நூல் : அன்றாடயோகி ஆசிரியர் : ஹெச். எஸ். சிவபிரகாஷ் மொழிபெயர்ப்பு : சுபஸ்ரீ சுந்தரம் பக்கம் : 176 விலை : ரூ.240 பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், 1/28, நேரு நகர், கஸ்தூரிநாயக்கன் பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர், 641041.
மானுட உயிர்கள் எளியவை. அவை அனாதிகாலமாக பிறந்து வாழ்ந்து மடிகின்றன. கோடானுகோடி மானுட உயிர்களில் ஒரு சிலரே ‘’நான் யார்?’’ என்ற வினாவை எழுப்பிக் கொண்டு அதற்கான பதிலைக் கண்டடைந்தனர். அவ்விதமானவரே ‘’குரு’’ எனப்படுகின்றனர். குருவைக் காணும் குருவின் மொழிகளைக் கேட்கும் மானுடர்க்கு குரு அடைந்த நிலைக்கு தாங்களும் செல்ல வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது. அந்த ஆவல் கோடானுகோடி பேருக்கு காலங்காலமாக ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. பெரும் சமுத்திரமெனப் பரந்து கிடக்கும் குரு சைதன்யத்திலிருந்து சில அருள் துளிகளை மானுடர் பெறுகின்றனர். தன் முழு ஞானத்தையும் தன் முழு அனுபவத்தையும் அப்படியே வழங்க குரு உளம் கொண்டிருந்தாலும் நாடிச் செல்லும் மானுடனுக்கு அதைப் பெற்றுக் கொள்ளும் பக்குவம் தேவைப்படுகிறது. அந்த பக்குவத்தை பெறுவதற்கான வழியைக் காட்டுகிறார் குரு. அந்த மார்க்கத்தில் முன்னேறிச் செல்ல அனேக ஜென்மங்கள் தேவைப்படுகின்றன மானுடருக்கு.
தாயின் கருவறையிலிருந்து மண்ணுக்கு வரும் குழவி கத்தியழுது தனது இருப்பைத் தெரிவிக்கிறது. கத்தியழும் குழவி தாயின் ஸ்பரிசத்தால் அமைதி கொள்கிறது. அழுகையும் அமைதியும் துன்பமும் இன்பமும் துக்கமும் சுகமும் பின்னர் வாழ்நாள் முழுக்க மாறி மாறி வாய்க்கப் பெறுகின்றன. இதற்கெல்லாம் என்ன அர்த்தம் இதெல்லாம் என்ன என்னும் கேள்வி எழும்பாத மானுடர் இல்லை. தனக்குள் எழுந்த கேள்விக்கான விடையே தெரியாமல் வாழ்நாள் கணக்கு தீர்ந்தவர்களே கணக்கற்றோர். அடிப்படைக் கேள்விகள் அனைவருக்கும் பொதுவாக இருந்தாலும் உலகின் புவியியல் சார்ந்து உலகின் மானுடர்களின் பழக்கவழக்கங்கள் சார்ந்து உலகின் எல்லா பகுதிகளிலும் வெவ்வேறு சமயங்கள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள், அறிவுத்துறைகள் உருவாகி வந்து மானுட ஞானத்தில் தீவிரமாக தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கின்றன. அவை மானுட வாழ்வை மேம்படுத்தியும் அவை மானுடர்களுக்குள் மோதலும் வன்முறையும் உருவாகக் காரணமாக அமைந்ததும் இணையாகவே நடந்து வந்திருக்கின்றன என்பதை மானுட வரலாற்றைக் கவனிக்கும் போது அறிய முடியும்.
