Friday, 28 September 2018

நகைமுகத்தின் முன்

சிதறுகின்றன

அவசங்கள்
இழந்த நம்பிக்கைகள்
துண்டு துண்டாய் உடைத்த தோல்விகள்
விரும்பாமல் சேர்ந்த சோர்வுகள்

கருக்கிருட்டின்
கீழ்த் திசையில்
சிவந்தது
வானம்
ஏதோ ஒரு கணத்தில்
காற்று ஈரம் கொண்டிருக்கும் நாளில்
காட்சிகள் கழுவப்பட்டு தூயதாயிருக்கும் பொழுதில்
வழமையின் நியதிகளை நீக்கிக்கொண்ட தினத்தில்
புதுப்பிக்கப்பட்டு
மீண்டும் பிறக்கிறோம்
மீண்டும் இந்த உலகில்
மீண்டும் இந்த வாழ்வில்
எல்லையற்ற சாத்தியங்களுடன்
ஓர் இளம் தூறல்
காலைநடை
வான் நோக்கச் செய்கிறது
அடர் கருமேகங்களைப் பார்க்கிறீர்கள்
மெல்ல அவை ஆங்காங்கே நகர்வதையும்
ஈரத்தரையின் மீதான வட்டக்கோலங்களாக
மின்னுகின்றன
உதிர்ந்த மலர்கள்
மரமல்லி
செம்பருத்தி
கொன்றை
மலர்கள்
தூயதாயிருக்கின்றன
யாருமற்ற வீதிகள்
உடல் தொடும் நீர்த்துளிகளாய்
மனதைத் தொடுகிறது
துளி இனிமை
துளித்துளி இனிமை

Thursday, 27 September 2018

கால்களைத் தீண்டிச் செல்லும்
கடல்
யாசித்த
உள்ளங்கைகளில்
அமர்ந்தது
துளி
வானத்துடன்

Wednesday, 26 September 2018

துயரிலிருந்து
துக்கத்திலிருந்து
வலியிலிருந்து
இதம் அளிக்கும் கனிவு
புல்நுனியின் பனித்துளியாயிருந்து
ஒரு மலராகிறது
பின்னர்
ஒரு சூரியனாகவும்

Tuesday, 25 September 2018

நாகலிங்கம்

ஒரு பெரும் மைதானத்தின்
எல்லையில்
நிலவின் மது பரவும் இரவில்
கசிந்து கொண்டிருக்கிறது
அடர்ந்த பூவின் மணம்
நாகலிங்க மணம்

பொங்கும் நுரையீரலில்
கலக்கின்றன
மூன்று காலங்கள்

உடலின் எடை உதிர்த்து
உலவச் செல்கிறது
உயிர்
வெளியெங்கும்

சிதை நெருப்பாய்
சூழ்கிறது காற்று
தனித்திருக்கும் உடலை

பறக்கும் மேகம்
நிலவை
மூடுகையில்

உயிர்க்கிறது
உடல்
எல்லையற்ற காலத்தில்

Wednesday, 19 September 2018

ஒரு கணம்
உள்ளிருக்கும் புள்
குளிர்ந்து
உதறா ஈரத்துடன்
துடிதுடிக்கிறது
காற்றின் அசைவில் நடுங்குகின்றன
மென் இறகுகள்
ஒளி வானில்
சுழன்று
மீண்டு வந்தமர்கிறது
எப்போதும் இருக்கும் ஒன்று
கண்கள் திறக்கும் சிறுபுள்
தத்தித் தத்தி நடக்கிறது

Thursday, 13 September 2018

ஆனைமுகம்

அப்போது
திருமஞ்சன வீதியில்
குடியிருந்தோம்
யானைகள் குளிக்கப் போகும்
பெரும்பாலான நாட்களில்
யானை பார்க்க மிகவும் பிடிக்கும்
இப்போது போலவே
அம்மா கை விரல்கள் பற்றி பார்ப்பேன்
பின்னர்
யானை பின்னால் நடந்து சென்றேன்
கால்களை கரையில் வைத்து
உடலை நீரில் அமிழ்த்தி
தலையை உயர்த்திப் படுத்திருக்கும்
கருயானை
செதில் செதிலாய் அதன் தோல்
தூண்கள் போல் கால்கள்
துதிக்கையில் நீர் அள்ளி
கரை மேல் வீசும்
பேரொலியுடன்
மழைத் தூறல் போல்
மேலே படும்
பாகன்
சிறு கல்லால்
தேய்த்து தேய்த்துக் குளிப்பாட்டுவார்
யானைப் பாகனாக விரும்பினேன்
அப்போது
இப்போதும்
யானையைப் பார்க்கிறேன்
அப்போதிருந்த
மகிழ்ச்சியுடன்

Monday, 10 September 2018

ஒரு துயரம்
அடர்ந்து உருவம் கொள்ளும்
ஒவ்வொரு வினாடியிலும்
ஏறிக் கொண்டேயிருக்கிறது
பாரம்
இருள் நிறைந்த உணர்வுகள்
வெவ்வேறாய்
பெயர் ஏற்கின்றன
பற்பல காலமாய்
மட்கி அழிய காத்திருக்கின்றன
மாசின்மையின் துளி நீருக்காய்
எல்லைகள் அற்ற வானத்தில்

Saturday, 8 September 2018

உனது அருகாமையில்
சமன் கொள்கின்றன
சிக்கலான என் மன முடிச்சுகள்

தொலைவானில்
ஒளிரும் ஒரு விண்மீனை
ரொம்ப
நேரமாய்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அவ்வப்போது அது முறுவலிப்பதையும்

மென்காற்று
மோதிச் சென்ற போது
புதிதாய்ப் பிறந்தேன்
புதிய நம்பிக்கைகளுடன்
என்றோ ஒருநாள்
சாலைகளில்
மணக்கின்றன
பூக்கள்
மரணம் நாறும்
சவ ஊர்வலத்தில்