Friday 31 May 2019

மகாத்மா - ஒரு செயல்திட்டம்

இந்திய சமூகம் ஒருங்கிணைய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் தங்கள் பணியை மகாத்மாவிலிருந்தே துவக்குகிறார்கள். மகாத்மாவின் வாழ்க்கையும் சொற்களும் நம்மை எப்போதும் வழிநடத்தக் கூடியதாக இருக்கின்றன. இன்றைய இளைய தலைமுறைக்கு மகாத்மா குறித்த அறிமுகத்தை அளிக்க கிராமங்களுக்குச் சென்று இளைஞர்களைச் சந்திக்கலாம் என்று இருக்கிறேன். நாம் யார் - நமது சமூகத்தின் இன்றைய நிலை என்ன- நமது விடுதலைப் போராட்டத்தில் காந்தி எவ்விதமான பங்காற்றினார்- நமது சமூகம் எப்படி இருக்க வேண்டும் என அவர் விரும்பினார்- போன்ற பல விஷயங்களை இன்றைய இளைஞர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று எண்ணுகிறேன். 

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் லூயி ஃபிஷரின் ‘’லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி’’ நூலை வாசித்தேன். அந்நூல் எனக்கு பெரும் ஆறுதல் அளித்தது. நம்மை எப்போதும் மன்னிக்கும் நேசிக்கும் மண்ணின் மகத்தான மனிதனை அறிய நேரிட்டதன் ஆறுதல் அது. பின்னர் வாசித்த ஜெயமோகனின் ‘’இன்றைய காந்தி’’. காந்தி மீது அரசியல் காழ்ப்புணர்வால் முன்வைக்கப்படும் பொய்யான பல குற்றச்சாட்டுகளுக்கான பதிலை முன்வைத்தது. 

காந்தியை அறிமுகம் செய்து கொள்வதன் மூலம் சுருக்கமாக இந்திய வரலாறு குறித்த அறிமுகத்தை இளைஞர்கள் பெற முடியும். 

சில நாட்களுக்கு முன்னால் எழுந்த எண்ணம் இது. நான் முக்கியமான காந்தி குறித்த நூல்களை வாசித்தவன். இப்போது அவற்றை மீண்டும் வாசிக்க உள்ளேன். நண்பர்கள் சிலரிடம் இதனை எவ்விதமாக முன்னெடுக்கலாம் என ஆலோசனை கேட்டுள்ளேன். அவர்கள் பயனுள்ள சில ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த விஷயம் தொடர்பாக முன்னெடுக்கும் செயல்களை தளத்தில் தொடர்ந்து பதிவிடுகிறேன்.

காந்திய வழிமுறைப்படி, சிறு அளவில் துவங்கி செய்து பார்க்கலாம் என உத்தேசித்துள்ளேன். ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள இளைஞர்களைச் சந்தித்து ஒரு மரத்தடியில் அல்லது ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து எளிய முறையிலான உரையாடல் மூலம் கூற நினைப்பதைக் கூறுவது எனத் திட்டமிட்டுள்ளேன். இதில் பொருட்செலவு ஏதுமில்லை. நேரம் கொடுத்தால் மட்டும் போதும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கொடுத்தால் கூட போதும். கிராமப்புற இளைஞர்கள் எவ்விதம் எதிர்கொண்டார்கள்- எவ்விதம் புரிந்து கொள்கிறார்கள்- என்ன கேள்விகள் அவர்களுக்கு காந்தியைக் குறித்து இருக்கின்றன என்பதை அவதானிக்கவும் நேரடியாகப் புரிந்து கொள்ளவும் முடியும். அவை நம் நிகழ்காலத்தை நமக்கு உணர்த்தும். வெள்ள நிவாரணப் பணிகளில் நிவாரண உதவிகளைச் சேகரித்த மக்களுக்கு வழங்கிய கள அனுபவம் எனக்கு உண்டு. காந்தி குறித்த செயல்திட்டம் குறித்து தங்கள் எண்ணங்களையும் அபிப்ராயங்களையும்  எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளையும் வழங்குமாறு நண்பர்களையும் வாசகர்களையும் கேட்டுக் கொள்கிறேன். சிறு ஆலோசனையும் திட்டமிடுதலிலும் செயலாக்கத்திலும் மிக முக்கியமானதாக  இருக்கக் கூடும்.

 எனது மின்னஞ்சல் முகவரி : ulagelam(at)gmail(dot)com