உலக வரலாற்றை உற்று நோக்கினால் நமக்கு ஓர் புரிதல் ஏற்படும். அதாவது, ஆதிமனிதன் மண்ணை நிலத்தை அறியத் தொடங்குவதற்கு முன்பே வானை அறிய முற்பட்டிருக்கிறான். உலகெங்கும் காணப்படும் ஆதிமனிதன் வரைந்த குகை ஓவியங்களில் வானத்து விண்மீன்களின் சித்திரம் மிகத் துல்லியமாக மிக நேர்த்தியாக தீட்டப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஆதிமனிதன் வானியல் மீது ஆர்வம் கொண்டிருந்த காலத்தில் உலகில் மொழி உருவாகியிருக்கவில்லை ; உலகில் விவசாயம் உருவாகியிருக்கவில்லை. உலகில் உலோகங்களை உருவாக்கும் முறைகள் உருவாகியிருக்கவில்லை.
பாரத நிலம் வானியலில் மிக முன்னோடியாக இருந்த நிலம் ஆகும். உலகம் தட்டையானது என்று பெரும்பாலான நிலப்பகுதிகளின் மக்கள் எண்ணிக் கொண்டிருந்த போது பாரத நிலம் புவியை ‘’பூகோளம்’’ என்றது. சூரியனுக்கும் பூமிக்குமான தூரம் சூரியனுக்கும் சந்திரனுக்குமான தூரம் ஆகியவற்றை பாரத வானியல் அறிஞர்கள் துல்லியமாகக் கணித்துக் கூறியிருக்கின்றனர். பாரத நிலமெங்கும் எப்போது பருவமழை பெய்யத் துவங்கும் ; எப்போது காற்று வீசும் ; கோடை எத்தனை நாட்கள் இருக்கும் ; கோடை மழை எவ்விதம் பெய்யும் என்னும் கணிப்புகள் வானியலை அடிப்படையாய்க் கொண்டு மேற்கொள்ளப்பட்டன. திதி, வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்ட பஞ்சாங்கம் வானியலை அறியவும் பருவமழையை அறியவும் பெரிதும் உதவின. பருவமழை குறித்தான அறிவு விவசாயத்துடன் விவசாய விளைச்சலுடன் நேரடியாகத் தொடர்புடைய விஷயம் ஆதலால் பாரத விவசாயிகள் நாடெங்கும் பஞ்சாங்க சுவடிகளை பாதுகாத்து வந்தனர்.
திதி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்கும். வானியலின் முதல் அறிதல் அமாவாசை ஆகும். அன்று வானில் நிலவைக் காண முடியாது. அதனை பூஜ்யம் எனக் கொள்ளலாம். அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் நாள் எனப்படும் பிரதமை. பிரதம என்றால் முதன்மை என்று பொருள். பிரதமை என்றால் முதல் தினம் என்று பொருள். அமாவாசைக்கு இரண்டாம் நாள் துவிதியை எனப்படும். துவி என்றால் இரண்டு. துவிதியை என்றால் இரண்டாம் தினம் என்று பொருள். அன்று பிறை நிலவு வானில் உதிக்கும். உலகெங்கும் வானத்தில் பிறை உதிப்பது என்பது மங்களமான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். துவிதியையின் அடுத்தடுத்த நாட்கள் திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி என குறிப்பிடப்படுகின்றன. பாரத நிலத்தின் பண்டிகைகள் அனைத்துமே இந்த திதியை அடிப்படையாய்க் கொண்டவை என்பதை நாம் கவனிக்கலாம். தீபாவளி ஐப்பசி அமாவாசையில் கொண்டாடப்படும் ; ஆவணி சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி சஷ்டி முருகன் சூரனை சம்ஹாரம் செய்த தினம். சூரியனுக்கு ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. கருடனுக்கு பஞ்சமி சிறப்பான தினம். கிருஷ்ணன் பிறந்தது ஆவணி அஷ்டமியில். ராமன் பிறந்தது பங்குனி நவமியில். துர்க்கை மகிஷனை அழித்தது புரட்டாசி தசமியில். துர்க்கை மகிஷனை அழித்த தினம் விஜயதசமி எனப்படுகிறது. விஜயதசமியில் தொடங்கப்படும் செயல்கள் தங்கள் இலக்கை அடையும் என்பது பாரத மக்களின் நம்பிக்கை. வைணவர்களுக்கு ஏகாதசி மிக உகந்த நாள். அந்த நாள் உபவாசத்துக்கு உரியது. பௌர்ணமியில் புத்த பூர்ணிமாவும் ஹோலியும் கொண்டாடப்படுகின்றன. இவ்விதம் பாரத நிலத்தின் பண்டிகைகள் அனைத்துமே வானியலை அடிப்படையாய்க் கொண்டவை. சற்று கவனித்தால் பாரத நிலங்களின் பருவகாலங்கள் வானியலுடன் இணைக்கப்பட்டு புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதை நாம் அறிய முடியும். பாரதம் பல்வேறு தன்மை உள்ள நிலவியலால் ஆனது. ஒவ்வொரு பிராந்தியமும் தங்களுக்குரிய பிரத்யேக அவதானங்களைக் கொண்டிருப்பினும் அவை பெரும்பாலும் ஒத்து காணப்படுகின்றன என்பதை நாம் அறியலாம். புவி சூரியனை 23.5 பாகையில் சாய்ந்து சுற்றி வருகிறது. அவ்விதம் சுற்றி வரும் காலம் 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் ஆகும். புவி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. அவ்விதம் சுழல்கையில் சூரியனுடனான தூரத்தின் அடிப்படையில் ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உத்தராயணம் தக்ஷணாயனம் என்னும் இரு அயனங்கள் அவை. உத்தராயணம் என்பது சூரிய உதயம் கிழக்கு திசையில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதைக் குறிப்பதாகும். தை முதல் நாள் சூரியன் வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்குகிறது. இதனை பாரத நிலத்தில் உத்தராயண புண்ய காலம் என்கின்றனர். பாரதத்தின் வட மாநிலங்கள் அதனை உத்தராயண் எனக் கொண்டாடுகின்றன. தென் பாரதத்தில் உத்தராயண் ‘’பொங்கல்’’ பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
***
இந்த ஆண்டு உத்தராயணுக்கு ஆமதாவாத் செல்ல வேண்டும் என விரும்பினேன். குஜராத் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் உத்தராயண காலத் துவக்கத்தை ஒவ்வொரு இல்லத்திலும் வானில் பட்டங்களைப் பறக்க விட்டு கொண்டாடுவார்கள் என்பதால் இந்த ஆண்டு பொங்கலுக்கு ஆமதாவாத் செல்வது என முடிவு செய்தேன். சென்னைக்கும் ஆமதாவாத்துக்குமான தூரம் என்பது சென்னைக்கும் தில்லிக்குமான தூரத்துக்குச் சமமானது. பாரத நிலத்தில் நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் போது நான் அலைபேசியைக் கொண்டு செல்வதில்லை. அலைபேசியில் நூற்றுக்கணக்கான எண்கள் சேமிக்கப்பட்டுள்ளன. அலைபேசி தவறினால் அந்த எண்களை மீண்டும் சேகரிப்பது என்பது பெரிய காரியம். மேலும் நம் உலகில் நம் நாட்டில் 2005 வரை அலைபேசிகள் பரவலாகவில்லை. அதன் பின் மட்டுமே பரவலாயின. இருபது ஆண்டுகளாக மட்டுமே அலைபேசி புழக்கத்தில் இருக்கிறது. அதற்கு முன் அப்படி ஒரு வசதி இல்லை. தொலைபேசிகள் இருந்தன. கடிதங்கள் இருந்தன. மின்னஞ்சல் கூட இருந்தது ; இருக்கிறது. எனது மனம் படைப்பூக்கம் கொண்டது. நிலம், மரம், பறவை, குளம், ஆறு,கடல், வானம், விண்மீன், சூரியன், மலை என எதனைக் கண்டாலும் என் மனம் குதூகலிக்கும். அந்த குதூகலம் மிகவும் பரவசமான அனுபவம். அந்த பரவசத்தை அலைபேசியில் வரும் ஓர் அழைப்பு இல்லாமல் ஆக்கும். சாமானிய லௌகிக விஷயத்துக்காக வரும் அழைப்பு என் குதூகலத்தை உற்சாகத்தைக் கெடுத்து விடும் என்பதால் நான் எங்கும் அலைபேசியை எடுத்துச் செல்ல விரும்புவதில்லை.
