Wednesday 10 April 2019

வாழ்க்கை ஒரு திருவிழா

நேற்று எனது திருவாரூர் நண்பர் ஒருவருடன் மன்னார்குடி வெண்ணெய்த்தாழி உற்சவம் காண சென்றிருந்தேன். சென்ற வாரத்தில் திருவாரூரில் ஆழித்தேர் உற்சவம். மனம் தன் வழக்கமான இயங்குமுறையை சற்று தொலைவில் வைத்து விட்டு உற்சாகமாக இருந்தது. இவ்விழாக்களை முகாந்திரமாகக் கொண்டு பலவிதமான எண்ணங்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு எண்ணத்தின் பின்னாலும் சென்று கொண்டிருந்தேன். நம் சமூகத்தின் பொது வெளியை உருவாக்குவது சமயமே. நமது பண்பாடு சமயத்தை அடித்தளமாகக் கொண்டு சமயத்திலிருந்து எழுந்து வளரக் கூடிய தன்மை கொண்டது. விதையில் உறங்கும் மரத்தின் உயிர் போல நம் பண்பாட்டில் சமயம் இருக்கிறது. நமது சமயம் பல்வேறு விதமான பாதைகளையும் சமமாக பாவிக்கும் தன்மை கொண்டது. அவை அனைத்தையும் அங்கீகரிப்பது. இந்தியாவிற்கென தனிச்சிறப்பாக உள்ள பண்பாடு காக்கப்பட வேண்டும் எனில் இந்திய சமயங்கள் உயிர்த்தன்மையுடன் காக்கப்பட வேண்டும். 

தமிழ்ச் சமூகங்கள் கடந்த இருபதாண்டுகளில் பொருளாதார ரீதியாக எழுகின்றன. எல்லா கிராமங்களும் சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. எல்லா வீட்டுக் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று கல்வி பயில்கின்றன. குடும்பக் கட்டுப்பாடை பெரும்பாலான குடும்பங்கள் ஏற்றுள்ளன. ஒரு குழந்தை இரண்டு குழந்தைகளே எல்லா வீட்டிலும் இருக்கின்றன. மூன்று குழந்தைகள் உள்ள வீடுகள் மிக அபூர்வமாகவே உள்ளன. மருத்துவ வசதி எல்லா கிராமங்களுக்கும் கிடைக்கிறது. இரு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் பெருகி விட்டன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கு இப்போது வறுமை பெரிய அளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. 

பொருளியல் வளர்ச்சி பெறும் எந்த சமூகத்திலும் அதன் அடிநிழலாக சில தவிர்க்க முடியாத விளைவுகள் ஏற்படும். பொருளியல் வளர்ச்சி பெறும் சமூகங்கள் மதுவின் பின்னாலும் கட்டற்ற கேளிக்கையின் பின்னாலும் செல்லும் என்பது பொருளாதாரத்தின் அவதானங்களில் ஒன்று. இன்று தமிழ்ச் சமூகம் அவ்வாறான நிலையில் உள்ளது. 

தமிழகத்தின் முக்கியமான கோவில்கள் விஜயநகர ஆட்சிக் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு மக்களை இணைக்கும் மையங்களாக உருவாக்கப்பட்டிருந்தன. சிற்பம், ஓவியம், நடனம், இசை, நெசவு, இலக்கியம் ஆகியவை ஆலயங்களை மையமாக வைத்து பயிலப்பட்டுள்ளன. கலைஞர்கள் ஆலய வருவாயிலிருந்து பராமரிக்கப்பட்டுள்ளனர். ஒரு சமூகத்தின் கலை உணர்வு சிறப்பாக இருக்கும் போது மட்டுமே அச்சமூகம் முன்னேற்றத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் செல்லும். 

இன்று கலைகள் அரசாலும் சமய நிறுவனங்களாலும் கைவிடப்பட்டுள்ளன. நாகஸ்வர வித்வான்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் சொந்த விருப்பத்தாலும் பொதுமக்கள் ஆதரவாலும் மட்டுமே இயங்கக் கூடிய நிலைக்குச் சென்றிருக்கின்றனர். இந்நிலை தொடருமென்றால் தமிழ்ச் சமூகம் கலை வறுமையால் தாழ்வுறும். 

தமிழகத்தின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான ஆலயங்கள் அனைத்திலும் மிக அதிக எண்ணிக்கையில் பூசகர்கள், நாகஸ்வர கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோர் உயர் ஊதியத்தில் நியமிக்கப்பட்டு அவர்கள் பராமரிக்கப்பட வேண்டும். அவர்கள் ஆலய வழிபாட்டு நேரம் போக மற்ற நேரத்தில் ஊரில் இருக்கும் ஆர்வம் மிக்க குழந்தைகளுக்கு சமயமும் இசையும் நடனமும் பயிற்றுவிக்க வேண்டும். 

ஒரு கல்விச்சாலையில் ஒன்றாய் கல்வி பயிலும் மாணாக்கர் மத்தியில் ஏற்படும் ஒருங்கிணைப்பு சமூகத்தில் சாதகமான விளைவுகளை உருவாக்கும். கலை கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் தரும். சமூகம் முன்நகர வாய்ப்பு உருவாகும்.