Monday 22 April 2019

நடை

எனது நண்பர் ஓர் அறக்கட்டளையைச் சென்னையில் நடத்துகிறார். கல்வி சார்ந்த பணிகளில் ஆக்கபூர்வமாக செயல்படுகிறது அந்த அறக்கட்டளை. அதன் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக ஒரு சமணத் துறவியை அழைத்திருக்கிறார். துறவி அப்போது மைசூரில் இருந்திருக்கிறார். நண்பர்  மற்ற அறக்கட்டளை பொறுப்பாளர்களுடன் மைசூர் சென்று நேரில் விபரம் சொல்லி தங்கள் அழைப்பை ஏற்குமாறு கேட்டுக் கொண்டனர். துறவி சம்மதித்து நிகழ்ச்சி நடக்கும் நாள், நேரம், இடத்தை ஒரு காகிதத்தில் எழுதி தனது சிறிய துணிப்பையில் வைத்துக் கொண்டார். இவர்கள் விடைபெற்றுக்  கிளம்பினர். துறவியிடம் அலைபேசி இல்லை. ஆதலால் அவரை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாது. நிகழ்ச்சி நாள் நெருங்கியது. அதற்கு முதல் நாள் மைசூரில் துறவியைச் சந்தித்த இடத்திற்கு ஃபோன் செய்து துறவி ரயிலில்  வருகிறாரா எந்த  ரயில் நாங்கள் அவரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்து தங்க வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர் இங்கே இல்லை; சென்று பல நாட்கள்  ஆகிவிட்டதாக பதில் சொல்லியிருக்கின்றனர். ஏற்பாட்டாளர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மற்ற சிறப்பு விருந்தினர்கள் இருப்பதால் துறவி வரவில்லையானாலும் சமாளித்து விடலாம் என முடிவு செய்து மற்ற  ஏற்பாடுகளைப்  பார்த்துள்ளனர். 

நிகழ்ச்சி நாள். நிகழ்ச்சி நேரம்  காலை பத்து மணி. குறித்த நேரத்துக்கு பதினைந்து நிமிடம் முன்பு துறவி விழா அரங்கில்  நுழைந்திருக்கிறார். அனைவருக்கும் மெத்த மகிழ்ச்சி. நிகழ்ச்சி துவங்கியிருக்கிறது. துறவியைப் பேச அழைத்திருக்கிறார்கள். துறவி பேச வந்ததும்  மைக்கை ஆஃப்  செய்து  விட்டு  பேசியிருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்நூறு  பேர் கலந்து கொண்ட கூட்டம். கடைசி  வரிசையையும் தாண்டி  வாசலில் இருந்த  வாட்ச்மேன் வரைக்கும்  அவர்  பேசியது தெள்ளத் தெளிவாகக்  கேட்டது என்றனர். தன்னால் தனது குரலை இந்த சிறிய  கூட்டத்தில்  உள்ள அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடியும் என்பதால் இப்பொழுது இந்த எந்திரத்தை சாராமல்  இருக்கிறேன்  என்று  விளக்கியிருக்கிறார். துறவி  தனது  பேச்சில் தான் மண்ணியலில்  ஆய்வு  முனைவர் பட்டம் பெற்றிருப்பதை சொல்லியிருக்கிறார். அனைவருக்கும் அதிர்ச்சி. கல்வி குறித்தும் சமணத்தின்  கல்விப் பார்வை குறித்தும் துறவி விரிவாகப் பேசியதாக நண்பர்  சொன்னார். மற்றவர்களும் பேச நிகழ்ச்சி முடிந்தது.

நண்பர் துறவியிடம் முந்தைய தினம்  தாங்கள் மைசூர் தொடர்பு  கொண்டதைக் கூறி துறவி  எங்கிருந்து  வருகிறார்  என்று கேட்டிருக்கிறார். தான் பெங்களூரில் இருந்து  வருவதாகக் கூறியிருக்கிறார் துறவி. எந்த  ரயிலில் வந்தீர்கள் என்று விசாரித்திருக்கிறார். தான் எங்கு சென்றாலும் வாகனங்களையோ எந்திரங்களையோ சாராமல் நடந்தே செல்வேன். அதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளேன்;  துறவு பெற்ற பின் எந்த வாகனத்திலும் ஏறியதில்லை என்று அவர் சொன்னதைக் கேட்டு திகைத்து விட்டார்  நண்பர்.

இடையில் ஒரு வெள்ளாடை. தோளில் ஒரு வெள்ளாடை. பையில் ஒரே ஒரு செட் இடையாடை மற்றும் தோளாடை. துறவியிடம் இது மட்டுமே இருந்திருக்கிறது.

துறவி கிளம்பியிருக்கிறார்.

நண்பர் அடுத்த நிகழ்ச்சி என்ன என்று  விசாரித்திருக்கிறார்.  

‘’அடுத்த வாரம் ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறேன். அங்கு செல்கிறேன்’’

அனைவரும் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அவரைப் பார்த்துள்ளனர்.

‘’ஹைதராபாத் சென்று விட்டு டெல்லி செல்ல வேண்டும்; அடுத்த மாதம் முதல் வாரத்தில் அங்கே ஒரு நிகழ்ச்சி’’ 

துறவி கிளம்பி விட்டார்.