சொல்லில் உறையும் தன்மை கொண்டது இறைமை என்கின்றன உலகின் தொல்நம்பிக்கைகள். சொல்லால் உலகங்களை உருவாக்குகிறான் கவிஞன். சொல்லில் இருந்து உருவாகிறது உணர்ச்சி. உணர்ச்சியின் உணர்ச்சிகளின் வசமாகின்றனர் மானுடர். அமைதியும் அலைபாய்தலும் மானுட வாழ்க்கையில் அந்த உணர்ச்சியின் விளைவுகளே. அண்டத்தின் ஆதிசொல் ஒற்றை ஒலி. அந்த ஒலியின் வெவ்வேறு உச்சரிப்புகளே அனாதிகாலமாக ஆயிரமாயிரம் ஆண்டாக நிகழும் மானுட வாழ்க்கை.
***
குர் அதுல் ஐன் ஹைதரின் ‘’அக்னி நதி’’ நாவலில் ஒரு கதாபாத்திரம் இவ்விதம் கூறும். ‘’நான் கலைஞன் ; மனதின் சங்கேதங்களையும் குறிப்புகளையும் துணையாகக் கொண்டு கலையைப் படைப்பவன். விஸ்வகர்மாவே ஆனாலும் என்னை மதித்துத் தான் தீர வேண்டும்’’.
எமக்குத் தொழில் கவிதை என்கிறான் தமிழ் மூதாதை பாரதி.
படைப்பதனால் என் பெயர் இறைவன் என்பது கண்ணதாசனின் வரி.
***
உலகின் ஆகப் பெரிய படைப்பாளிகள் பலருக்கு தங்கள் கலையும் படைப்பும் எவ்விதம் மக்களால் சமூகத்தால் உள்வாங்கப்படுகிறது என்னும் அவதானம் நுண்ணினும் நுண்ணியதாக இருந்திருக்கிறது. கவிஞன் மொழியின் பெருங்கடல். அவன் கடலின் அலைகளே மானுட வாழ்க்கை. தன் படைப்பின் சில கணங்களேனும் அவன் மண்ணில் இருந்து எழுந்து எழுந்து உயர்ந்து உயர்ந்து இறைமை உறையும் விண்ணிலிருந்து சிறு துகள்களென ஒட்டு மொத்த மண்ணுலகையும் கண்டிருப்பான். இருப்பினும் தன் படைப்பை சரியாக உள்வாங்காத சரியாக புரிந்து கொள்ளாத தருணங்களில் அவன் உணர்ச்சிகரமாகக் கொந்தளிக்கிறான். அந்த சூழலையும் தருணத்தையும் மௌனமாக அமைதியாகக் கடந்து சென்றவர்கள் உண்டு. உணர்ச்சிகரமாக எதிர்வினையாற்றியவர்களும் உண்டு.
ஷீரசாத் உலகின் மிகப் பெரிய கதைசொல்லிகளில் ஒருவர். ஆயிரம் இரவுகளும் மற்றும் ஒரு இரவும் கதைசொல்கிறாள். எனினும் அவள் கதை சொல்லும் தருணம் மரணத்தின் விளிம்பு. சிக்கலான அந்த மரணத்தின் விளிம்பில் நின்றவாறு சொல் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கதை சொல்கிறாள். மரணத்தை வெல்கிறாள்.
உலகின் மிகப் பெரிய காவியம் பாட முடிவெடுக்கிறான் கிருஷ்ண துவைபாயனன். ஆனைமுகன் அவன் சொற்களை ஓலையில் பதிக்க அவன் முன் வந்தமர்கிறான். தனது கவிப்பாய்ச்சலை எந்த இடத்திலும் மட்டுப் படுத்தக் கூடாது என்கிறான் கிருஷ்ண துவைபாயனன். அக்கணமே தன் அழகிய தந்தம் ஒன்றை பாதியாக உடைத்து காவிய ஆசிரியனின் சொற்களை எழுத்தாக்கத் தொடங்குகிறான் கணபதி.
படைப்பை சரியாக உள்வாங்கிக் கொள்வதும் சிந்தனையில் சரியான இடத்தில் பொருத்திக் கொள்வதும் அவ்விதம் நிகழாமல் போவதும் உலகத்தில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கவே செய்கிறது.
கதைகள் குறித்த படைப்பாளிகள் குறித்த கதைகளில் குணாட்யரின் கதை மறக்க முடியாதது ; நெஞ்சை உருக்குவது.
