பண்பாடு என்பது மானுடத்தின் உச்சமான உணர்வுநிலை. மானுடத்தின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்று பாரதப் பண்பாடு. பாரத மண்ணில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டிய பெருமை கொள்ள வேண்டிய விஷயமாகும் அது. பாரத நாட்டவர் ஒவ்வொருவருக்கும் இந்நினைவு எப்போதும் இருக்குமாயின் அதனால் உலகுக்கு கதிமோட்சம் கிடைக்கும்.
பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்
பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்
என்பது தமிழ் மூதாதை பாரதியின் வாக்கு.
’’காவிரியிலிருந்து கங்கை வரை’’ மேற்கொண்ட மோட்டார்சைக்கிள் பயணத்தில் தெலங்கானாவில் நான் ஒரு காட்சியைக் கண்டேன். அன்று செவ்வாய்க்கிழமை. ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் ஓர் சிற்றாலயம். ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரி முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமானது என்பதை லாரியில் எழுதப்பட்டிருந்த பெயர் மூலம் அறிய முடிந்தது. அதன் டிரைவர் கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அவர் கழுத்தில் அணிந்திருந்த ஏசுநாதர் டாலர் மூலம் அறிய முடிதது. அவர் மிக மும்மரமாக லாரியை வாளிக்கணக்கில் நீர் ஊற்றிக் கழுவி லாரிக்கு மஞ்சள் குங்குமம் இட்டு சாம்பிராணி போட்டுக் கொண்டிருந்தார். அவர் ஆந்திரத்தின் தென்கோடியிலிருந்து வட இந்தியா நோக்கி செல்பவர். அவரிடம் கேட்டேன் : ‘’ நீங்கள் கிருஸ்தவர். உங்கள் உரிமையாளர் முஸ்லீம். லாரியைக் கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் இடுவது ஹிந்துக்களின் வழக்கம் அல்லவா?’’
என் கேள்விக்கு அவர் பதில் கூறினார். ‘’ லாரி தான் எங்களுக்கு எல்லாம். எங்கள் ஓனர் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் லாரியை கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும் என்று கூறுவார். அதை மிகவும் வற்புறுத்துவார். அவ்விதம் செய்வதன் மூலம் எங்களுக்கு பெரும் மனநிறைவு கிடைக்கிறது ‘’
பாரத நிலத்தில் பிறந்தவன் இறைமை தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் என்பதால் உலகில் அனைத்துமே இறை சொரூபமே என எண்ணுவான். பாரதப் பண்பாடு என்பது அதுவே.