இன்று காலை திருவீழிமிழலை சென்றிருந்தேன். அவ்வூரின் ஆலயம் பேராலயம். ஊருக்குத் தெற்கே திருவாரூர் செல்லும் சாலையில் மங்கநல்லூர், கொல்லுமாங்குடி, பூந்தோட்டம், சன்னா நல்லூர் ஆகிய ஊர்களில் கிழக்கும் மேற்கும் செல்லக் கூடிய சாலைகள் ஆரூர் சாலையில் இணைந்து நாற்சந்தியை உருவாக்கும். மங்கநல்லூருக்கு மேற்கே சென்றால் ஆடுதுறை ; கிழக்கே சென்றால் தரங்கம்பாடி. கொல்லுமாங்குடிக்கு மேற்கே சென்றால் குடந்தை ; கிழக்கே சென்றால் காரைக்கால். பூந்தோட்டத்திற்கு மேற்கே நாச்சியார் கோவில். கிழக்கே நிரவி. சன்னாநல்லூருக்கு மேற்கே கும்பகோணம் கிழக்கே நாகூர். பழைய தஞ்சாவூர் கிராமங்கள் இவை. இந்த நான்கு சாலைகள் ஆங்காங்கே கிளைச் சாலைகள் வழியாக இணையும். பூந்தோட்டத்துக்கு மேற்கே சென்று திருவீழிமிழலையை அடைந்தேன். அந்த ஊரின் ஆலயம் மிகப் பெரும் பேராலயம். அந்த ஊரின் தடாகமும் மிகப் பெரியது. தடாகத்தில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தடாகத்தில் இடும் அவல்பொறியை உண்ண மீன்கள் துள்ளி வருவது பெரும் மகிழ்வையளிக்கிறது.
நம் மரபில் ஜீவராசிகளுக்கு உணவிடுவது என்பது இறைவனுக்கு உணவளிப்பது என்றே கருதப்படுகிறது. ‘’யாவர்க்கும் ஆவுக்கு ஒரு வாயுறை’’ என்பது திருமந்திரம். வட இந்தியாவில் பெரும் கடைவீதிகளில் பறவைச் சத்திரங்கள் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அங்கே பறவைகளுக்கு தானியங்களை இடுவர். நம் பிராந்தியத்திலும் அவ்விதம் ஆலயங்களில் பசு, கன்று, பறவைகள், மீன்கள் ஆகியவற்றுக்கு உணவிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யலாம். திருவீழிமிழலை தடாகத்தைக் கண்ட போது எனக்கு அந்த எண்ணம் ஏற்பட்டது. அந்த ஊரின் தடாகத்தை இன்னும் நல்ல விதமாகப் பராமரிக்கலாம். புதர்களை அகற்றி குளத்தின் சுவர்களில் திருவிளையாடல் ஓவியங்கள் வரைந்து சிறு பூங்கா போல் ஆக்கலாம். குஜராத் காந்தி நகரில் சபர்மதி நதிக்கரை அவ்விதம் அழகுடன் வடிவமைக்கப்பட்ட ஒன்று.
திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் இறைவன் படிக்காசு வழங்கிய தலம் திருவீழிமிழலை. எனது நண்பர் ஒருவர் நன்னிலம் அருகே நர்சரி அமைக்கும் விதமாக ஓர் இடத்தைப் பார்க்கக் கூறியிருந்தார். இரண்டு மூன்று இடங்களைப் பார்த்து வைத்திருந்தேன். மழைக்காலம் செல்லட்டும் தை பிறந்தால் வழி பிறக்கும் எனக் காத்திருந்தேன். இன்று நன்னிலம் பிராந்தியத்தில் சுற்றியதில் நர்சரிக்கு சிறப்பான இடமாக ஒன்று தேர்ந்தெடுத்து விடலாம் என்னும் நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்பட்டது.
திருவீழிமிழலையில் சென்னையிலிருந்து வந்த குழு ஒன்று சுந்தரர் பயணித்த மார்க்கத்தில் பயணித்துச் செல்கிறது. அவர்கள் குழுவில் இருந்த ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னிடம் அளவளாவினார். அவருக்கும் எனக்கும் ஒரே வயது. இருவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரே ஆண்டில் பொறியியல் படித்திருக்கிறோம். அவர் மின்னியல் மற்றும் மின்னணுவியல். நான் கட்டுமானம்.
அங்கிருந்து அன்னியூர் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருக்கும் ஆலயத்தில் வழிபட்டேன். அங்கே தலவிருட்சம் வன்னி மரம். அங்கு ஓர் இளைஞர் இருந்தார். அவர் விவசாயத்தில் பட்டம் பெற்றவர். அரசாங்க வேலைக்கான தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் ஏதேனும் ஓர் வங்கியை அணுகி ‘’முத்ரா கடன்’’ பெற்று நர்சரி ஆரம்பியுங்கள் என்று சொன்னேன். அவருக்கு மகிழ்ச்சி. தனக்கும் அவ்விதமான எண்ணம் இருக்கிறது என்று சொன்னார்.
அன்னியூரிலிருந்து கும்பகோணம் - காரைக்கால் சாலையைப் பிடித்து வந்து கொண்டிருந்தேன். ஒரு வீட்டு வாசலில் பெரிய பெரிய பழங்களாக எலுமிச்சைப் பழங்களை ஒரு தட்டில் வைத்து அதனை ஒரு ஸ்டூலின் மேல் சாலையோரத்தில் வைத்திருந்தார்கள். எலுமிச்சைப் பழங்கள் மிகப் பெரியவை. எனக்கு எலுமிச்சையின் ருசியும் வாசனையும் மிகவும் பிடிக்கும். வண்டியை நிறுத்தி 20 பழங்கள் வாங்கிக் கொண்டேன்.
‘’இருக்கறதுலயே பெரிய பழங்களா எடுத்துக்கிட்டீங்க சார்’’ என்றார் அந்த வீட்டின் பெண்மணி புன்னகையுடன்.
அந்த சாலையிலிருந்து ஆடுதுறை - தரங்கம்பாடி சாலையை அடைந்து மங்கநல்லூரி வந்து வடக்கே திரும்பி ஊர் வந்து சேர்ந்தேன்.