Wednesday 21 August 2019

ஒரு தினம் (31.07.19)

இன்றைய தினம் நானாவித அலுவல்களால் ஆனதாக இருந்தது. என்னுடைய கார் தொடர்பாக ஆர்.ட்டி.ஓ அலுவலகத்தில் சில பணிகள். இடைத்தரகர்கள் யாரும் இன்றி நேரடியாக அணுகினேன். சில நாட்களாக, அலுவலகம் சென்று சென்று திரும்பி வந்து கொண்டிருந்தேன். எனக்கு வேண்டியவர்களிடம் விஷயத்தைச் சொன்னால் ஏன் நேரடியாகச் சென்றீர்கள் என்று கேட்கிறார்கள். திரு. நிதின் கட்கரி அவர்களுடைய முயற்சியால் வாகன் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு நாட்டின் அனைத்து ஆர்.ட்டி.ஓ அலுவலகங்களும் ஒரே இணையதளத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு சாமானியன் இணையத்தைப் பயன்படுத்தி தனக்கு தேவைப்படும் சேவைக்கு விண்ணப்பித்து அதற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி ரசீதுடன் சென்று தனது வேலையை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது அதன் நோக்கம். அதற்கான அத்தனை ஏற்பாடுகளும் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தும் ஆர்.ட்டி.ஓ அலுவலகம் முழுதும் இடைத்தரகர்கள். நான் தயக்கம் காரணமாகவே பல நாட்கள் அங்கு செல்லாமல் இருந்தேன். இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்ற நிலை. ஒரு இடைத்தரகர் என்னிடம் எனக்கு ஆக வேண்டிய வேலைக்கு அரசுக் கட்டணமாக ரூ. 2000 மற்றும் லஞ்சமாக ரூ.13000 ஆகும் என்றார். ஒரு சில நாட்களில் வேலையை முடித்துத் தருகிறேன் என்றார். எனக்கு மனம் ஒப்பவில்லை. பொருள் இழப்பு என்பதுடன் என் மனசாட்சி அதனை ஏற்கவில்லை. ஒரு நாள் கூலியைப் பெறுவதற்கு பெண் கட்டிடத் தொழிலாளர்கள் எத்தனை செங்கல்லைத் தூக்கியவாறு எத்தனை மாடி ஏறி இறங்குகிறார்கள் என்பது ஒரு கட்டிடப் பொறியாளனாக எனக்குத் தெரியும். மனசாட்சி ஒப்பாத காரியத்தை என்னால் செய்ய முடியாது. அதற்காக எத்தனை வலி வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது என முடிவு செய்து கொண்டேன். அதிகாரிகளால் ஒருவர் நேரடியாக அலுவலகத்தைத் தொடர்பு கொள்வது என்பதையே ஏற்க முடியவில்லை. நான் அளித்த ஆவணங்களை திருப்பித் திருப்பி பார்த்தனர். ஆவணங்களை காகிதமாக அளிக்க வேண்டிய அவசியமேயில்லை. அவர்கள் அலுவலகக் கணிணியில் என்னுடைய வாகன எண்ணைத் தந்தாலே பணம் செலுத்தப்பட்டிருக்கும் விபரத்தைக் காட்டிவிடும். இருந்தாலும் அவர்களுக்கு காகிதங்கள் தேவை. ஆகி வந்த பழக்கம். ஆகி வந்த வழிமுறை. அந்த அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் எங்கு செல்ல வேண்டும் யாரைப் பார்க்க வேண்டும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்திருக்கிறது. எனக்கு ஒன்றும் புரியவில்லை என்பதால் ODD MAN OUT போல நிற்பேன். என்னைச் சற்று பரிதாபமாகப் பார்ப்பார்கள். இடைத் தரகர்கள் என்னிடம் பேசத் தயங்குவார்கள். நாங்கள் பேசிக் கொள்வதைப் பார்த்தால் அவர்கள் தான் எனக்கு லஞ்சம் தராமல் நேரடியாக அணுகச் சொன்னவர்கள் என அதிகாரி நினைத்துக் கொள்வார் என. தனியாக நான் நிற்பதை சாதாரண நியாயத்தின் தனிமை என எண்ணிக் கொள்வேன். அங்குலம் அங்குலமாக விஷயம் நகர்ந்தது. அலுவலகத்தில் அதிகாரிகள் அல்லாத அலுவலர்கள் பலர் பழக்கமானார்கள். இப்போது அங்கே பலர் என்னைப் பார்த்து புன்னகைக்கின்றனர். காலை மாலை வணக்கம் சொல்கின்றனர். ஒருவர் தனது கார் சம்பந்தமான வேலையாக வந்தவர் என்னிடம் நல்ல ஸ்கார்பியோ சகாயமான விலைக்கு வந்தால் வாங்க விரும்புவதாகச் சொன்னார். என்னுடைய நண்பர் ஒருவர் பெரும் செல்வந்தர். கார் வாங்கி விற்பவர். கார் வாங்கி விற்றே செல்வந்தர் ஆனவர். இப்போதும் அதனைச் செய்கிறார். அவர் எண்ணை அளித்தேன். பலவிதமான இடையூறுகளைக் கடந்து எனது பணியை முடித்தேன். அலைக்கழிக்கப்பட்டாலும் மனதில் ஒரு நிறைவு இருக்கிறது. எனது வலிகள் லஞ்சத்துக்கு எதிராக இருப்பேன் என நான் முடிவெடுத்ததால் பெற்றது. பரவாயில்லை. அதிலும்  சுவாரசியமான ஒன்று நிகழ்ந்தது. அந்த அலுவலகத்தின் அலுவலர்கள் சிலர் எனது வேலை விரைவில் முடிய வேண்டும் என விரும்பினர். ஒரு நாளைக்கு அந்த அலுவலகத்துக்கு நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களிடம் ஆயிரக்கணக்கில் அதிகாரிகள் லஞ்சம் பெறுகின்றனர். நேரடியாக வரும் ஓரிருவரை ஏன் அலைக்கழிக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். இடைத்தரகர்கள் சிலரே கூட என் பணி சீக்கிரம் முடிய வேண்டும் என எண்ணினர். 

தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் போக்குவரத்துத் துறை ஊழல் பற்றி பேசினால் வாகன் திட்டத்தில் மிக அதிக ஆர்.ட்டி.ஓ அலுவலகங்கள் இணைக்கப்பட்டிருப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்பார்கள். வாகன் இணையதளமும் அதனை உறுதி செய்யும். பொதுமக்கள் மனதில் லஞ்சம் என்பதை இயல்பான ஒன்றாக அவர்கள் ஆக்கி வைத்திருக்கிறார்களே அதற்கு யார் பொறுப்பு. வீடு மனை வாகனப் பிராப்தி என்பார்கள். சாமானிய மக்களின் எளிய வாகனங்களில் லஞ்சம் பெறும் மனநிலையை என்ன செய்வது? திரு. நிதின் கட்கரியின் ‘’வாகன்’’ சாமானிய மனிதனுக்கான பாதுகாப்பை அளிப்பது. ’’வாகன்’’ திட்டமே என்னைப் போன்றோர் நம்பிக்கை இழந்து விடக் கூடாது என்பதற்குத்தான் உருவாக்கப்பட்டதோ என்று கூட நினைத்துக் கொண்டேன். லஞ்சத்திற்கு எதிராக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆயிரத்தில் ஒருவர் என்றால் கூட இந்தியாவின் மக்கள்தொகைக்கு பத்து லட்சம் பேர் இருப்பார்கள். நான் தனியாக நின்றிருக்கவில்லை; என்னைப் போல பத்து லட்சம் பேர் எங்கெங்கோ உறுதியுடன் லஞ்சத்தை எதிர்த்தவாறு நின்று கொண்டு இருக்கின்றனர்.

நேற்றும் இன்றும் ஒரு வாசிப்பு மாரத்தான் பூர்வாங்க பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன். விதிமுறைகள் உருவாக்கம். செயல்முறை உருவாக்கம். நண்பர்களைத் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தல். ஒரு புறம் ஆர்.ட்டி. ஓ அலுவலகம் மறுபுறம் வாசிப்பு மாரத்தான். வாசிப்பு மாரத்தான் நாளை மறுநாள் துவங்குகிறது. 48 நாட்கள். ஆகஸ்டு 2லிருந்து செப்டம்பர் 19 வரை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கட்டாயம் வாசிக்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை மணி நேரமும் வாசிக்கலாம்.

இன்றைய தினம் அலாதியானது.

(31.07.2019 அன்று எழுதப்பட்ட கட்டுரை)