கன்னட இலக்கியப் படைப்பாளியான ஹெச். எஸ். சிவபிரகாஷ் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே பல வகையான ஆன்மீக மரபுகளின் மாணவனாகிறார். வீர சைவ மரபில் பிறந்த அவர் தனது 11 வது வயதிலிருந்தே லிங்காயத்துகளின் வழக்கமான சிவ பூஜையில் ஈடுபடுகிறார். அவரது அன்னை தீவிரமான சிவபக்தை. கலைஞரும் படைப்பாளியுமான அவரது தந்தையும் சிவபக்தர். படைப்பூக்கம் கொண்டவர்கள் கொள்ளும் அதீதமான உணர்வுநிலை அவருடைய தந்தையை வன்முறைக்கு இட்டுச் சென்று தனது மனைவி மேல் எப்போதும் பெருங்கோபம் கொள்ளச் செய்கிறது. அக்கோபம் தனது மனைவியை தாக்கும் நிலைக்கு பலமுறை இட்டுச் செல்கிறது. சிறுவனாக இருந்து அதனைக் காணும் சிவபிரகாஷ் இந்த நிகழ்வுகளால் வகுக்க முடியாத உளக்குழப்பங்களுக்கு ஆளாகிறார். சாதகமற்ற அமைதியற்ற சூழ்நிலையிலும் உள்ளம் உருக திருவாசகம் பாடி தன்னையும் சூழலையும் அமைதியால் நிறைத்துக் கொள்ளும் தனது அன்னையின் சித்திரத்தை தன் நூலில் தீட்டிக் காட்டுகிறார் சிவபிரகாஷ். சிவபிரகாஷின் அன்னையை புற்றுநோய் தாக்குகிறது. தனது 18வது வயதில் அன்னையை இழக்கிறார் சிவபிரகாஷ். அந்நிலையில் பல ஆன்மீக வழிமுறைகள் அறிமுகமாகின்றன. அவர் சந்திக்கும் ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு விதத்தில் அவரது அறியாமையை நீக்குகின்றனர். ஒரு குரு ‘’நாத்திகமும் ஆத்திகமும் நம்பிக்கைகளே. நீ ஆத்திகன் என எண்ணினால் நாத்திகமும் பயில்’’ எனக் கூறி கார்ல் மார்க்ஸ்ஸின் கம்யூனிஸம் படி என்கிறார். இயல்பிலேயே படைப்பூக்கமும் கலை மனமும் கொண்ட சிவபிரகாஷ் புனைவிலக்கியமும் அ-புனைவுகளும் மிகத் தீவிரமாக வாசிக்கத் தொடங்குகிறார். யோகாசனங்கள் கற்றுக் கொள்கிறார். மூச்சுப் பயிற்சிகள் கற்றுக் கொண்டு பிராணாயாமம் செய்யத் தொடங்குகிறார். மந்திர தீட்சை பெற்று மந்திர உச்சாடனம் செய்கிறார். அவருடைய அக வாழ்விலும் புற வாழ்விலும் பெரும் கொந்தளிப்புகள் ஏற்படுகின்றன. யோகப் பயிற்சிகளில் சில முன்னேற்றங்களும் அடைகிறார் சிவபிரகாஷ். வீரசைவ மடங்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், தேரவாத பௌத்தம், பிகார் யோகப் பள்ளி, சூஃபி துறவிகள், கிருஸ்தவம் என தான் வாழ்வில் சந்திக்கும் எல்லா மார்க்கங்களிலும் நீண்ட நாட்கள் ஈடுபட்டு பயணிக்கிறார் சிவபிரகாஷ். வாழ்வை மிக நுட்பமாக மிக மென்மையாக அணுகும் உபகரணங்கள் அவருக்கு கிடைக்கப் பெறுகின்றன எனினும் சாமானிய வாழ்க்கையில் நினைத்தே பார்க்க முடியாத விதவிதமான துயரங்களும் அவரைச் சூழ்கின்றன. அவரது வாழ்க்கையின் மிகப் பெரும்பாலான நாட்களில் அவருக்கு இந்த அலைக்கழிப்பு இருந்திருக்கிறது. தன் சொந்த அனுபவத்தை நிமித்தமாகக் கொண்டும் வாழ்க்கை குறித்த கேள்விகளை தனது குருக்களிடம் எழுப்பி அவர்களின் பதில்களைப் பெறுகிறார். நெருக்கடியான தருணங்களிலும் தான் குருவருளால் காக்கப்படுவதை சிவபிரகாஷ் உணர்ந்து கொள்கிறார். தனக்கான மார்க்கம் எது என்பது அவருக்கு புலப்படுகிறது.
யோக வழிமுறை மிக சூட்சுமமானது. அதனை சொற்களால் கூற முடியும். யோகியர் தம் அனுபவங்களை அவ்விதம் கூறியிருக்கின்றனர். எனினும் யோக வழிமுறையை சொற்களால் புரிந்து கொள்வது என்பது இயலக் கூடியதல்ல. பயிற்சியே யோகத்தை உணர ஒரே வழி. பயிற்சியை உறுதியாகப் பற்றி முன்னேறிச் செல்வது என்பது பெரும் நெஞ்சுரம் தேவைப்படும் மகத்தான பயணம். அடைபவை இழப்பவை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நிகழ்த்த வேண்டிய பயணம். சிவபிரகாஷ் கலைஞனுக்கேயுரிய அகத்துடன் கலைஞனக்குரிய தரிசனத்துடன் யோக வழிமுறை குறித்தும் ஆன்மீகம் குறித்தும் பேசியிருக்கும் நூல் ‘’அன்றாடயோகி’’. கற்பனையைத் துணையாகக் கொண்ட இலக்கிய வாசகர்கள் இந்நூலின் மூலம் நீண்ட தூரம் செல்ல முடியும். யோகப் பயிற்சி செய்பவர்கள் சக மாணவனின் அனுபவங்களாக இந்த நூலை உள்வாங்கிக் கொள்ள முடியும்.