தக்ஷிணாயண காலம், மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியில் ஆமதாவாத் செல்வதற்கான பயணத்தைத் துவக்கினேன். நான் பயணம் புறப்பட்ட தினம் ஞாயிற்றுக்கிழமை. அன்று திருச்சிராப்பள்ளியிலிருந்து ஆமதாவாத் வரை செல்லும் வாரம் ஒருமுறை ரயில் ஒன்று ஊர் வழியே காலை 7.45க்கு செல்லும் என்பதை ஓரிரு நாள் முன்னர் இணையம் மூலம் அறிந்தேன். நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் போது எப்போதும் சென்னை நோக்கி ரயிலில் செல்வது முதல் காரியமாக இருக்கும். ரயில்களில் சில தாம்பரம் செல்லும் ; சில எழும்பூர் செல்லும். அங்கிருந்து செண்ட்ரல் ரயில் நிலையம் செல்ல வேண்டும். ஆகவே எந்த நெடும் ரயில் பயணமும் சென்னையில் இருந்து துவங்குவதாக இருக்கும். முதல் முறையாக ஊர் வழியே செல்லும் நெடுந்தூர ரயில் ஒன்றில் பயணத்தைத் துவக்குவது புதிதாக இருந்தது. காலை 7.45க்கு வர வேண்டிய ரயில் 30 நிமிடம் தாமதமாக 8.15க்கு வந்தது. காத்திருந்த நேரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டேன். ரயில் வந்ததும் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியில் ஏறி அமர்ந்தேன். ஊருக்கும் ஆமதாவாத்துக்குமான தூரம் 2020 கி.மீ. பொதுப் பெட்டியின் கட்டணம் ரூ.530. என் கையில் ரூ.6000 இருந்தது. குறைந்தபட்சம் ஒரு வார காலத்துக்கு இந்த தொகையைக் கொண்டு செலவு செய்து கொள்ள வேண்டும். ஒரு துணிப்பையை கையில் வைத்திருந்தேன். அதில் இரண்டு வேட்டிகள் மற்றும் இரண்டு சட்டைகள் வைத்துக் கொண்டேன். ‘’கதா சரித் சாகரம்’’ என்னும் நூல் ஒன்று. வாட்டர் பாட்டில் ஒன்று. கடந்த 6 மாதமாகவே வேட்டி மட்டுமே உடுத்துகிறேன். இஸ்திரி போடுபவர் முன்னர் வீட்டுக்கு வந்து துணிகளை எடுத்துச் செல்வார். அவர் சற்று உடல்நலம் குன்றியதால் அவருடைய இடத்துக்கு வாரம் ஒருநாளோ இரண்டு நாளோ துணிகளைக் கொடுத்து இஸ்திரி போட்டு வீட்டுக்குக் கொண்டு வரும் பணியை நான் செய்ய வேண்டி வந்தது. அங்கே எடுத்துச் செல்லும் துணிகளின் அளவைக் குறைக்க வேண்டுமானால் வேட்டி உடுத்தினால் அவ்வாறு செய்ய முடியும் என்பதால் வேட்டி உடுத்தத் தொடங்கினேன். அவற்றைத் துவைத்து உலர்த்தினால் போதும் ; இஸ்திரி போட வேண்டியதில்லை.இஸ்திரிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய துணியின் அளவும் குறைந்தது ; 15 நாட்களுக்கு ஒருமுறை சென்றால் போதும் என்னும் நிலையும் உருவானது. இஸ்திரி கட்டணமும் கணிசமாகக் குறைந்தது. நான் அணிய வேண்டும் என நினைக்கும் ஆடை ‘’ கதர் பைஜாமா கதர் குர்தா’’. பால பருவத்திலிருந்தே அந்த ஆடை மீது எனக்கு பெரும் ஈர்ப்பு. காந்தியவாதிகளும் தேசியவாதிகளும் அணியும் ஆடை என்பதால் அதன் மேல் பெரும் ஈர்ப்பு கொண்டேன். இப்போதும் அந்த விருப்பம் இருக்கிறது. மகாத்மா நாம் கதர் ஆடை மட்டுமே அணிய வேண்டும் என விரும்பினார். கதர் ஆடை மட்டுமல்ல அது ஓர் லட்சியம். அது ஓர் உன்னதம். ஒருவருடைய ஆளுமை அவர் அணியும் ஆடைகளில் பிரதிபலிக்கிறது. நான் இந்திய நிலமெங்கும் பயணித்தவன். இந்திய நிலத்தில் விவசாயிகள் வேட்டியையை அணிகிறார்கள். வேட்டி எளிய ஆடை. வசதியான ஆடை.
