Wednesday 6 February 2019

ஊர் சுற்று

1994ல் எங்கள் வீட்டில் ஒரு முருங்கை மரம் இருந்தது. அதன் காய்ப்பு அபரிமிதமானது. ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அதுவும் எக்கச்சக்கமாக காய்க்கும். அப்பாவும் அம்மாவும் பூசணி பரங்கி ஆகியவற்றை தோட்டத்தில் பயிரிட்டிருப்பர். அம்மாவும் அப்பாவும் நம்மிடம் இருப்பதை அண்டை வீட்டுக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் உவந்து கொடுத்து மகிழ வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். அந்த ஆண்டுகளில் எனது பணிகளில் ஒன்று இந்த காய்கறிகளை எனது தந்தையின் அலுவலகத்தில் பணி புரியும் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று கொடுத்து விட்டு வருதல். கிட்டத்தட்ட பதினைந்து பேரின் வீட்டுக்குச் சென்று கொடுத்து விட்டு வருவேன். எனது சைக்கிளில் ஒரு பெரிய துணிப்பையில் இவற்றை எடுத்துக் கொண்டு செல்வேன். ஒவ்வொரு வீட்டிலும் என்னைப் பிரியமாக வரவேற்பார்கள். என்னைப் பாராட்டி நற்சொற்கள் சொல்வார்கள். ஊக்கப்படுத்துவார்கள். என் படிப்பு குறித்து பள்ளி குறித்து விசாரிப்பார்கள். நானும் அதிகாரபூர்வமாக ஊர் சுற்ற வாய்ப்பு கிடைக்கிறதே என்று கிளம்பி விடுவேன். அப்போது அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போது அவர்கள் வீட்டை வீட்டில் உள்ள பொருட்களை அவர்கள் ஆர்வம் கொள்ளும் விஷயங்களை கவனித்துக் கொள்வேன். ஒவ்வொருவரின் வீடும் ஊரின் ஒவ்வொரு பகுதியில் இருப்பதால் எல்லா வீடுகளையும் இணைக்கும் விதமாக குறைவான தூரம் கொண்ட பாதை எதுவாக இருக்கும் என யோசித்து வைத்திருந்தேன். நகர் பல வருடங்களுக்குப் பின் நான் யோசித்திருந்த சில தடங்களின் படி விரிவானது என்பது ஒரு சுவாரசியமான விஷயம். சிலர் அவர்கள் வீட்டில் விளைந்த கீரை அல்லது கிடாரங்காய் ஆகியவற்றைத் தருவார்கள். அவ்வாறு செல்லும் போது சினிமா போஸ்டர்களை வேடிக்கை பார்ப்பேன். அரசியல் போஸ்டர்களை படிப்பேன். அதன் வாசகங்கள் ஆர்வமூட்டுவதாக இருக்கும். மாலைப் பத்திரிக்கையின் செய்தி அறிவிப்புகளைக் காண்பேன். சில வீடுகளில் அவர்களின் சில சிக்கல்களுக்கு பெண்கள் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள். அவர்கள் கவலைகளைச் சொல்வார்கள். என்னிடம் ஏன் சொல்கிறார்கள் என்று தோன்றும். நான் பரீட்சையில் என்ன மதிப்பெண் எடுத்தேன் என்று விசாரிப்பார்கள். இன்னார் இன்ன விதமாக கேள்வி கேட்பார் என்ற புரிதலும் இன்னாரிடம் சொல்வதற்கு இன்ன கதை இருக்கும் என்ற தெளிவும் அந்த ஊர் சுற்றுகளின் மூலம் பெற்றேன்.