Saturday, 17 January 2026

பகவான் சுவாமிநாராயண்

 

நூல் : Bhagwan Swaminarayan ஆசிரியர் : Sadhu Mukundcharandas  பக்கம் : 112 விலை : ரூ.90 பதிப்பகம்: Swaminarayan Aksharpith, Shaibaug Road, Amadavad-4, Gujarat.

பொது யுகம் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உத்திரப் பிரதேசத்தில் அயோத்தி நகருக்கு அருகே ஒரு மகவு பிறக்கிறது. ‘’கனசியாம்’’ என பெயர் சூடி அம்மகவை அழைக்கின்றனர் அதன் பெற்றோர். அதன் பிறவிநூல் கண்ட ஒரு கணியர் அக்குழந்தை உலகுக்கு அறத்தின் பாதையை உணர்த்தும் தெய்வீக ஆசானாய் விளங்கும் எனக் கூறுகிறார். மிகச் சிறு வயதிலேயே நான்மறையையும் ஓதி உணர்கிறது அக்குழந்தை. அக்குழந்தையை ‘’நீலகண்ட்’’ என்றும் அழைக்கின்றனர்.  தனது 11-வது வயதில் கௌபீனம் மட்டுமே ஆடையாக உடுத்தி பாலயோகியாக நாடெங்கும் தனியாக அலையத் துவங்குகிறார். இமயத்தில் கடும் தவம் மேற்கொள்கிறார். கயிலை மலையையும் மானசரோவர் தடாகத்தையும் தரிசிக்கிறார். நேபாளத்தின் முக்திநாத்தில் தவம் மேற்கொள்கிறார். இரண்டரை மாதங்கள் உணவும் நீரும் அருந்தாமல் ஒற்றைக்காலில் நின்று மேற்கொள்ளும் தவம் மூலம் அஷ்டாங்க யோகத்தில் ஆழ்கிறார். இமயத்திலிருந்து நாட்டின் தென் எல்லையான கன்னியாகுமரிக்கு வருகிறார். அங்கிருந்து தேசத்தின் மேற்கு பகுதி வழியாக வடக்கு நோக்கி பயணித்து சௌராஷ்ட்ர நிலம் சென்று சேர்கிறார். இமயத்திலிருந்து கூர்ஜரம் வரை அவர் மேற்கொண்ட யாத்திரை ‘’கல்யாண யாத்திரை’’ எனப்படுகிறது. நாடெங்கும் நிறைய துறவிகளையும் யோகிகளையும் சந்தித்து அவர்களுடன் உரையாடி பயின்று ஒரு ஆசாரியானாக ஒளிரத் தொடங்குகிறார். சௌராஷ்ட்ராவில் ஒரு ஆலயத்தின் வாசலில் தியானத்தில் சுவாமி அமர்ந்து இருக்கையில் அருகிலிருந்த காட்டின் சிங்கம் ஒன்று கோயில் வாசலில் அவரைக் காண்கிறது. சுவாமி முன் சென்று அவர் கால்களை தன் நாவால் வருடி அவர் காலடியில் அமைதியாக அமர்ந்து கொள்கிறது. மிருகப் பிறவியின் அகத்திலும் அன்பை உணர வைக்கும் சக்தி சுவாமி தவத்துக்கு இருப்பதை அங்கிருந்த அனைவரும் உணர்கிறார்கள். சுவாமியை சுவாமி சகஜானந்த் என அழைக்கத் தொடங்குகின்றனர். சுவாமியிடம் சமூகத்தின் வெவ்வேறு பணிகளை மேற்கொள்ளும் பலர் சீடர்களாக இணைகிறார்கள். சுவாமி சகஜானந்த் ‘’பகவான் சுவாமிநாராயண்’’ என சீடர்களால் உணரப்படுகிறார். சுவாமிநாராயண் சம்பிரதாயம் இவ்விதம் உருவாகிறது. 

பாரதம் மற்றும் உலக நாடுகள் பலவற்றில் லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றும் சம்பிரதாயமாக சுவாமிநாராயண் சம்பிரதாயம் உள்ளது. ராமானுஜரை ஆதி ஆச்சாரியராக கொள்ளும் இந்த மரபு குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த பல சமூக சீர்திருத்தங்களுக்கு மூல காரணமாக இருந்திருக்கிறது. உலகெங்கும் பேராலயங்களை நிர்மாணிக்கும் பணியில் இந்த மரபு ஈடுபடுகிறது. உலகில் மானுடர் ஆன்மீக உயர்வு கொள்ள தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இந்த மரபு விசிஷ்டாத்வைதத்தின் முக்கியமான அடித்தளமான சேவையை தனது பிரதான வழிமுறையாகக் கொண்டுள்ளது. 

பகவான் சுவாமிநாராயண் வாழ்க்கையையும் வாழ்க்கை சம்பவங்களையும் அவர் மேற்கொண்ட சமூக சீர்திருத்தங்களையும் அவர் உருவாக்கிய அமைப்பு மேற்கொள்ளும் சேவை செயல்பாடுகளையும் அறிமுகப்படுத்தும் நூலாக இருக்கிறது  சாது முகுந்த்சரண்தாஸ் எழுதிய ‘’பகவான் சுவாமிநாராயண் - அறிமுகம்’’ என்னும் இந்நூல்.