பொதுவாக இந்திய ரயில்களில் என்ஜினுக்கு பக்கத்தில் ஒரு பெட்டியும் ரயிலின் கடைசி பெட்டியும் பொதுப் பெட்டியாக இருக்கும். ஒரு பெட்டியில் 90 பேர் அமர முடியும். இரண்டு பெட்டிக்கு 180 பேர். நான் ரயில் என்ஜினுக்கு அருகில் இருக்கும் பெட்டியில் அமர்ந்து கொண்டேன். இந்த ரயில் வாரம் ஒருமுறை ரயில் என்பதால் பொதுப் பெட்டியில் பெரிதாகக் கூட்டம் இல்லை. 90 பேர் பயணிக்க வேண்டிய பெட்டியில் 14 பேர் மட்டுமே இருந்தோம். நான் எனது துணிப்பையை சாமான்கள் பரண் மீது வைத்து விட்டு சாவகாசமாக அமர்ந்து கொண்டேன்.
ஓர் இளைஞர் வந்தார். 14 பேரில் ஒருவர். ‘’வைத்தீஸ்வரன் கோவில் எப்போ வரும்?’’ எனக் கேட்டார். ‘’அடுத்த ஸ்டாப். இன்னும் 10 நிமிஷத்துல வந்துடும்’’ என்றேன். ‘’சார்! சென்னை போறீங்களா?’’ எனக் கேட்டதற்கு ‘’ ஆமதாவாத் போறேன்’’ என நான் கூறிய பதில் அவரை ஆச்சர்யப்படுத்தியது. ‘’எப்போ போய் சேரும்?’’ ‘’நாளைக்கு நைட் 9 மணி டைம். 36 மணி நேரம் ஜர்னி’’. ‘’அன் ரிசர்வ்டு பெட்டியலயா போறீங்க. ரிசர்வ் பண்ணியிருக்கலாமே. சென்னைல நிறைய கூட்டம் இருக்குமே?’’ ‘’ தம்பி ! அந்த மக்கள் கூட்டத்துல நானும் ஒருத்தன்னு உணர்ரதும் அந்த மக்கள் கூட்டத்துல ஒருத்தனா இருக்கறதும் ரொம்ப மகத்தான விஷயம் தம்பி. மக்களோட இருக்கறவனாலதான் மக்களுக்காக சிந்திக்க முடியும்’’. ’’இந்த துணிப்பை தான் மொத்த லக்கேஜ் ஆ? எப்போ ஊர் திரும்புவீங்க?’’ ‘’ஒரு வாரத்துல வந்துடுவன்’’ . ‘’சார் ! என்ன விஷயமா போறீங்க?’’ ‘’நாம இங்க பொங்கல் கொண்டாடறதைப் போல குஜராத் மகாராஷ்ட்ரால தை மாதம் முதல் நாளை உத்தராயண்னு கொண்டாடறாங்க. அன்னைக்கு அங்க இருக்கற எல்லா வீட்லயும் பட்டம் பறக்க விடுவாங்க.சாதாரணமா ஒரு பட்டம் பறக்கறதை பாக்கறதே சந்தோஷமா இருக்கும். ஒரு ஊரே பட்டம் விட்டா எப்படி இருக்கும் ? அதைப் பாக்கத்தான் போறேன்?’’. அந்த இளைஞருக்கு ஒரே சந்தோஷம். அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் கோவையில் ஒரு மளிகைக்கடை வைத்திருக்கிறார். பதினைந்து நாளுக்கு ஒருமுறை ஏதேனும் ஓர் சிவாலயத்தில் உழவாரம் மேற்கொள்ளும் குழுவில் இருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் இருப்பவர்கள். மாதம் இரண்டு முறை என்ன ஊரில் உழவாரம் மேற்கொள்வது என முடிவு செய்து அங்கே சந்தித்துக் கொள்கிறார்கள். அன்றைய தினம் வைத்தீஸ்வரன்கோவிலில் உழவாரம் மேற்கொள்வதாக ஏற்பாடு. ‘’உபகரணங்கள் எங்கே’’ என்று கேட்டேன். ஒரு குழு வேனில் அவற்றைக் கொண்டு வரும் என்று சொன்னார். எங்கள் உரையாடல் நிறைவு பெறுகையில் வைதீஸ்வரன் கோவில் வந்தது. திருச்சிற்றம்பலம் எனக் கூறி பஞ்சாட்சர மந்திரம் சொல்லி விடை பெற்றார். எனது அலைபேசி எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டார். ‘’ இன்னும் ஒரு வாரம் என் கையில் ஃபோன் இருக்காது. சுவிட்ச் ஆஃப் ஆக இருக்கும். அடுத்த திங்களுக்கு அப்புறம் ஃபோன் செய்ங்க’’ என்றேன்.
சீர்காழியில் ஒரு பெண்மணி ஏறினார். அவர் மும்பையின் ‘’வாசை ரோடு’’ ரயில் நிலையம் வரை பயணிக்க வேண்டியவர். ‘’ தம்பி! பொன்ன கட்டிக் கொடுத்த ஊர் சீர்காழி தம்பி. மருமகனுக்கு சின்ன ஆக்சிடண்ட். அவசரமா கிளம்ப வேண்டியதாயிடுச்சு. வரும் போது ஃபிளைட்-ல வந்தோம். ரிடர்ன் பிளான் பண்ணல். சிரமம் பாக்காம போயிடலாம்னு இந்த ரயில்ல ஏறிட்டேன்.’’ அவரது கணவர் மும்பையில் கட்டிட காண்டிராக்டர். அவருடைய சொந்த ஊர் சைதாப்பேட்டை. பெண்மணியின் சொந்த ஊர் தஞ்சாவூர். மும்பையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கிறார்கள். அவரிடம் அவருக்கு விருப்பமான ஊர் எது என்று கேட்டேன். ‘’மும்பை தான் தம்பி. அங்க மக்கள் ஒற்றுமையா இருப்பாங்க. எந்த விஷயம்னாலும் எல்லாரும் சேந்து செய்யணும்னு நினைப்பாங்க. நான் மும்பைல 30 வருஷமா இருக்கன். இதுவரைக்கும் நாலு வீடு மாறியிருக்கோம். மூணு தடவை வாடகைக்கு குடியிருந்தோம். எல்லாமே அபார்ட்மெண்ட்ஸ்தான். நெய்பர்ஸ் அவ்வளவு பிரியமா பாசமா இருப்பாங்க. அவங்களோட பண்டிகை எல்லாத்துக்கும் பிரசாதம் கொடுப்பாங்க. நாம கொடுக்கற பிரசாதத்தை வாங்கிப்பாங்க. இப்ப ஒரு அபார்ட்மெண்ட்ஸ்ல சொந்தமா வீடு வாங்கிட்டு இருக்கோம். அங்கயும் அப்படித்தான். மும்பை அளவுக்கு எந்த ஊரும் கிடையாது தம்பி’’ என்றார். மிகச் சரளமாக ஹிந்தி பேசுகிறார். வண்டி விழுப்புரம் சென்று அங்கிருந்து சென்னை எழும்பூர் வழியே பெரம்பூர் சென்று அரக்கோணம் வழியே ரேணிகுண்டா செல்ல வேண்டும். அதுவே அந்த ரயிலின் வழக்கமான மார்க்கம். எனினும் சில வாரங்களாக விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் திருவண்ணாமலை வழியாக வேலூர் அரக்கோணம் எனத் திருப்பி விடுகிறார்கள். வாரம் ஒருமுறை ரயில் என்பதால் சிக்னல் கிடைக்க மற்ற இரயில்களுக்கு வழிவிட என ரயில் மேலும் மேலும் தாமதமானது. ரேணிகுண்டா சென்று சேர்ந்த போது ரயில் நான்கு மணி நேரம் தாமதமாகியிருந்தது. அந்த நான்கு மணி நேரத் தாமதம் அடுத்த நாளின் முழுப் பயணத்திலும் தொடர்ந்தது. பொதுப் பெட்டி ரேணிகுண்டாவில் நிறைந்தது. கடப்பா செல்ல வேண்டியவர்களும் ரெய்ச்சூர் செல்ல வேண்டியவர்களும் கல்புர்கி செல்ல வேண்டியவர்களும் ஏறிக் கொண்டார்கள். பொதுப் பெட்டியில் அமர்ந்து கொண்டே தூங்க வேண்டும். அல்லது இரவுத் தூக்கத்தை தவிர்க்க வேண்டும். இந்த விஷயம் தவிர்க்க முடியாதது.
