Monday 11 February 2019

ஆர்வலர் புண்கணீர்

2003ம் ஆண்டு பொறியியல் இறுதி ஆண்டு படித்த போது நண்பர் மகளின் திருமணத்திற்கு கும்பகோணம் சென்றிருந்தேன். அத்திருமண நிகழ்வுகளை ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் ஒப்பந்தக்காரர் ஒருவர் ஒருங்கிணைத்தார். அவருடைய குழுவில் பதினைந்து பேர் இருந்தார்கள். நான் முதல் நாள் மதியத்திலிருந்து அங்கே இருந்தேன். அந்த குழுவில் ஒரு அம்மா இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு கைக்குழந்தை இருந்தது. கோலம் போடுவது, தாம்பாளங்களில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தேவையான மங்கலப் பொருட்களை எடுத்து வைப்பது, புரோகிதருக்கும் மண வீட்டாருக்கும் திருமணச் சடங்குகளில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது ஆகியவை அவரது பணிகள். கோலம் போடும் பணியை முதல் நாள் மதியத்திலிருந்தே செய்து கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அவர்கள் கோலத்திற்கு புள்ளி இட்டிருந்தால் உற்சாக விளையாட்டில் அங்கே இங்கே ஓடும் போது அழித்து விடும். எவ்வித முக மாற்றமும் இன்றி மீண்டும் கோலம் போடுவார். சமயத்தில் பெரியவர்களே கவனிக்காமல் கடந்து செல்வார்கள். தனி ஒருவராக குத்து விளக்குகளுக்கு திரி எண்ணெய் இட்டுக் கொண்டிருப்பார். அவ்வப்போது தன் குழந்தையை ஒரு ஏக்கத்தோடு கவனிப்பார். விருந்தினர்கள் அனைவரும் உணவு உண்டார்களா என்று அநேகமாக எல்லாரையும் கேட்டு உறுதி செய்து கொள்வார். அத்திருமணத்தில் எல்லா நிகழ்வுகளும் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அதற்கு அவரே முக்கிய காரணம். மறுநாள் திருமணம் முடிந்து வழிஉணவுடன் அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். அனைவருக்கும் உணவுப் பொட்டலங்கள் கிடைத்ததா என்று உறுதி செய்து கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்று வணங்கி என் பெயரைக் கூறி பொறியியல் படிக்கிறேன் என அறிமுகம் செய்து கொண்டேன். இரண்டு நாட்களாக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினீர்கள் . அதனை உடனிருந்து கண்டது எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது என்று சொன்னேன். அந்த அம்மா சட்டென கண் கலங்கி விட்டார்கள்.