Wednesday 1 May 2019

ஆழம்

மௌனம் அடர்ந்திருக்கும்
மலைகளின்
குளிர்க் காலைப் பொழுதுகளைப் பற்றி
கேட்டுக் கொண்டிருந்த போது
புல்நுனி பனிநீரின் தூய்மை
உன் முகத்தில்
நிறைந்தது

முற்பகலில் கடந்து சென்ற
வனாந்தரங்களின் நிழல்
குறித்து சொன்ன போது
அடர்ந்த இலைகளால்
கூரையிடப்பட்ட
ஈரப்பசுமை
உன் சொற்களில்
வெளிப்பட்டது

பிற்பகலில்
ஒரு சிறு சாலையில்
கிளை பிரிந்து சென்ற
மண்பாதையின்
முடிவில்
இருந்த சிற்றாலயத்தின்
கருங்கல் படிக்கட்டுகளில்
அமர்ந்து கண்ட
தடாகத்தைக் காட்சிப்படுத்திய போது
நீ
கணந்தோறும் மலரும்
மலரானாய்

மாலையில்
ஒரு சிறு குன்றின்
பாறை
ஒன்றின் மீதமர்ந்து
கண்ட
முதல் நட்சத்திரம் குறித்து
கேட்ட போது
நீ புன்னகைத்தாய்
விண்மீன் போல

அந்த மாநகரின் இரவில்
அன்னையின் தோள்களைக்
கட்டிக் கொண்டு
வெட்கத்தால் முகம் நாணும்
குழந்தையைப் பற்றி
உன்னிடம் சொன்ன போது
நீ ஆனாய்
ஒரு பிள்ளையாக
ஓர் அன்னையாக