Wednesday 5 June 2019

ராஜிவ் காந்தி


1991ம் ஆண்டு மே மாதம் 21ம் நாள். இரவு 9 மணி அளவில் மயிலாடுதுறையில் எங்கள் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. எங்கள் வீட்டில் நாங்கள் அனைவரும் வீட்டு மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அன்று காங்கிரஸ் தலைவரான ராஜிவ் காந்தி மயிலாடுதுறை வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அத்திட்டம் சில நாட்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர் பேசுவதாக இருந்த மைதானம் எங்கள் வீட்டிலிருந்து சில நிமிட நடை தூரத்தில் இருந்தது.

ஒன்றேகால் மணி நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது. தூர்தர்ஷன் செய்திகளைக் காண அப்பா தொலைக்காட்சியை இயக்கினார். அன்று ராஜிவ் பங்கேற்றிருந்த பொதுக்கூட்டத்தில் ஒரு பெரும் வெடிகுண்டு வெடித்தது என்ற செய்தியைக் கேட்டோம். மேலதிக விபரங்கள் தெரியவில்லை. ராஜிவ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதும் அறிய முடியவில்லை. வானொலியிலோ தொலைக்காட்சியிலோ வேறு செய்தி அறிய முடியவில்லை. அம்மாவும் அப்பாவும் ராஜிவ் உயிர் பிழைத்திருப்பார் என்றே நம்பினார்கள்.

மறுநாள் காலையில், குண்டுவெடிப்பில் ராஜிவ் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டோம். அப்பா பெரும் துயரத்துடன் இருந்தார். இதனை விடுதலைப் புலிகள்தான் செய்திருப்பார்கள் என்று உறுதியாக நம்பினார். அந்த தேர்தலில் தி.மு.க எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. அப்போதிலிருந்து தமிழ் மக்களின் ஆதரவை விடுதலைப் புலிகள் முற்றிலும் இழந்தார்கள் என்பதே வரலாற்று உண்மை.

அதன் பின், அடுத்த ஐந்து ஆண்டு காலத்துக்கு செய்தித்தாள்களிலும் தூர்தர்ஷன் ஆகாசவாணி வானொலிச் செய்திகளிலும் சிறப்புப் புலனாய்வுக் குழு, மல்லிகை மற்றும் மனித வெடிகுண்டு ஆகியவை அநேகமாக எல்லா நாளும் இடம் பெறும். ஒரு புலனாய்வு அலுவலகம் ‘’மல்லிகை’’ என்ற பெயர் தாங்கியிருப்பது அப்போது சிறுவனாயிருந்த எனக்கு நூதனமாக இருந்தது. ராஜிவ் கொலையாளிகள் புகைப்படங்களை தூர்தர்ஷன் தொடர்ந்து வெளியிட்டது. 

கொலைச்சதியில் ஈடுபட்டவர்களை புலனாய்வு அதிகாரிகள் நெருங்கியது அன்றாட செய்தியானது. பெங்களூரில் அவர்கள் இருந்த வீடு சுற்றி வளைக்கப்பட்ட விபரங்களும் வெளியானது. அன்று இன்று இருப்பதைப் போல காட்சி ஊடகம் அவ்வளவு வலுவானது அல்ல. பெரும்பாலும் அச்சு ஊடகமே செய்திகளை அளிக்கும் என்பதால் பொதுமக்களால் அவ்வழக்கு கவனிக்கப்பட்டது.

ஆர்.டி.எக்ஸ் மூலம் பயங்கரவாதிகள் இந்தியாவை ஆங்காங்கே தாக்கிக்  கொண்டிருந்தனர். எனினும் இந்தியா மெல்ல உறுதியாக மீண்டு பயங்கரவாதத்தை முறியடித்தது. வளர்ந்த நாடுகளே பயங்கரவாதத்தின் கொடுங்கரங்கள் முன் நாசவேலைகள் முன் செயலற்றுப் போகும் இடம் வருகிறது. இந்தியா வளரும் நாடு. இந்தியக் குடிமைச் சமூகம் பயங்கரவாதத்தின் எல்லா முகங்களையும் குறித்து சரியான புரிதலுடன் இருத்தலும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைவதுமே மிகச் சரியான பதிலடி.