Friday 24 May 2019

தேர்தல்


1989ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் எனது நினைவில் இருக்கிறது. அப்போது நாங்கள் பாபநாசத்தில் குடியிருந்தோம். எனக்கு எட்டு வயது. பாபநாசம் தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவர் ஜி. கே. மூப்பனார். அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய அன்றைய பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி கும்பகோணம் வந்திருந்தார். கல்லூரி மைதானம் ஒன்றில் ராஜிவின் ஹெலிகாப்டர் வந்திறங்கியது நினைவில் இருக்கிறது. அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னால் ராஜிவை சீர்காழியில்  பார்த்தேன். தனது ஜீப்பை தானே ஓட்டியவாறு வந்தார். உடன் பயணித்தவர் சோனியா. ’89 சட்டசபை தேர்தலில் ஓட்டு கேட்டு மூப்பனார் எங்கள் தெருவுக்கு பலமுறை வந்தார். நான் மூப்பனார் வெற்றி பெற வேண்டும் என விரும்பினேன். தி.மு.க காரர்கள் ஓட்டு கேட்டு வீட்டுக்கு வந்த போது நான் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா என்று கேட்டனர். இருக்கிறார்கள் ஆனால் எங்கள் வீட்டில் எல்லாரும் மூப்பனாருக்குத்தான் ஓட்டு போடுவோம் என்று சொன்னேன். எனது அரசியல் அவதானம் அங்கிருந்தே தொடங்கியது.

எனது பாட்டனார் காந்தியைப் பார்த்திருக்கிறார். தீவிரமான காங்கிரஸ் ஈடுபாடு கொண்டவர். எனது தந்தை காமராஜர் மேல் பெரும் அபிமானம் கொண்டவர். அவரே எனக்கு இந்தியா குறித்த இந்திய தேசியம் குறித்த துவக்கச் சித்திரங்களை அளித்தார். அவரது சொற்கள் வழியாகவே இந்திய அரசியல் குறித்த அபிப்ராயங்கள் எனக்கு உருவாயின. வீட்டில் அனைவரும்  தினமணி வாசகர்கள். அப்போது அதன் ஆசிரியர் திரு. ஏ. என். சிவராமன். அப்பா துக்ளக் வாங்குவார். சட்டசபை, திராவிடக் கட்சிகளின் பொதுக்குழு ஆகியவற்றுக்கு கூட்டமாக கழுதைகள் செல்லும் கார்ட்டூன்கள் அரசியலை வேறு கோணத்தில் காண வைத்தன. தினமணியில் வந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விளம்பரம் ஒன்று ‘’காங்கிரஸ் என்றால் மக்கள்’’ என்றது. மாடு மேய்ப்பவர்கள் கைகளுக்குக் கூட ரேடியோவை கொண்டு சேர்த்திருக்கிறோம் என்றது.

நான் வி.பி.சிங்கை விரும்பினேன். அவர் நம்பத் தகுந்தவர் என்று தோன்றியது. அவரது தோற்றம், மெல்லிய புன்னகை, மென்குரல், அவரது கம்பளித் தொப்பி ஆகியவை அவரை மனதுக்கு அணுக்கமாக ஆக்கின. அவரது அமைச்சரவை சகாவான ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸும் மனதுக்குப் பிரியமானவர் ஆனார். அவர்கள் வழியே ஜெயப்பிரகாஷ் நாராயணன் குறித்து அறிந்தேன். நெருக்கடி நிலை குறித்த செய்திகளையும்.

அறிஞர் என்பதால் நரசிம்ம ராவ் மீது பெரும் மதிப்பு இருந்தது. பலமொழிகள் பேசத் தெரிந்தவர். பார்ப்பதற்கு சாதுவானவர். ஆனால் உறுதியாகச் செயல்படக் கூடியவர் என்பது அவர் மீதான விருப்பத்துக்கு காரணமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் ‘’இந்தியா டுடே’’ தமிழ் இதழ் வாசிப்பேன். அதன் வண்ணப்படங்கள். புள்ளிவிவரங்கள். கருத்துக்கணிப்புகள் ஆகியவை ஆர்வமளித்தன.

1996ல் வாஜ்பாய் ஆட்சியமைக்க அழைக்கப்பட்டார். மாநிலக் கட்சிகள் அவரை ஆதரித்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். பதிமூன்று நாட்களே அந்த அரசு நீடித்தது. பின்னர் ‘98ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்தது. பதிமூன்று மாதங்கள் நீடித்த அந்த அரசு ஒரு வாக்கில் தோற்றது வருத்தம் தந்தது. அப்போது எனக்கு 18 வயது. ‘99ம் ஆண்டு எனது முதல் வாக்கை பதிவு செய்தேன்.

எனது அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் பலவிதமான நூல்களைத் தேடிப் படிக்க வைத்தன. மார்க்ஸியம் குறித்து வாசித்தேன். ஆயுதப் போராட்டங்கள் குறித்து படித்தேன். உலகப் போர்கள் குறித்து படித்தேன். இந்திய வரலாற்றை வாசித்தேன். லூயி ஃபிஷரின் ‘’தி லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி’’ வழியாக மகாத்மா காந்தியிடம் வந்து சேர்ந்தேன்.

ஓர் எழுத்தாளனாக இன்று நான் அரசியலைப் புரிந்து கொள்ளும் விதம் முற்றிலும் வேறானது. தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியனையும் சென்று சேர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் மக்களாட்சியின் அடிப்படை அலகான மக்கள் சமூகப் பிரக்ஞை கொண்டிருப்பதும் சமூகத்தில் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றுவதுமே எல்லாருக்கும் நன்மை தரும். ஜனநாயகத்தில் எல்லா அரசியல் கட்சிகளுமே மக்களின் கருவிகளே. மக்களை குடிமைப் பண்புகளுக்கு பயிற்றுவிக்கும் அரசியலே இப்போது தேவை. 

இந்திய சமூகம் மேலும் சமூகப் பிரக்ஞை கொள்ளட்டும்.