Friday, 26 December 2025

வாணியின் மாணவி

 
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் கல்லூரி மாணவனாக இருந்த போது இந்த புவிக்கு வந்த குழவி என் நண்பரின் மகள். அவள் பிறந்த அன்றைய தினத்திலேயே அவளை கைகளில் ஏந்தியிருக்கிறேன். அவள் மழலை பேசிய நாட்களும் புத்தகப்பை சுமந்து பள்ளி சென்ற நாட்களும் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. பள்ளி நாட்களில் அவள் பயில வேண்டிய பள்ளி எது எனத் தீர்மானிப்பதில் அவள் பெற்றோருடன் எனக்கும் சிறு பங்கு இருந்திருக்கிறது. அவள் பட்டயக் கணக்காளராக ஆக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. அவள் தந்தைக்கும் அதே எண்ணம் இருந்தது. அவள் தனது இளநிலைப் படிப்பாக பி.காம் பயின்றாள். தற்போது கம்பெனி செகரட்ரிஷிப் படித்து வருகிறாள். அவள் பள்ளி மாணவியாக இருந்த போது அவளுக்கு எவ்விதம் புத்தகங்களின் உலகுடன் பரிச்சயம் ஏற்படுத்துவது என்பது குறித்து அவள் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவளுடைய தந்தை இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவளது அன்னை ஒரு பள்ளி ஆசிரியை. 

கடந்த ஓராண்டு காலமாக நண்பரின் மகள் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறாள். சிறுகதைகள் மேல் பேரார்வம் கொண்டிருக்கிறாள். தொடர்ந்து வாசிப்பதால் இலக்கிய வாசகர்களுக்குரிய நுண்ணுணர்வுகளை அடைந்திருக்கிறாள். வாழ்வின் நுட்பங்களை உணரும் உணர்கொம்புகள் அவள் வசமாகியிருக்கின்றன என்பதை அவளுடன் உரையாடுகையில் அறிந்தேன். 

இப்போதும் அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவளை சிறு குழவியாய் பார்த்ததே நினைவில் தோன்றுகிறது. கவிதை, நாவல், அ-புனைவுகள், மரபிலக்கியம் ஆகியவையும் வாசிக்குமாறு அவளிடம் சொன்னேன். 

அவளுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவள் கலைத்தாயின் மாணவி என ஒரு கணம் தோன்றியது.