பாரதம் எனது மண். பாரதம் எனது நிலம். பாரதம் எனது தேசம். உலகில் எந்த தேசமெல்லாம் ஒட்டுமொத்த புவியையும் தனது தேசமாக எண்ணுகிறதோ உலகில் எந்த தேசமெல்லாம் எல்லா தேசங்களின் குடிகளையும் தன் குடிகளாக எண்ணுகிறதோ எந்த தேசமெல்லாம் பிற நிலங்களில் வாழும் மானுட குடிகளைக் கொன்றழிக்காமல் இருக்கிறதோ அந்த தேசமெல்லாம் எனது தேசம். அந்த தேசமும் பாரதமே. பாரதம் எந்த தேசம் மீதும் படையெடுத்துச் சென்றதில்லை ; எந்த மக்களையும் கொன்று குவித்ததில்லை. எந்த நாட்டின் மானுடப் பண்பாட்டுச் சின்னங்களையும் அழித்தொழித்ததில்லை. படையெடுப்புகளால் உடனிருப்போர் கொலையுற்று ஆதரவற்று தங்கள் தேசத்தைத் துறந்து புகலிடம் நாடி வந்த எத்தனையோ சமூகங்களுக்கு பாரதம் தன் நிலத்தில் அவர்கள் பண்பாட்டு அடையாளங்களைப் பேணி வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதை உலக வரலாற்றை அறிந்தவர்கள் அறிவார்கள்.
பாரதம் என்பது பாரதப் பண்பாடே. பாரதப் பண்பாடு என்பது எல்லா சிந்தனைகளையும் வாழ்க்கைமுறைகளையும் உயிர்ப்புடன் இருக்கச் செய்வதே. ஒரு சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும் மற்றவை அழித்தொழிக்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் ஆபிரகாமிய சமூகங்களுக்கு உரியது. இன்றைக்கும் ஆபிரகாமிய சமூகங்களாக தங்களை எண்ணிக் கொள்பவர்கள் மானுட பண்பாட்டு அடையாளங்களை அழிக்கிறார்கள். 2500 ஆண்டு தொன்மை கொண்ட பாமியான் புத்தர் சிலைகள் பீரங்கிகள் கொண்டு தகர்க்கப்பட்டதை 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூட உலகம் பார்த்தது. இன்றும் வங்கதேசத்தில் அந்நாட்டின் சக குடிமக்கள் ஆபிரகாமிய சமூகத்தினரால் தாக்கப்படுகின்றனர். அவர்கள் வீடுகள் கொளுத்தப்படுகின்றன.
பாரதப் பண்பாட்டில் சனாதனம், சமணம், பௌத்தம், சாக்தம், சீக்கியம் ஆகியவை நாடெங்கும் பரஸ்பர மரியாதையுடன் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்றிருக்கின்றன. நம் நாட்டில் புகலிடம் தேடி வந்த யூதர்களும், ஜெராஸ்டிரியர்களும் கூட தங்கள் பண்பாடு வழக்கங்களின் படி வாழ்கிறார்கள்.
இயற்கையே இறைமையின் ஒரு வடிவம் என எண்ணுவது பாரதப் பண்பாடு. மானுட சமூகங்கள் அதனை உணரும் போது உலகில் வன்முறை இருக்காது ; அமைதி இருக்கும். உலகை அந்நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு பாரத மண்ணில் பிறந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.