Wednesday 30 January 2019

தெரிவு

இன்று காலை நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். மிக இளைஞர். நான் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்த வேண்டும் என எப்போதும் பரிந்துரைப்பவர். நான் அலைபேசிப் பயன்பாட்டை நிறுத்தி விட்டு தரைவழித் தொடர்பு தொலைபேசியைப் பயன்படுத்தினால் என்ன என்று சில நாட்களாக யோசித்து வருகிறேன். எனது தொழில் சார்ந்த பணிகள் ஊருக்குள்ளேயே பெரும்பாலும் அடங்கி விடும். தொழில் நிமித்தம் வெளியூர் செல்வதன் தேவை பெரும்பாலும் இல்லை. சட்டை பாக்கெட், பேண்ட் பாக்கெட் இரண்டுமே அலைபேசியை வைத்துக் கொள்ள வசதியாக இல்லை. எங்காவது வெளியூர் சென்றால் சார்ஜர் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. கூடிய விரைவில் அதனைத் துறப்பேன் அல்லது வெளியில் எடுத்துச் செல்லாமல் தவிர்ப்பேன் என்றே நினைக்கிறேன்.
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் - என்பது பேராசானின் வாக்கு.

அவரிடம் கூறினேன்: மின்னணுப் பொருட்களிலிருந்து தள்ளி இருக்க எப்போதும் விரும்பியிருந்தாலும் மின்னஞ்சலை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறேன். அப்போதெல்லாம் தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது என்பது இயலாத காரியம். கணிணி எல்லார் கையிலும் இருக்காது. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையாவது மின்னஞ்சல் பார்க்கும் வழக்கம் இருந்தது. வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மின்னஞ்சலைக் கண்டு மகிழ்வர். பதில் அனுப்புவார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் மடிக்கணிணி வாங்கி பயன்படுத்தத் துவங்கினேன்.

நான்கு ஆண்டுகளாக மடிக்கணிணியில் எழுதுகிறேன். எழுதுவதும் இலக்கியத் தளங்களைப் பார்ப்பது மட்டுமே மடிக்கணிணியில் செய்கிறேன்; அல்லது அது மட்டுமே செய்யத் தெரியும். ஒரு முறை நண்பர் ஒருவரிடம் ‘’கட் காப்பி பேஸ்ட்’’ பயன்படுத்துவது எப்படி என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். வேர்டில் எழுதி இணையத்தில் ‘’கட் காப்பி பேஸ்ட்’’ செய்ய அது வசதியாக இருந்தது.

என்னினும் இளையோர்களைச் சந்திக்கும் போது அவர்கள் நான் தமிழில் அனுப்பும் மின்னஞ்சல்கள் குறித்து கேட்பார்கள். எப்படி தமிழில் எழுதுகிறீர்கள் என சொல்லித் தாருங்கள் என்று சொல்வார்கள். நான் சொல்லித் தருவேன்.

நாம் எதை முக்கியமாக நினைக்கிறோமோ அதைச் சென்றடைகிறோம். நாம் எதை முக்கியமாக நினைக்கிறோம் என்பதை நாம் தான் தெரிவு செய்கிறோம்.