Tuesday, 16 December 2025

சில விஷயங்கள்

கல்லூரி நாட்களில் மிகத் தீவிரமாக இலக்கியம் வாசித்துக் கொண்டிருந்தேன். வாசிக்கத் தொடங்கிய நாளிலிருந்தே இலக்கியத்துக்கு சமமாக அ-புனைவுகளையும் வாசிப்பேன். இன்று அந்த நாட்களை எண்ணிப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.  வியப்புக்கான காரணம் அன்று மனதில் பொங்கி வழியும் உற்சாகமும் நம்பிக்கையும். எனது நம்பிக்கை மற்றும் உற்சாகத்துக்கு கரை அமைத்துக் கொடுத்தது எனது வணிகம். வணிகம் பல விஷயங்களை எனக்குப் புரிய வைத்தது. மனித சுபாவங்கள் குறித்து நான் நிறைய தெரிந்து கொண்டேன். மனிதர்களுடைய எல்லைகளையும் தடைகளையும் என்னால் தெளிவாகப் பார்க்கவும் உணரவும் முடிந்தது. அதனை நான் என்னுடைய கட்டுமானத் தொழிலில் பணியாளர்களிடமிருந்தும் கட்டுமான பொருட்கள் சப்ளை செய்பவர்களிடமிருந்தும் தெரிந்து கொண்டேன். பணியாளர்கள் ஒருவித மெல்லிய கண்ணுக்குத் தெரியாத ஒத்துழையாமையை வெளிப்படுத்துவர். நான் அதை கூர்ந்து நோக்கினேன். அதில் இருப்பது வேலை செய்வதன் மந்தம் மட்டுமல்ல. மனிதர்களுக்கு ஒரு குறிப்புக்கு முழுமையாக உட்படாமல் இருப்பதில் சிறு இன்பம் இருக்கிறது. அதற்காகவே அதனைச் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். எப்போது அந்த பார்வை கவனம் பார்ப்பவரிடம் ஏற்பட்டு விடுகிறதோ அதன் பின் அவர் அந்த ஒத்துழையாமையை எளிதில் செயலற்றதாக்கி விடுவார். 99 சதவீதம் மனிதர்கள் தாங்கள் எதைப் பழகியிருக்கிறார்களோ அதையே திரும்பத் திரும்ப செய்வார்கள். ஒருவர் தன்னை மாற்றிக் கொள்வது என்பதும் மேம்படுத்திக் கொள்வது என்பதும் மிகவும் அபூர்வமானது. அக புறத் தடைகளை விளக்கி தன்னைக் கூர்ந்து கவனிப்பவருக்கே அது சாத்தியம். ஒரு பணியாளன் இரண்டு நாள் செய்யும் வேலையை மூன்று நாளாக்க முயல்வான். ஒரு நாள் கூடுதல் ஊதியத்துக்காக என்று மட்டும் அதனைச் சொல்ல முடியாது. அதைத் தாண்டி வேறு விஷயங்களும் அதில் உண்டு. நாம் ஒரு திட்டத்தை உருவாக்கி அதனை முன்வைத்தால் அது நாம் திட்டமிட்ட வண்ணம் நிகழ்ந்து விடக்கூடாது என பணியாளர் மனத்தில் ஒரு எண்ணம் உண்டாகிவிடும். அவ்வாறு உருவாகும் எண்ணமே அந்த திட்டத்துக்கு சிறுதடையாய் வந்து சேரும். இவை எவையும் கண்ணுக்குத் தெரியும் வகையில் பொருட்படுத்தத்தக்க அளவில் இருக்காது. சிறு அளவில் இருக்கும். இருப்பினும் சமயத்தில் எதிர்பாரா சிக்கல்களை ஏற்படுத்தும். உறுதியாக இருந்து அவற்றைக் கடந்து வர வேண்டும்.