நான் பல ஆண்டுகளாக ரயிலில் பயணிப்பவன். 2014ம் ஆண்டிலிருந்து 2026ம் ஆண்டு வரை ரயில்வேயில் நடந்திருக்கும் பணிகள் அளவுக்கு எப்போதுமே இவ்வளவு வீரியத்துடன் பணிகள் நிகழ்ந்ததில்லை என என்னால் உறுதியாகக் கூற முடியும். எல்லா ரயில்களும் புறப்படுவதற்கு முன் தூய்மை செய்யப்படுவது உறுதி செய்யப்படுகிறது. ரயில்களின் கழிவறைகள் தினமும் தூய்மை செய்யப்படுகின்றன. எல்லா ரயில் நிலையங்களும் விரிவாக்கிக் கட்டப்படுகின்றன. புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வந்தே பாரத் போன்ற அதி விரைவு ரயில்கள் பரவலாகின்றன. இன்று ரயில்வேயில் பணி புரிபவர்கள் என 25 வயதிலிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களும் இளம் பெண்களுமே பரவாலக் காணக் கிடைக்கிறார்கள். அதனை ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பார்க்க முடிந்தது. தூய்மையில் நம் தேசம் முழுமையை நோக்கிச் செல்ல கோடானுகோடி பொதுமக்களும் தூய்மைக்கான உறுதியை மனதில் ஏற்க வேண்டும். அவ்வாறு நிகழுமாயின் நாம் சமகாலத்தில் பெரும் மாற்றம் ஒன்றை நிகழ்த்தியவர்களாவோம்.
முதல் நாள் காலை 8.15க்கு ஊரில் இருந்த வண்டி அன்று இரவு 8.15க்கு கடப்பா அருகே இருந்தது. மறுநாள் காலை 8.15க்கு சோலாப்பூரில் இருந்தது. இரவு 8.15க்கு வாபி. நள்ளிரவு 2 மணிக்கு ஆமதாவாத் சென்றடைந்தது. மொத்தம் 42 மணி நேரப் பயணம். ரயில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் வழியே செல்கிறது. தமிழ்நாட்டில் 8 மணி நேரம். ஆந்திராவில் 8 மணி நேரம். கர்நாட்காவில் 4 மணி நேரம். மகாராஷ்ட்ராவில் 15 மணி நேரம். குஜராத்தில் 5 மணி நேரம்.
பாரத நிலத்தைப் பார்த்துக் கொண்டே செல்வது என்பது ஓர் அரிய அனுபவம். இந்த நிலத்துக்காக இந்த நிலத்தை மேன்மைப்படுத்த இந்த நிலத்தை மேன்மைப்படுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த உலகுக்கும் உலகப் பண்பாட்டுக்கும் பங்களிப்பாற்றிய லட்சக்கணக்கானோரின் நிரையை இந்த மண்ணை மீண்டும் மீண்டும் பார்ப்பதன் மூலம் நினைவுபடுத்திக் கொள்ள முடியும். அந்த நிரையின் மகத்தான மனிதர்களின் பணியில் நம் கைமணல் அளவு நாம் பங்களிக்கவும் முடியும். இந்த நிலத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்த கடமை இருக்கிறது. நமது முன்னோர்கள் மகத்தானவர்கள். அவர்கள் உலகம் ஒரே குடும்பம் என அறைகூவியவர்கள். அன்பும் அஹிம்சையுமே மானுட லட்சியங்கள் என வாழ்ந்து காட்டியவர்கள். அன்பின் அஹிம்சையின் செய்தியை ஒட்டு மொத்த உலகுக்கும் கூறியவர்கள். இந்த உலகின் பெரும் சாம்ராஜ்யங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கின்றன. ஆனால் பாரத மண்ணின் மகாத்மாக்களின் சொற்களும் வழிகாட்டல்களும் இன்னும் ஜீவித்திருக்கின்றன. அவை வான் போல சூரியன் போல சந்திரன் போல என்றும் இருக்கும்.
