Monday, 8 December 2025

ஆலயக்கலை - உணர்தலும் அறிதலும்

விண்ணின் ஒரு துளி மண்ணுலகம். ஆழி சூழ்ந்த உலகில் நிலத்தில் வாழ்கின்றனர் மானுடர் அனாதி காலமாக. உலகில் நிலத்தில் உயிரினங்கள் கோடி கோடி. அதில் ஓர் எளிய உயிர் மானுட இனம். யாவையும் படைத்த இறைமை மானுட இனத்துக்கு சிந்தனையை அளித்தது. உயிர்கள் அனைத்துக்கும் இருந்த தடைகள் மானுடத்துக்கும் இருந்தாலும் அந்த தடைகளைத் தாண்டிச் சென்று தானே படைப்பும் படைத்தவனும் என்னும் இரண்டற்ற நிலை நோக்கி சென்றனர் மானுடர் சிலரினும் சிலர்.  விரல்களால் எண்ணக்கூடிய அளவில் அந்த தூய உயிர்களின் எண்ணிக்கை இருந்தாலும் கோடானுகோடி மானிடர் அந்த தூய உயிர்களின் முன் வாழ்வுடன் எப்போதும் இணைந்திருக்கும் துயர் நீக்கக் கோரி துயர் நீக்கும் மார்க்கம் கோரி அரற்றி நின்றனர். மண்ணுலகில் எங்கெங்கோ உற்பத்தி ஆகும் நதிகள் அனைத்தும் இறுதியில் ஆழியை அடைவது போல துயருற்ற மானுடருக்கு மார்க்கங்கள் பலவற்றை போதித்தனர் தூயோர். 

மண்ணுலகுக்குத் திலகம் என்று கூறத்தக்க நிலமொன்று தெற்கே இருக்கும் பெருங்கடல் ஒன்றனுக்கும் வடக்கே இருக்கும் பெருமலை ஒன்றனுக்கும் இடையே இருக்கிறது. அந்த நிலத்தில் தூயோர் பிறந்து மானுடம் உய்ய வழிமுறைகளைக் கூறிக் கொண்டேயிருந்தனர். நிலைபெயராமையை தன் தவத்தின் பயனென அடைந்த துருவன், சொல்லறுத்து சும்மா இருந்து தன் சீடர்களுக்கு விடுதலையின் வழியே மௌனம் எனக் காட்டிய ஆலமர்ச்செல்வன், செயல் புரிதலும் இமைப்பொழுதும் சோராமல் செயல்புரிதலுமே வீடுபேறு என உணர்த்திய இளைய யாதவனும் தன்னுடன் இணைந்து வாழும் எல்லா சக உயிர்கள் மீதும் அன்பும் கருணையும் உணரச் சொன்ன அருக தேவனும் தன் அன்பால் அருளால் பிறந்த பிறக்கும் பிறக்க இருக்கும் எல்லா உயிர்களையும் அணைத்துக் கொண்ட புத்தனும் மண்ணுலகுக்குத் திலகமாயிருந்த தேசத்தில் உதித்தார்கள். இந்த மண்ணில் தோன்றிய ஒரு துறவி ‘’மலைமகள் என் அன்னை ; ஈஸ்வரன் என் தந்தை ; அம்மையப்பனின் குழந்தைகளான எல்லா உயிர்களும் உறவினர்கள் ; இந்த உலகமே எனது தாய்நாடு’’ என்றான். ‘’சிறந்தவை உலகில் எங்கிருந்தாலும் அதனை நாடி ஏற்க வேண்டும் ‘’ என்றது இந்த நாட்டின் தொல்பழம் பாடல் ஒன்று. ’’எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கட்டும்’’ என இறைமையிடம் வேண்டிக் கொண்டது இந்நாட்டின் தொல்நூல் ஒன்று. 

வாழ்க்கை புனிதமானது ; யாவுமே புனிதமானவை என உணர்ந்திருந்த இந்த தேசம் மலையை, நதியை, மரத்தை, பறவையை, பிராணியை என அனைத்தையும் இறைமையின் சொரூபமாக இருப்பதைக் காணச் சொன்னது. கடவுளின் குழந்தைகளாய் தங்களை உணர்ந்த மக்கள் ஆடிப் பாடிக் கூடிக் களித்திருந்தனர். உயர்ந்த இசையை இறையை நோக்கி பாடினர். இறைமையின் ஒத்திசைவை தங்கள் நடனத்தில் நிகழ்த்திக் காட்டி தாங்களும் மகிழ்ந்து இறைமையையும் மகிழ்வித்தனர். இறைமையை தங்கள் பெற்றோராக ஆசிரியராக குழந்தையாக எண்ணி உருவமற்ற இறைக்கு தங்கள் அன்பினால் உருவம் அளித்து அதில் இறையை எழுந்தருளச் செய்தனர். அவர்கள் நட்டு வைத்த கல்லில் தெய்வம் எழுந்தருளியது. அவர்கள் சுற்றி நின்று வணங்கிய மரத்தில் தெய்வம் எழுந்தருளியது. அவர்கள் வணங்கிய நதியில் தெய்வம் எழுந்தருளியது. 

