Saturday 24 August 2019

பயிற்சி

வாசிப்பு மாரத்தான் பல விஷயங்களை யோசித்துப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது. அறிவுச் செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் நம்பிக்கை கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு என்பது அளவுகள் அற்றது. துரதிர்ஷ்டவசமாக, தமிழ்ச் சூழல் அறிவுச் செயல்பாடுகளுகளுக்கான நேரடித் தன்மையுடன் இல்லை. சிங்கப்பூர் அறிவுச் செயல்பாட்டைப் பேண வேண்டும் என்ற பிரக்ஞையுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள். ஜப்பான்.

48 நாட்களில் கிட்டத்தட்ட பாதியைக் கடந்திருக்கிறோம். தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் வாசிப்பது என்பது மனதை உணர்வுகளை கூர்மையாக வைத்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது. வெண்முரசில் மகாபாரத கதாபாத்திரங்கள் அனைவருமே நாளின் பெரும்பாலான பொழுதில் பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். பீஷ்மர் எப்போதும் வில் அம்புடன் பயிற்சியில் இருப்பார். துரோணர் தனது கல்விச் சாலையில் எப்போதும் மாணாக்கர் பெறும் பயிற்சியைக் கண்டவாறும் பாடங்களில் திருத்தம் கூறியவாறும் இருப்பார். சகுனி சதுரங்கப் பலகையின் முன்னால். விதுரர் தனது காலைப் பொழுதுகளில் காவியம் வாசித்தவாறு.

இயற்கையின் பரிணாமத்தில் மனிதன் எப்போதெல்லாம் சிந்தித்திருக்கிறானோ அப்போதெல்லாம் மானுடம் மாபெரும் தாவல்களை நிகழ்த்தியிருக்கிறது. வாசிப்பு அறிவுச் செயல்பாட்டின் அடிப்படையான செயல். அறிவுஜீவியாக தன்னை எண்ணுபவன் ஒரு நாளும் வாசிக்காமல் இருக்கக்கூடாது. அது ஒரு தவச்செயல்.