ரயில் குஜராத் எல்லையை அடைந்த ஒரு மணி நேரத்தில் நான் உறங்கி விட்டேன். ஆமதாவாத் வந்தடைந்ததும் சக பயணிகள் எழுப்பி விட்டனர். நேரம் இரவு 2 மணி. ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் ‘’ஷாய்பாக்’’ என்னும் இடம் இருக்கிறது. அங்கிருக்கும் தர்மசாலா ஒன்றில் டார்மிட்டரி பதிவு செய்திருந்தேன். அந்த தர்மசாலா BAPS எனப்படும் சுவாமிநாராயண் அமைப்பால் நடத்தப்படுவது. ஷாய்பாக்கில் அவர்களுடைய கோவிலும் பொது அரங்கும் தர்மசாலாவும் அலுவலகங்களும் உள்ளன. நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட பொழுதாக இருப்பதால் இந்த நேரத்தில் தர்மசாலா பணியாளர்கள் இருப்பார்களா என ஐயம் கொண்டேன். வாசல் எண் 3 தர்மசாலாவுக்கானது. அங்கே இரவுக் காவலர் இருந்தார். அவர் பதிவு எண்ணைச் சொன்னதும் உள்ளே செல்லுமாறு கூறினார். உள்ளே தர்மசாலா பதிவு ஊழியர் இருக்கையில் அமர்ந்திருந்தது எனக்கு வியப்பை அளித்தது. அவர் பதிவு செய்து கொண்டு அனுமதிச் சீட்டு வழங்கினார். மூன்று நாளுக்கு அனுமதி இருந்தது. தங்கிக் கொள்ளலாம். காலை மதியம் இரவு என மூன்று வேளை உணவும் அங்கேயே அருந்திக் கொள்ளலாம். மொத்தம் ரூ.600. இவ்விதமான தர்ம சத்திரங்கள் இருக்கையில் இந்தியா என்றும் பயணிகளின் நிலமே ! இதை விட ஒரு பயணிக்கு என்ன வேண்டும் ? இந்திய ரயில்வே 2000 கி.மீ தூரத்தை ரூ.530 வாங்கிக் கொண்டு கடக்க உதவுகிறது. ஆமதாவாத்தில் ஒரு தர்மசாலாவில் தங்க இடமும் கொடுத்து மூன்று நாளைக்கு மூன்று வேளை உணவும் ரூ.600க்கு அளிக்கிறார்கள் என்றால் இதை விட ஒரு பயணிக்கு என்ன சொர்க்கம் இருக்க முடியும்? அந்த வளாகத்திற்கு வெளியே ஆட்டோவில் வந்த போது வாசல் எண் 1 ஆலயத்துக்கானது என்பதை அறிந்தேன். காலையிலேயே எழுந்து குளித்துத் தயாராகி ஆலய வழிபாட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை மனதில் எண்ணிக் கொண்டேன். இரண்டு நாள் பயண அலுப்பில் நன்றாகத் தூங்கிப் போனேன். எனக்கு அளிக்கப்பட்டிருந்த டார்மிட்டரி மூன்றாம் மாடியில் இருந்தது. அந்த கட்டிடத்தில் மொத்தம் ஆறு மாடிகள். என்னுடைய டார்மிட்டரியில் 16 படுக்கைகள் இருந்தன. அதில் பத்து பேர் இருந்தார்கள். காலை 3 மணிகள் ஒலித்தன. அது தூக்கத்தின் ஆழத்தில் கேட்டது. பின்னர் நீண்ட நேரம் கழித்து 4 மணிகள் கேட்டன. அதன் பின் டார்மிட்டரியில் சிறு சிறு சலனங்கள் கேட்டதும் விழித்துக் கொண்டு கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்காமல் குளித்து ஆலயத்துக்குச் சென்றேன்.
வட மாநிலங்கள் குளிர் மிக்கவை என்பதாலும் சூரிய உதயம் நிகழ சற்று தாமதம் ஆகும் என்பதாலும் ஆலயங்கள் ஐந்து மணி வாக்கில் திறக்கப்படுகின்றன. அங்கே சென்று வணங்கினேன். ஆலயத்தைச் சுற்றி வந்தேன். அங்கே ஒரு கல்வெட்டு ஒரு செய்தியைச் சொன்னது. அதாவது, பகவான் சுவாமிநாராயண் ஆமதாவாத்தில் இருந்த போது இந்த வளாகம் இருக்கும் இடம் ஒரு சோலையாக இருந்திருக்கிறது. அந்த சோலை மரங்களின் நிழலில் அவர் பல மாதங்கள் ஓய்வெடுத்திருக்கிறார். தினமும் சபர்மதி ஆற்றில் நீராடப் போகையில் இந்த சோலையில் ஓய்வெடுத்திருக்கிறார். புனிதர் தங்கிய நிலத்தில் சில நாட்கள் தங்க கிடைத்த வாய்ப்பு என்பது அரியது என்பதை உணர்ந்த போது மனம் நெகிழ்ந்தது.
ஆலயத்தில் வழிபட்டுக் கொண்டிருந்த போது அங்கிருந்த வெள்ளாடை அணிந்த தன்னார்வலர் ஒருவர் என்னை நோக்கி வந்து ‘’பிரபு ஜி’’ என்றார். எனக்கு ஒரே ஆச்சர்யம் . அவர் எவ்விதம் என்னை அறிவார் என. அவரிடம் என்னை எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டேன். வேட்டி உடுத்தியிருப்பதால் தமிழகத்திலிருந்து வந்தவன் என்பதை யூகித்திருக்கிறார். எனக்கு முதலில் BAPSல் அவர் அறிமுகமே கிடைத்தது. அவருடன் அலைபேசியில் ஊரில் இருந்த போது ஓரிரு முறை இடம் பதிவு செய்வது தொடர்பாக உரையாடியிருக்கிறேன். அன்றைய தினத்தில் இன்னும் சற்று நேரத்தில் குருவுடனான ‘’சத் சங்கம்’’ இருக்கிறது என்றும் அதற்கு ஆமதாவாத்தில் வாழும் பஞ்சாப், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு , கேரளா அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள் ; நீங்களும் அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள் எனக் கூறினார். அவ்விதமே அவர்கள் அனைவரும் வருகை புரிந்தனர். நான் அவர்களுடன் இணைந்து கொண்டேன். ஆமதாவாத்தில் வாழும் தமிழ் மக்கள் அதிகமும் பழைய தென்னாற்காடு மாவட்டம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். பஞ்சாலைகளில் வேலை செய்ய 60 ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்கள். முழுமையாக ஆமதாவாத்திலேயே தங்கி விட்டவர்கள். ஆமதாவாத் ரயில் நிலையத்துக்கு முந்தைய ரயில் நிலையம் ‘’மணி நகர்’’. இங்கேயே அதிகம் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். அங்கே ஒரு முருகன் கோவிலைக் கட்டியுள்ளனர். பாரதப் பிரதமர் நரேந்திர மோதி குஜராத் முதல்வரான போது முதல்வராகப் பதவியேற்று அதன் பின் ‘’மணி நகர்’’ தொகுதியில் போட்டியிட்டு குஜராத் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் அடுத்தடுத்த தேர்தல்களிலும் ‘’மணி நகர்’’ தொகுதியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