***

பாரத தேசத்தில் ஆலயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இறைவன் யாதுமாகி நிற்பவன் என உணர்ந்திருந்தாலும் இறைவனைத் தாங்கள் அமைக்கும் உருவத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். உலகில் விதவிதமான ஜீவராசிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைந்திருப்பது போலவும் சேர்ந்திருப்பது போலவும் பாடல், கவிதை, ஓவியம், சிற்பம், இசை என கலைகள் பலவற்றை இணைத்து சேர்த்து ஆலயம் அமைக்கும் தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு அளித்து இன்று வரை தொடரச் செய்திருக்கின்றனர் இத்தேசத்தின் மூதாதையர். 

***

டிசம்பர் 5,6,7 ஆகிய தேதிகளில் ஈரோடு அந்தியூர் அருகில் இருக்கும் வெள்ளிமலையில் ‘’முழுமையறிவு’’ அமைப்பு ஒருங்கிணைத்த பிரஸ்தாரா அமைப்பின் நிறுவனர் ஜெயகுமார் வகுப்பெடுத்த ஆலயக்கலை வகுப்பில் பங்கு பெற்றேன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் ஆலயக்கலை என்பது ஒட்டுமொத்த மானுடமும் சாதித்த பெரும் சாதனைகளுள் ஒன்று என்பதை பங்கேற்பாளர்கள் உணரும் வகையில் அதன் விரிவை ஆழத்தை எடுத்துக் காட்டினார் ஜெயகுமார். 

நம் நாட்டின் ஆலயக்கலை பல்வேறு விதமான அழிவு சக்திகளின் அழிவுப் பணியை எதிர்கொண்டிருக்கிறது. மானுடத்தின் மகத்தான கலைப் படைப்புகளான ஆலயங்களை நாடெங்கும் இடித்து தரைமட்டமாக்கினர் அன்னிய ஆட்சியாளர்கள். கல்லை சிற்பமாக்கி அதனை உயிர் பெறச் செய்து வணங்கிக் கொண்டிருந்த மக்கள் தங்கள் தெய்வம் உடைத்து நொறுக்கப்பட்டாலும் அகத்தில் தங்கள் சொல்லில் இறைவனை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து இருக்கச் செய்து நிலைநிறுத்திக் கொண்டனர். எப்போதெல்லாம் மீண்டும் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம்  இடிக்கப்பட்ட ஆலயங்களை மீண்டும்  நிர்மாணித்துக் கொண்டனர். 

மானுடத்தின் மகத்தான உருவாக்கங்களில் ஒன்றான பாரத ஆலயக்கலை மேலும் வளர உயிர்ப்புடன் இருக்க புதிய ஆலயங்கள் மரபான முறையில் தொடர்ந்து எழுப்பப்படுவது அவசியம் என்னும் தனது அபிப்ராயத்தை முன்வைத்தார் ஜெயகுமார். அந்த கோணம் மிகவும் முக்கியமானது என்று எனக்குப் பட்டது. மரபான ஒரு முறை பாதுகாக்கப்பட அந்த முறை அதன் மரபான வடிவில் முறையில் தொடர்வது மிகவும் முக்கியமானது. ஆலயக்கலை என்பது சமயம், இசை, நடனம், சிற்பம் என பல விஷயங்கள் இணைந்த ஒன்றாக இருப்பதால் ஒரே சமயத்தில் ஒரு ஆலயத்தில் இத்தனை விஷயங்களும் புரக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை எடுத்துக் காட்டினார் ஜெயகுமார். 

