகாரி எந்த செய்தித்தாளிலும் வெளியாகவில்லை என்று கூறினார். என் மடி மீது இருந்த செய்தித்தாள்களைக் கண்ட போதாவது அவர் யூகித்திருக்க வேண்டும். நான் எல்லா செய்தித்தாளிலும் செய்தி வந்திருக்கிறது என உயர் அதிகாரியிடம் கொடுத்தேன். ஓர் உயர் அதிகாரியின் முன் இவ்விதம் உண்மைக்கு மாறான ஒன்றைக் கூறுவார்களா என நான் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன். உயர் அதிகாரி முகத்தில் சிறு சலனம் கூட இல்லாமல் இருந்தார் என்பது அவருடைய பெருந்தன்மை. அதிகாரவர்க்கம் என்பது எப்படிப்பட்டது என்பதை அன்று புரிந்து கொண்டேன். உயர் அதிகாரி அவரிடம் விளக்கம் கேட்க மாட்டார். கேட்டால் தனக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளை இதற்கு பொறுப்பாக்குவார். இதுதான் பதில் என்று கூறப்போகிறார் என்பது தெரிந்த பின் அதை அவர் கூற கேட்க வேண்டியதில்லை என்பதால் உயர் அதிகாரி அமைதியாக இருந்து விட்டார். அதில் இன்னொரு விஷயமும் செய்தியும் இருந்தது. உயர் அதிகாரி தனது மௌனம் மூலம் தனது கீழ் அதிகாரிக்கு உணர்த்தியது என்ன எனில் தான் அவரையும் அவரது பணி புரியும் தன்மையையும் சாக்கு போக்குகள் கூறும் இயல்புகளையும் அறிவேன் என்றும் மேலும் நிகழ வேண்டிய பணிகளை மேற்படி அதிகாரி இல்லாமல் வேறு நபரை அல்லது நபர்களைக் கொண்டும் நிகழ்த்திட முடியும் என்பதையும் சொல்லாமல் சொன்னார் ; வெகு இயல்பாகக் காட்டினார். அதிகாரவர்க்கம் என்பது எவ்விதமானது என்பதற்கு சிறு உதாரணம் இந்நிகழ்வு என எண்ணிக் கொண்டேன். 

தமிழகத்தின் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர் தன்னைப் பணி நிமித்தம் சந்திக்க வரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளிடம் அன்றைய செய்தித்தாள் அவர்கள் வாசித்திருக்கிறீர்களா என வினவுவார் என பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதனை முதல் கேள்வியாகக் கேட்பார் என்பது தெரிந்தும் அவர் முன் அன்றைய செய்தித்தாளை வாசிக்காமலேயே அனைத்து ஆட்சிப் பணி அதிகாரிகளும் செல்வார்கள் என்பதையும் கேட்டிருக்கிறேன். 

இன்று சாமானியர்களும் சரளமாக பயன்படுத்தும் விதத்தில் இணையம் உள்ளது. பெரும்பாலான பத்திரிக்கைகள் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. ஏதேனும் ஒரு நாளிதழை - குறைந்தபட்சம் தலைப்புச் செய்திகளையாவது - வாசிக்கும் வழக்கத்தை குடிமக்களும் பணி புரிபவர்களும் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் கைக்கொள்ள வேண்டும்.