Friday 7 June 2019

ரயில் பயணங்கள்

மயிலாடுதுறை மெயின் லைனில் ஒரு முக்கியமான ஜங்ஷன். பல ஊர்களுக்கும் செல்லக்கூடிய ரயில்கள் அங்கு வந்து செல்லும். எனக்கு நான்கு ஐந்து வயதாகும் போதே அப்பா என்னை ஜங்ஷனுக்கு வாக்கிங் அழைத்துச் செல்வார். ரயில் நிலையம் என்பது மனதில் ஓர் ஆழமான படிமமாகி விட்டது. நடைமேடையில் இருக்கும் மர பெஞ்சுகள், சிமெண்ட் பெஞ்சுகள், நிலையத்துக்கு முன்னால் இருக்கும் பெரும்  மர நிழல்கள், மிகப் பெரிய தண்ணீர் டேங்க், சிக்னல் கம்பங்கள், லெவல்  கிராஸிங் கேட் என ஒவ்வொன்றின் மீதும் ஈர்ப்பு இருந்தது.  சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட பின்னர் விடுமுறை நாட்களில் தினமும் அங்கே சென்று விடுவேன். அப்பா ரயில் அட்டவணையை எப்படி பார்ப்பது என்று சொல்லித் தந்திருந்தார். அதனைப் பயன்படுத்தி ரயில் வரும் நேரத்தையும் நான் வீட்டிலிருந்து சைக்கிளில் செல்லும் நேரத்தையும் கணக்கிட்டு அதற்கேற்றவாறு கிளம்பி ரயில் வருகையில் ஜங்ஷனில் இருப்பேன். 24 மணி நேரத்தில் எந்த ரயில் எப்போது வரும் எங்கே செல்கிறது என்பதை 12, 13 வயதிலேயே மனப்பாடமாகச் சொல்வேன்.

பாஸஞ்சர் ரயில்களை மிகவும் விரும்புவேன். மயிலாடுதுறை - விழுப்புரம் பாஸஞ்சர், மயிலாடுதுறை - திருச்சி பாஸஞ்சர் , மயிலாடுதுறை - காரைக்குடி பாஸஞ்சர் ஆகியவற்றில் பயணம் செய்ய விரும்புவேன். சிதம்பரம், கடலூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்குச் சென்று வருவேன். அப்போது பஸ் கட்டணமும் ரயில் கட்டணமும் சமமாக இருந்ததால் பாஸஞ்சர் ரயிலில் பயணிப்பவர்கள் குறைவாகவே இருப்பர். மீட்டர்கேஜ் பெட்டிகள். உல்லாசமான மனநிலையை ரயில் பயணங்கள் உருவாக்கும்.

ஜே. ஜே சில குறிப்புகள் நாவலில் சுந்தர ராமசாமி ஜே. ஜே டைரிக்குறிப்புகளில் தீப்பெட்டி போன்ற சின்ன ரயில்வே ஸ்டேஷன்கள் என்று எழுதியிருப்பார். அந்த வார்த்தை அளித்த உற்சாகம் ரொம்ப நாட்கள் நீடித்தது.

இப்போதும் தொழில் நிமித்தமாக சென்னை மற்றும் திருச்சி செல்ல ரயிலையே தேர்வு செய்கிறேன். தில்லிக்கு ரயிலில் செல்வதால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் துரந்தோ ஆகியவை மனதுக்கு நெருக்கமாகி விட்டன. மோட்டார்சைக்கிள் பயணத்தில் ஆக்ராவிலிருந்து நாக்பூர் வரும் போது ரயில் பாதைக்கு இணையாக சாலையில் சில இடங்களில் பயணிக்க நேரும். சாலை மார்க்கத்தில் போபால் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த சாலைப் பயணத்தில் ரயில்வே லைனைப் பார்ப்பது வேறு விதமான மனநிலையைத் தரும்.

இப்போதும் ரயிலைப் பற்றி நினைக்கும் போது, தோள்-பையில் ஒரு செட் மாற்று உடை மட்டும் எடுத்துக் கொண்டு கங்கையின் நிலம் எதற்காவது கிளம்பிச் சென்று பத்து நாட்கள் இருந்து விட்டு திரும்பி வரலாமா என்று தோன்றுகிறது.