‘’சத் சங்கம்’’ நிகழ்ந்த இடம் ஆலயத்துக்கும் தர்மசாலாவுக்கும் இடையில் இருந்தது. நிகழ்ச்சி அரங்குக்குச் சென்ற போது அங்கே 25,000 பேர் குழுமியிருந்தனர் என்பதைக் கண்ட போது எனக்கு வியப்பாக இருந்தது. ஆண்களும் பெண்களும் என 25,000 பேர். குண்டூசி விழுந்தால் கேட்கும் என்னும் அளவுக்கு அமைதி. எவ்விதம் உள்நுழந்தார்கள் எவ்விதம் வெளியேறுவார்கள் என அறிய முடியாத அளவு நேர்த்தி. ‘’சத் சங்கம்’’ தொடங்கியது. பக்திப் பாடல்கள் பல பாடப்பட்டன. வட இந்திய இசை உணர்வுகளை மிக எளிதில் நெகிழச் செய்து விடும் என்பது எனது அனுபவம். அப்பாடல்களின் சாகித்யத்தை அறிய முடியவில்லை என்றாலும் அதன் உணர்வுநிலைகளை மிக எளிதில் உணர முடிந்தது. குருஜி தனது பூஜையை மேற்கொண்டார். எல்லா சுவாமிநாராயண் சம்பிரதாய பக்தர்களும் மேற்கொள்ளும் பூஜை. காலையில் தயாரான போது டார்மிட்டரியில் தங்கியிருந்தவர்கள் அந்த பூஜையை செய்வதைப் பார்த்தேன். பூஜைக்கென ஒரு சிறு பெட்டி இருக்கிறது. அவர்கள் பூஜிக்கும் தெய்வங்களின் குருமார்களின் படங்கள் அதில் இருக்கின்றன. ஒரு ஜபமாலை இருக்கிறது. ஆரத்தி காட்ட பருத்திக் குச்சிகள் இருக்கின்றன. குருஜியும் அதே பூஜையைச் செய்தார். உத்தராயணை ஒட்டிய சிறப்பு சத்சங்கத்துக்காக பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு , கேரளா சமூகத்தினர் வந்திருப்பது குருஜிக்கு அறிவிக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் எழுந்து நின்று வணங்கினோம். குருஜி எங்களை ஆசிர்வதித்தார். சத்சங்கம் முடிந்ததும் சில நிமிடங்களில் வந்திருந்த 25,000 பேரும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினர். வளாகம் சில நூறு பேர் மட்டுமே இருக்கும் இடமாக மாறியது.
பாரதத்தின் ஆன்மீக மரபுகளில் சுவாமிநாராயண் மரபு மிகவும் முக்கியமானது. நம் நாட்டில் 1000 ஆண்டுகளாக முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் அங்கிருந்த ஆலயங்களை இடித்துத் தரைமட்டம் ஆக்கினர். இமயத்திலிருந்து குமரி வரை வங்காளத்திலிருந்து ராஜஸ்தான் வரை அவர்கள் ஆலயங்களை அழித்தனர். ஹிந்து, பௌத்த, சமண, சீக்கிய ஆலயங்களும் கல்வி நிலையங்களும் அவர்களால் அழிக்கப்பட்டன. தென்னகத்தில் விஜயநகரப் பேரரசும் நாயக்கர்களின் ஆட்சியும் முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக உருவானதால் தென்னகம் காக்கப்பட்டது. இன்றும் தமிழகம் கர்நாடகாவில் கற்கோவில்கள் இருக்கக் காரணம் விஜயநகர சாம்ராஜ்யமும் நாயக்கர் ஆட்சியும். முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பின் வந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நம் நாட்டைக் கொள்ளையடித்தனர். ‘’கொள்ளை’’ என்பது சாதாரணமான வார்த்தை. அவர்கள் கோடானுகோடி பாரத மக்களின் உழைப்பைச் சுரண்டினர். பஞ்சமும் நோய்மையும் மிக்க சமூகமாக பாரத சமுதாயத்தை ஆக்கினர். முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களை விடவும் கொடியவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். இங்கே நம் நாட்டின் உயிர் அமைப்புக்களை அழித்து நம் நாட்டு மக்களை அடிமைகளைப் போல உழைக்க வைத்து அந்த உழைப்பின் பயனை தங்கள் நாட்டுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டவர்கள் பிரிட்டிஷார்கள். உலகின் மிக உயர்ந்த பண்பாடு கொண்ட தேசம் தாழ்நிலைக்கு சென்றதற்கு கணிசமான பொறுப்பு முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் இருக்கிறது. வரலாறு அவர்களை எப்போதுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியே வைத்திருக்கும்.
இன்றும் வட இந்தியாவில் பேராலயங்களை நிர்மாணிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அமைப்பு சுவாமிநாராயண் சம்பிரதாயம் ஆகும். உலகின் பல நாடுகளிலும் இந்தியாவெங்கும் அவர்கள் பல ஆலயங்களை நிர்மாணிக்கின்றனர். அக்ஷர்தாம் ஆலயங்கள் அளவில் மிகப் பெரியவை. சில ஆண்டுகளுக்கு முன்பு அரபு தேசமான அபுதாபியில் அக்ஷர்தாம் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.
***
13ம் தேதி காலையில் சபர்மதி ஆற்றின் கரையில் நிகழும் சர்வதேச பட்டம் திருவிழாவுக்குச் சென்றேன். காலைப் பொழுதிலேயே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் நூற்றுக்கணக்கான பட்டம் பறக்க விடுபவர்களும் அங்கே குழுமியிருந்தனர்.
பட்டம் விடுவது ஒரு கலை. அதனை ஒரு விதமான தியானம் என்றும் கூறலாம். சரியான அளவில் பட்டத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். காற்று வீசும் வரை காத்திருக்க வேண்டும். சிறு காற்று வீசத் தொடங்கியதும் பட்டத்தை மேலெழுப்ப வேண்டும். சில அடி உயரங்கள் பட்டம் எழுந்து விட்டால் அதனை உயரே உயரே என கொண்டு செல்வது பட்டம் விடுபவன் கையில் இருக்கிறது. உயரே சென்றால் இயல்பாகவே காற்றின் அளவு அதிகமாக இருக்கும். அங்கே பட்டம் பறந்து ஒரு பறவையைப் போல வானில் வட்டமடிக்கும். நூலைக் கையில் வைத்திருப்பவன் அதனை இங்கும் அங்கும் சிறு அளவில் நகர்த்திக் கொண்டேயிருக்க வேண்டும். ஒரு பட்டத்தை எவ்வளவு நேரம் வானில் நிலை நிறுத்துகிறோம் என்பதே திறன்.
அளவில் பெரிய பட்டங்கள் பல நூலால் இணைக்கப்பட்டவை அங்கே பறக்கவிடப்பட்டன. ஒரு பட்டத்தில் நூறு பட்டங்கள் இணைக்கப்பட்டு இருந்தது வானில் பறந்த போது பிரமிப்பாக இருந்தது. இஸ்ரேல் தேசத்தைச் சேர்ந்த ஒரு பட்டம் விடுபவர் ஒரு அடிக்கு ஒரு அடி இருந்த ஓர் எளிய பட்டத்தை வானின் மிக உயரத்துக்குக் கொண்டு சென்று பல மணி நேரங்கள் நிறுத்தினார். அதனை நான் மிக நுணுக்கமாகக் கவனித்தேன். பெரும் ஈடுபாடு கொண்ட ஒருவரால் மட்டுமே அவ்விதம் செய்ய முடியும். எனக்கு அந்த இஸ்ரேல் அணியை மிகவும் பிடித்திருந்தது.
