--------------------------
எனது புத்தாண்டுத் தீர்மானங்களில்
பிரதான இடம் வகிப்பது
தேனீரைத் தவிர்த்தல்
பலமுறை தீர்மானித்து
சிலமுறை வென்று
பலமுறை தோற்றிருக்கிறேன்
காலை எழுந்தவுடன்
பத்து மணி என்னும் வங்கி நேரத் துவக்கத்தில்
பதினொன்று மணிக்கு
மாலை நான்கு மணிக்கு
மாலை ஆறு மணிக்கு
எவரையும் புதிதாக சந்தித்தால்
பழகிய எவரையும் கண்டால்
எவர் வீட்டுக்காவது சென்றால்
ஒரு புதிய ஊருக்குச் சென்றால்
தேனீர்
எங்குமே ஒரு மறுதுவக்கமாக
இருந்திருக்கிறது
சில ஆண்டுகள்
பல மாதங்கள்
தேனீர் அருந்தாமல் இருந்திருக்கிறேன்
அருந்த்தாமல் இருந்தது நினைவிருக்கிறது
எப்படி
மறுபடியும் அருந்தத் தொடங்கினேன்
என்பது நினைவில் இல்லை
நாளெல்லாம்
பொழுதெல்லாம்
தேனீர் அருந்துபவனல்ல
எனினும்
காலை எழுந்ததும்
மாலை தொடங்கியதும்
இருவேளை மட்டும்
தேனீரைத் தவிர்ப்பவனை
ஆர்வமாகவே பார்க்கின்றனர் அவைவரும்
அதே ஆர்வம்
எனக்கும் இருக்கிறது
இம்முறை எவ்விதம்
தவிர்க்க இருக்கிறேன் என
அதே ஆர்வம்
தேனீருக்கும்
இருக்கக் கூடும்