இந்த விஷயத்தின் இன்னொரு பக்கமாக ஆலயத்துக்குச் செல்பவர்கள் ஆலயத்தின் கலை, நுண்கலை, வரலாறு, இலக்கியம் குறித்தும் அறிந்திருப்பது ஆலயக்கலை மரபு தொடர அடிப்படையானது ; முக்கியமானது என்னும் விதத்தில் மேலே குறிப்பிட்ட கலை, நுண்கலை, வரலாறு, இலக்கியம் ஆகியவை குறித்து மிக விரிவாக அறிமுகம் செய்தார் ஜெயகுமார். புதிய ஆலயங்கள் நிர்மாணிக்கப்படும் வேகத்தினும் மிகப் பல மடங்கு வேகத்தில் நாட்டின் குடிகளுக்கு ஆலயக்கலை குறித்த அறிமுகம் நிகழ்த்தப்பட வேண்டும் என்னும் அடிப்படையில் இந்த மகத்துவம் மிக்க பணிக்காக தனது உழைப்பையும் நேரத்தையும் நல்கும் ஜெயகுமாரின் பணி போற்றுதலுக்குரியது. 

***

’’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ’’ என்று அரற்றினான் தமிழ் மூதாதை பாரதி. இன்று தமிழகத்தில் ஆலயக்கலை என்பது அவ்விதமான தன்மையிலேயே இருக்கிறது. தமிழ்க் குடிகள் எவருக்கும் தங்கள் மரபான கலையான ஆலயக்கலை குறித்த எந்த அறிமுகமோ கல்வியோ இல்லை. தமிழக பள்ளிக் கூடங்களிலோ கல்லூரிகளிலோ பாடத்திட்டத்தில் ஆலயக்கலைக்கு இடமே இல்லை. இந்நிலையில் நமது மரபான ஆலயக்கலை காக்கப்பட வேண்டும் குறைந்தபட்சம் ஆலயம் மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் சாமானிய மக்களுக்கு இமைப் பொழுதும் சோராது எடுத்துரைத்துக் கொண்டிருந்தாலே சாத்தியம். 

தமிழக ஆலயக்கலையை மூன்று நாள் வகுப்பில் மிக விரிவாக எடுத்துரைத்தார் ஜெயகுமார். பல்லவர் கால ஆலயக் கட்டுமானங்களையும் பாண்டியர் கால ஆலயக் கட்டுமானங்களையும் குறித்து மிக விரிவாக எடுத்துரைத்தது சிறப்பான விஷயம். அந்த இரு காலகட்டங்களே தமிழக ஆலயக்கலைக்கு அடிக்கட்டுமானமாக இருந்தவை. இந்த இரண்டு அரசுகளும் 300 ஆண்டுகளாக உருவாக்கியிருந்த ஆலய மரபினை அடிப்படையாகவும் அடிப்படை அறிதலாகவும் கொண்டு சோழர்கள் தங்கள் ஆலயக்கலை செயல்பாடுகளை முன்னெடுத்தனர் என்னும் வரலாற்றுப் புரிதலை பங்கேற்பாளர்களிடம் உருவாக்கினார் ஜெயகுமார். 

கணபதி ஸ்தபதி, ஐராவதம் மகாதேவன், நாகசாமி, நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் என பலர் எழுதிய நூல்களை ஆலயக்கலையைப் புரிந்து கொள்ள உதவும் புத்தகங்கள் என்பதை விரிவான பட்டியலாக அளித்துக் கொண்டேயிருந்தது ஆலயக்கலை என்பது எத்தனை பிரும்மாண்டமானது என்பதை உணர்த்தியது. 

ஆலயத்துக்கு வழிபடச் செல்லும் ஒருவராயினும், ஓவியம் வரையும் திறன் கொண்ட நுண்கலையாளராயினும் இலக்கியம் வாசிக்கும் இலக்கிய வாசகராயினும் அனைவருக்குமே ஆலயங்களைப் பராமரிக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது என்பதை மிக மென்மையாக சுட்டுக் காட்டினார். மூன்று நாள் வகுப்பில் ஆலய ஆகம முறைகள், சிற்பவியல், ஆலய கட்டிடவியல் குறித்து பங்கேற்பாளர்களுக்கு மிக விரிவான அறிமுகத்தை மிகப் பெரிய பரிச்சயத்தை உண்டாக்கினார் ஜெயகுமார். 

ஆலயக்கலை குறித்த பரந்து பட்ட ஞானம் கொண்டவராயினும் அறிமுக நிலையில் பங்கேற்பாளர் ஒவ்வொருவரையும் மிகுந்த பிரியத்துடன் மிக்க கனிவுடன் எதிர்கொண்டு 3 நாட்களில் பங்கேற்பாளர் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆலயக்கலையின் உன்னத தீபத்தை ஏந்திக் கொள்ள வாய்ப்பளித்த ஜெயகுமார் போற்றுதலுக்குரியவர் ; அவரது பணி போற்றுதலுக்குரியது.