இந்த ஆண்டு ஜெர்மனி, ஃபிராண்ஸ், ஹங்கேரி, இந்தோனேஷியா, அயர்லாந்து, கொரியா, போலந்து, போர்ச்சுக்கல், ரீயூனியன், ரஷ்யா, சிங்கப்பூர், லெபனான், மலேசியா, மொரீஷியஸ், ஸ்ரீலங்கா, ஸ்வீடன் ஆகிய நாடுகளிலிருந்து பட்டம் பறக்க விடுபவர்கள் வந்து தங்கள் பட்டங்களைப் பறக்க விட்டார்கள்.
வான் நோக்கி எழும் பட்டம் என்பது மனிதன் இறைமையைத் தொடுவதற்கு செய்யும் முயற்சி என்று எனக்குத் தோன்றியது. ஒரு தனி மனிதன் விண்ணுக்குத் தனது அன்பைத் தெரிவிக்கிறான் ; தனது பிரியத்தைத் தெரிவிக்கிறான் ; தனது மரியாதையைத் தெரிவிக்கிறான்.
சபர்மதி ஆற்றின் கரையில் குழுமியிருந்த மக்களைக் கண்டேன். புதிய நிலம். புதிய மக்கள். சிறு வயதில் படித்த பாரதிதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது. ‘’ஏறி நின்று பாரடா எங்கும் : எங்கும் பாரடா இப்புவி மக்களை ; என் குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருகடல் பார்த்து மகிழ்ச்சி கொள் ; அறிவை விரிவு செய் ; அகண்டமாக்கு ; விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை ; அணைந்து கொள் உன்னைச் சங்கமமாக்கு ; மானுட சமுத்திரம் நானென்று கூவு’’
சபர்மதி ஆற்றின் கரையில் சில நிமிடங்கள் கண் மூடி அமர்ந்தேன். தசீசி முனிவர் உலக நன்மைக்காக தனது முதுகெலும்பை அளித்து பிராணத் தியாகம் செய்த மண் அது. அந்த முதுகெலும்பே வஜ்ராயுதம் ஆனது. மகாத்மா காந்தியையும் வல்லபாய் படேலையும் அளித்த மண். எத்தனையோ முனிவர்களும் யோகிகளும் உலவிய நிலம்.
இறைவா ! மனிதர்களுக்கு அமைதியைக் கொடு. உயிர்கள் அனைத்துக்கும் அமைதியைக் கொடு.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் எனில் அந்நிலையை ஏற்படுத்த மனிதர்களுக்கு பொறுப்பு மிக அதிகம் இருக்கிறது.
***
ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்த சபர்மதி ஆற்றங்கரையில் நான் வேட்டி உடுத்தியிருக்கும் முறையைக் கொண்டு நான் நாட்டின் தென்பகுதியிலிருந்து வருகிறேன் என்பதை பலர் முதற்பார்வையிலேயே புரிந்து கொண்டனர். சிலர் என்னைக் கடந்து சென்ற போது ‘’வணக்கம்’’ எனக் கூறினர்.
ஒரு சிறுவன் இருந்தான். அழகான சிறுவன். அவனிடம் அவன் பெயர் என்ன என்று கேட்டேன். ‘’மந்த்ரா’’ என்றான். ‘’பஞ்சாட்சர மந்திரமா அஷ்டாட்சர மந்திரமா எனக் கேட்டேன். அவன் அன்னை சமஸ்கிருதத்தில் ‘’ செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் ; அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’’ என்னும் மந்திரத்தைச் சொன்னார். ‘’ஓ ! காயத்ரி மந்திரமா! ‘’ என்றேன்.
இன்னொரு சிறுவன் இருந்தான். அவனுக்கு இரண்டு வயது இருக்கும். அவனிடம் பெயர் கேட்டேன். ’’விவான்’’ என்றான். அவன் அன்னை அப்பெயர் ஸ்ரீகிருஷ்ணனுடையது என்று கூறினார்.
காலையிலிருந்து மாலை வரை விழா அரங்கில் இருந்து விட்டு மாலை ஷாய்பாக் திரும்பினேன். அப்போது பயணித்த ஆட்டோ டிரைவரிடம் அவரது பெயரைக் கேட்டேன். ‘’விட்டல்’’ என்றார். மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்தவரா என்று கேட்டேன். அவர் பிறந்த போது அவருடைய வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு மராத்திக் குடும்பம் இருந்தார்களாம். அவர்கள் சொன்ன ‘’விட்டல்’’ என்ற பெயரை விட்டலின் தந்தையார் வைத்து விட்டாராம்.
மாலைப் பொழுதில் சுவாமிநாராயண் ஆலயத்தில் அமர்ந்திருந்தேன். அருகேயிருந்த அவர்கள் ஸ்டாலில் Bhagwan Swaminarayan - An introduction என்னும் நூலையும் Swaminarayan sampradaya - An introduction என்னும் நூலையும் வாங்கிக் கொண்டேன்.
