Thursday, 1 January 2026

அடுத்த புத்தாண்டுக் கொண்டாட்டம்

 பழைய ஆண்டு முடிந்து விட்டது என்கிறார்கள்
செய்ய நினைத்த பணிகள் பல நிலுவையில் இருக்கின்றன
இன்னும் ஆற்றலை அதிகரித்துக் கொள்வதா
இன்னும் ஆழமாக உற்று நோக்குவதா
மாற்றம் மாற்றம் என்கிறது மனம்
மாற்றமின்மை மாற்றமின்மை என்கிறது உடல்
எனது அறையை
எனது பொருட்களை
எனது அன்றாடங்களை
நான் விரும்பும் விதத்தில் 
அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்
எத்தனை கூடுதலான முறைகளில்
அது அத்தனை எளிதல்ல
என அறிய முடியுமோ
அத்தனை அறிந்து கொள்கிறேன்
பழைய ஆண்டு முடிந்து 
புதிய ஆண்டு பிறந்திருக்கும்
இன்று
ஆண்டின் இறுதி வாரத்துக்கான
அடுத்த ஆண்டின் முதல் வாரத்துக்கான
விருப்பம் ஒன்றை
உருவாக்கிக் கொள்கிறேன்
எத்தனையோ புதிய ஆண்டுகள் வருகை தந்தன
அடுத்த புத்தாண்டை 
ஒரு வாரம் முன்பிருந்தே
மௌனம் உறைந்திருக்கும் மலைப்பிரதேசங்களிலோ
அலைகள் ஆர்ப்பரிக்கும் கடற்கரையிலோ
அந்தி நிலவின் அழகு மிளிறும் பாலை நிலத்திலோ
புதிய நிலத்தில்
புதிய மண்ணில் 
எதிர்கொள்ள 
விருப்பம் கொள்கிறேன்
என் லௌகிகங்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளாத
என் மானசீக என் நடைமுறைத் தடைகள் 
என்னைத் தளைக்காத
விடுதலை கொண்ட வாழ்வொன்றை
இந்த ஆண்டில் அடைய 
இந்த ஆண்டில் உருவாக்கிக் கொள்ள
உளம் கொள்கிறேன்
செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன
ஏற்க வேண்டிய பொறுப்புகள் நிறைய இருக்கின்றன
நம்பிக்கையுடன் தொடங்குகிறது ஆண்டுடனான பயணம்