***
நம் நாட்டின் பெரும் சொத்து சோமதேவரின் ‘’கதா சரித் சாகர்’’. அதில் கதா சரித் சாகர் எழுதப்பட்ட கதையென குணாட்யரின் கதை வருகிறது. பின்னர் குணாட்யரின் கதை விதவிதமாக எழுதப் பெற்றிருக்கிறது. எல்லா விதமான கற்பனைகளுக்கும் சாத்தியங்களும் இடமளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது குணாட்யரின் வாழ்வும் படைப்பும்.
சாதவாகன தேசத்தின் தலைநகரான சுப்பிரதிஷ்டா நகரின் அரசன் மகிழ்ந்திருக்கும் தருணம் ஒன்றில் அவனது அரசி ‘’மன்னா போதும்’’ என சமஸ்கிருதத்தில் சொல்கிறாள். அம்மொழியில் அதற்கு ‘’பட்சணங்கள் வேண்டும்’’ என இன்னொரு அர்த்தமும் உண்டு. அவன் அவ்விதமாகப் புரிந்து கொண்டு பட்சணங்கள் கொண்டு வர ஆணையிடுகிறான். அனைவரும் நகைக்கின்றனர். மிக அவமானமாக உணர்ந்த தான் இலக்கணம் கற்க வேண்டும் என்கிறான். குறைந்தது 12 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். ஒரு ஆசிரியர் அவனுக்கு ஓராண்டில் இலக்கணம் கற்பிக்கிறார். அவமானம் என்னும் எதிர்மறை உணர்வால் உந்தப்பட்டு இலக்கணம் கற்றுக் கொண்ட அரசனுக்கு படைப்பின் மொழியின் உயிர்த்தன்மையை உணரும் புலன்கள் அவன் கற்ற இலக்கணம் மூலம் அவனுக்குக் கிடைக்கவில்லை. ஜீவன் கொண்ட படைப்பை அவனால் அடையாளம் காண முடியாமல் போகிறது. மேலும் காலத்தை வெல்லும் இயல்பு கொண்ட படைப்புகளை எதிர்மறையாக நிராகரிக்கச் செய்கிறான். மன்னனின் இயல்பு உணர்ந்த குணாட்யர் அரசவையிலிருந்து வெளியேறுகிறார். விந்திய மலையில் 12 ஆண்டுகள் முழு மௌனத்தில் தன்னை ஆழ்த்திக் கொள்கிறார். அவர் சீடர்கள் அனைவரும் அவர் காலடியில் அமர்ந்து அவர் ஏதேனும் உரைப்பாரா என்று காத்திருக்கின்றனர். குணாட்யர் நீங்கிய அவை மேன்மை குன்றுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பின் வேள்வித்தீ வளர்க்கக் கூறி தனது படைப்பின் ஏழு தொகுதிகளையும் அதில் வீச முடிவெடுத்து ஒவ்வொரு தொகுதியாக அதில் வீசுகிறார். ஏழாவது தொகுதியுடன் தானே வேள்வித்தீக்கு ஆகுதி ஆகிறார். அந்தக் கணத்தில் மனம் மாறி தனது ஏழாவது தொகுதியை மட்டும் தீக்கு வெளியே எறிகிறார். சீடர்கள் கண்ணீருடன் அதனை எடுத்துக் கொள்கின்றனர். குணாட்யரின் படைப்பாக அது மட்டும் எஞ்சுகிறது. குணாட்யர் இறப்பு குறித்து அறிந்து நாடே துயரம் கொள்கிறது. சாதவாகன அரசி குணாட்யர் மறைந்த இடத்துக்கு வந்து வணங்கி அவருக்கு ஒரு ஆலயம் எழுப்புகிறாள்.
***
ரா.ஸ்ரீ.தேசிகன் சக கமனம் என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.
தமிழின் சிறந்த சிறுகதைகளில் ’’சக கமனம்’’ ஒன்று. சிறுகதையின் ஒவ்வொரு சொல்லும் மிகத் தேர்ந்தெடுக்கப்பட்டவையும் மிக உணர்ச்சிகரமானவையும் ஆகும். படைப்பூக்கத்தின் உச்சத்தில் திளைக்கும் நிலையிலேயே இவ்விதமான கதையை எழுத முடியும். அந்த சிறுகதையின் சிறப்பான வரிகள் என அடையாளம் காட்ட வேண்டுமெனில் ஒட்டு மொத்த சிறுகதையின் வரிகளையும் காட்ட வேண்டியிருக்கும்.
சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் மேல் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய கதை ‘’சக கமனம்’’.
***