Thursday 13 June 2019

ராஜிவ் படுகொலை புலனாய்வு

ராஜிவ் படுகொலையைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட நூல்கள் டி.ஆர்.கார்த்திகேயன் எழுதிய ‘’வாய்மையின் வெற்றி’’ மற்றும் கே. ரகோத்தமன் எழுதிய ‘’ராஜிவ் கொலை வழக்கு’’. இருவருமே வழக்கின் புலனாய்வில் இருந்தவர்கள். இருவரும் அந்த வழக்கைப் பார்க்கும் விதத்தில் சிறிய மற்றும் பெரிய வித்யாசங்கள் இருக்கின்றன.

அவர்கள் தங்களுக்கு விதித்திக் கொள்ளும் சுயகட்டுப்பாடுகளைத் தாண்டி வழக்கைப் பற்றிய அவர்களுக்கே உரிய சில அவதானங்கள் வெளிப்படவே செய்கின்றன. 

டி.ஆர்.கார்த்திகேயன் இந்திரா குடும்பத்துடன் தான் அறிமுகம் ஆகும் விதத்தையும் அவர்களுடனான தனது பழக்கத்தையும் சொல்கிறார். இந்திய அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு விஷயம் புலப்படும். இந்திய அதிகார வர்க்கம் காங்கிரஸ் மீது சற்று மனச்சாய்வு கொண்டது. நேரு குடும்பம் ராஜ தர்பார்களுக்கும் விருந்துகளுக்கும் பெரும் பழக்கம் கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சி இவ்வாறான தோரணைகளாலேயே நிலைபெற்றிருந்தது. அதனை இந்திய சமஸ்தான மன்னர்கள் ஏற்றிருந்தனர். இந்திய அதிகார வர்க்கத்துக்கு ஆட்சி என்றாலே தர்பார்களும் விருந்துகளும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தனர். மகாத்மா காந்தி இந்திய அரசியலுக்கு நுழைந்த பின்னர் அவர் அரசியலில் சாதாரண மக்களைக் கொண்டு வருகிறார். ஜனநாயகத்தின் ஆகப் பெரிய சாத்தியமே சாதாரணர்களின் பங்கேற்பே என்பதை நுட்பமாக நிறுவுகிறார். காங்கிரஸில் தன்னுடைய இடத்தை நேரு காந்தியின் ஆதரவு மூலம் அடைகிறார். நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆகிறார். பிரிட்டிஷ் வைஸ்ராய்கள் இருந்த இடத்தை நேரு குடும்பம் நிரப்புகிறது. பெரும் விருந்துகள், கொண்டாட்டங்கள் இவற்றினூடாக ஆட்சி இயங்க ஆரம்பிக்கிறது. இந்த எல்லைகளைத் தாண்டி நேரு அறிஞர்; மானுட சமத்துவம் மேல் நம்பிக்கை கொண்டவர் என்பதால் அவர் மக்கள் ஆதரவைப் பெறுகிறார். நேரு ஒவ்வொரு முறை தேர்தலில் மக்களைச் சந்திக்கும் போதும் காந்தியின் பெயரைச் சொல்லியே ஓட்டு கேட்கிறார். ஆதலால் காங்கிரஸின் பண்புகளில் ஒன்று அது அதிகாரிகளை மதிக்கும் என்பதும் நம்பும் என்பதும் அவர்கள் வழியாகவே அனைத்தையும் செயல்படுத்தும் என்பதும். எனவே நேரு குடும்பம் ஆட்சிப்பணியில் இருக்கும் அதிகாரிகளிடம் மிகவும்  இணக்கமாக இருந்திருக்கிறார்கள். .  இதனை பல வெளியுறவு அதிகாரிகள் தங்கள் சுயசரிதைகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். நேரு குடும்பத்தினர் தங்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து அவர்கள் பக்கம் பக்கமாக எழுதியுள்ளார்கள்.காங்கிரஸ்காரர்களுக்கு ஆட்சி நிர்வாகத்துக்கும் கட்சிக்கும் பெரிய வித்யாசமில்லை. சோஷலிஸ்டுகளின் கம்யூனிஸ்டுகளின் அரசியல் வேறு விதமானது. அவர்களுடைய ஆதரவு பின்புலம் அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள். அவர்கள் அதிகாரிகளுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருப்பதால் அவர்களால் அதிகாரவர்க்கத்தை நெருங்க முடியவில்லை.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஒரு தீர்வை ஏற்படுத்த முதலமைச்சர் குண்டு ராவுக்கு அப்போது கர்நாடகக் காவல்துறையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் டி.ஆர்.கார்த்திகேயன் உதவுகிறார். அவர் பணியின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் தலைமை அறிகிறது.  அப்போது ராஜிவ் கட்சிப் பொறுப்பில் இல்லை; இந்திராவின் ஒரு செய்தியுடன் வந்திருக்கிறார். அப்போது ராஜிவும் டி.ஆர். கார்த்திகேயனும் சந்திக்கிறார்கள். பின்னர் இந்திரா சுடப்பட்ட அன்று, டி.ஆர் கார்த்திகேயன் கல்கத்தாவில் இருக்கிறார். ராஜிவும் கல்கத்தாவில் இருக்கிறார். இன்னும் இறப்பு உறுதிசெய்யப்படவில்லை. அப்போது சில நிமிடங்கள் ராஜிவிடம் பேசுகிறார். இலங்கை பிரச்சனை தொடர்பாக இந்திய அரசு உண்மை நிலவரத்தைக் கண்டு அறிந்து தெரிவிக்க டி.ஆர். கார்த்திகேயனை அனுப்புகிறது. அப்போது இலங்கை சென்றதால் அச்சிக்கலின் ஊடுபாவுகளை நுட்பமாக அறிகிறார் கார்த்திகேயன்.

ராஜிவ் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும், டி. ஆர். கார்த்திகேயனின் மனம் இதனை விடுதலைப் புலிகள் செய்திருக்கக் கூடாது என்று எண்ணுகிறது. அவ்வாறு அதனை விடுதலைப் புலிகள் செய்திருப்பார்களேயாயின் இலங்கையில் தமிழர்களின் துயர் தீரவே தீராது என்று அவரது உள்ளுணர்வு சொல்கிறது. 

ராஜிவ் கொலை வழக்கில், மனித வெடிகுண்டு வெடிப்புக்குப் பின்னால், அந்த இடத்தை முற்றிலும் சீல் செய்து, புலனாய்வுக்கு உதவியாக அங்கிருந்த எல்லா பொருட்களையும் முறையாக சேகரித்து வைத்த தமிழ்நாடு போலிஸ் டி.ஜி.பி ராகவனின் பணியை கார்த்திகேயன் மகத்தானது என்கிறார். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வருடக்கணக்கான உழைப்பை அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

ரகோத்தமன் தனது நூலில், வழக்கில் சில அரசியல் தலையீடுகள் இருந்தன எனத் தெரிவிக்கிறார். சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கைது செய்து விசாரித்திருந்தால் இன்னும் சில உண்மைகள் வெளிவந்திருக்கும் என்கிறார் ரகோத்தமன்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போது, டி. ஆர். கார்த்திகேயன் பணி ஓய்வு பெற்றிருக்கிறார். எனினும் அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானியைச் சந்தித்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். அவரது கோரிக்கையை அத்வானி உடனே ஏற்கிறார். மேல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்கிறது.