***
மறுநாள் காலை 5 மணிக்கே ஆலயத்துக்கு வந்து விட்டேன். அன்றும் சத்சங்கம் இருந்தது. அன்றும் 25,000 பேர் கலந்து கொண்டார்கள். சத் சங்கம் முடிந்ததும் காலை உணவு அருந்தி விட்டு அருகில் இருந்த ஜெயின் ஆலயத்துக்குச் சென்று வந்தேன். பின்னர் ஆமதாவாத்தின் ஜனநெருக்கடி மிகுந்த குடியிருப்புப் பகுதிக்குச் சென்றேன். அங்கே நூற்றுக் கணக்கான பட்டங்கள் பறந்து கொண்டிருந்தன. அவற்றைக் கண்டேன். மதியம் வரை அங்கே சுற்றி விட்டு சபர்மதி ஆற்றங்கரைக்கு வந்தேன். முதல் நாள் வந்ததை விட இரு மடங்கு கூட்டம் இருந்தது. பல நாடுகளின் பட்டங்கள் பறந்து கொண்டிருந்தன. மாலை 6 மணி அளவில் வெளியே வந்தேன். அங்கே ஒரு சிறுவன் தன் நண்பர்களுடன் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் நான் வேட்டி உடுத்தியிருப்பதைக் கண்டதும் என்னிடம் வந்து ‘’கர்நாடகா?’’ என்றான். ‘’தமிழ்நாடு’’ என்றேன். ’’ராமேஸ்வரம்?’’ என்றான். ‘’ஆமாம்’’ என்றான். என்னிடம் ஆங்கிலத்தில் பேசினான். என் கையில் இருந்த புத்தகங்களை வாங்கி அவற்றின் தலைப்பை வாசித்தான். ’’உத்தராயணுக்காகவும் பட்டம் விழாவைப் பார்ப்பதற்காகவுமா அவ்வளவு தொலைவிலிருந்து வந்தீர்கள்?’’ என்று கேட்டான். ‘’உங்களுக்காக நான் பட்டம் விட்டுக் காட்ட விரும்புகிறேன்’’ என்றான். நான் அவன் எவ்விதம் பட்டம் பறக்க விடுகிறான் என்று பார்த்தேன். சிறுவர்கள் குழுவுக்கு அவனே தலைமை. தன் சகாக்களுக்கு சில குறிப்புகளைக் கொடுத்தான். அப்போது காற்று இல்லை. எனினும் தன் திறமையால் பட்டத்தை வானில் ஏற்றி விட்டு கணிசமான நேரம் நிலைநிறுத்தினான். என் கையில் இருந்த இரண்டு புத்தகங்களில் ஒன்றை அவனிடம் அன்புப் பரிசாக அளித்தேன். அவனும் அவன் குழுவும் மிகவும் மகிழ்ந்தது.
அவனுக்கும் அவன் குழுவுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன் என எண்ணிய போது என் கண்கள் உணர்வெழுச்சியால் கலங்கின.
***
ஷாயிபாக் ஆலயத்தின் வாசல் பகுதியில் அமர்ந்திருந்தேன். அங்கேயே நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று மனம் விரும்பியது. என் திட்டப்படி மறுநாள் புறப்பட வேண்டும். காலை 9.30க்கு ரயில். 36 மணி நேரம் பயணித்து ஊர் சேரும். நான் எந்த வாராந்திர ரயிலில் வந்தேனோ அதே ரயிலில் மீண்டும் ஊர் திரும்புகிறேன்.
அன்றைய தினம் இரவு உறங்கி விட்டு காலை 5 மணிக்கு விழித்து விட்டேன். தயாராகி டார்மிட்டரியை ’’செக் அவுட்’’ செய்தேன். வாயில் எண் 3ல் ‘’கேட் பாஸ்’’ கொடுத்து விட்டு ஆலயம் செல்ல வேண்டும் என்றேன். வாயிற்காவலர் ‘’கேட் பாஸ்’’ ஐ ஆலய வாயிலில் இருக்கும் வாயில் எண் 1ல் கொடுத்து விடுங்கள் என்றார். ஆலய வாசலில் பத்து நிமிடங்கள் அமர்ந்திருந்து விட்டு ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டேன்.
***
ரயில் வந்தது.
பூனா வரை கூட்டம். கல்புர்கி வரை இருக்கைகள் நிரம்பியிருக்கும் கூட்டம். கடப்பா தாண்டியதும் பெட்டியில் மொத்தம் 15 பேர் மட்டுமே இருந்தோம். அதில் ஒரு குழு வாபியில் ஏறியது. அவர்கள் 9 பேர். சென்னை செல்ல வேண்டியவர்கள் அவர்கள். ரேணிகுண்டாவில் வண்டி திசை மாற்றப்படும் விபரம் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆங்கிலத்தில் நான் கூறும் விபரம் அவர்களுக்குப் புரியவில்லை. அந்த குழுவின் தலைமை உறுப்பினனை ரயிலின் கார்டிடம் அழைத்துச் சென்று விபரத்தை அவரிடம் ஆங்கிலத்தில் சொன்னேன். அவர் அவனுக்கு ஹிந்தியில் விளக்கினார். அந்த 9 பேரும் ரேணிகுண்டாவில் இறங்கிக் கொண்டனர். பொதுப்பெட்டியில் 6 பேர் மட்டும். வண்டி அப்போதும் 4 மணி நேரம் தாமதம். வேலூர் தாண்டியதும் அசதியில் உறங்கி விட்டேன். கனவில் எனது ஆசிரியர் ஒருவர் வந்தார். எழுந்து பார்த்தால் விழுப்புரம். அங்கே ஒருவர் ஏறினார். அவர் மாநில அரசில் வேலை பார்ப்பவர். ‘’என்ன சார் இது ? ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல யாருமே இல்ல? இப்படி காலியா ஒரு வண்டியை நான் பார்த்ததே இல்ல ‘’ என்றார். சுருக்கமாக அந்த வண்டி குறித்து சொன்னேன். அவர் சிதம்பரம் செல்ல வேண்டும். விழுப்புரத்தில் நிகழ்ந்த குடும்ப நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தார்.‘’ நீங்க எங்கேயிருந்து வரீங்க? என்றார் என்னிடம். நான் பதில் சொன்னேன். ‘’என்ன தலைவரே சொல்றீங்க?’’ என்றார். வண்டி புதுச்சத்திரத்தில் கிராசிங்காக நின்றது. நான் உறங்கி விட்டேன். ஆழ்ந்த உறக்கம். வண்டி எங்கோ நின்று யாரோ ஏறுவது போல சத்தம் கேட்டு விழித்தேன். ‘’என்ன ஊர் ?’’ என ஏறியவரிடம் கேட்டேன். ‘’வைதீஸ்வரன் கோவில்’’ என்றார். துணிப்பையை எடுத்து வைத்துக் கொண்டேன். ஊர் வந்தது. ரயிலில் இறங்கி ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தேன். ரூ. 6000 எடுத்துச் சென்றதில் மீதி ரூ.2000 இருந்தது. எனது ஏழு வயதில் நான் படித்த பள்ளியில் பள்ளிக் குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் சென்றிருக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், சமயபுரம் ஆகிய ஊர்களுக்குச் சென்றோம். அப்போது எனக்கு வீட்டில் சுற்றுலாவில் செலவு செய்வதற்கு ரூ.15 வழங்கியிருக்கிறார்கள். அதில் ரூ. 7 ஐ திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விட்டேன் என்பதை வீட்டில் அவ்வப்போது சொல்வார்கள். அந்த சிறுவன் சிறு வடிவில் இன்னும் இருக்கிறான் என எண்ணிக் கொண்டேன்.
உத்தராயண் துவக்கம் சிறப்பாக இருந்தது. தை முடிந்து மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு காசி செல்ல திட்டமிட்டுள்ளேன். அடுத்த மாதத்தில் இன்னொரு 2000 கி.மீ பயணம்.
***