Thursday 1 August 2019

வாசிப்பு மாரத்தான் - நாளை துவக்கம்

நான் மிகக் குறைவாகவே பொருட்களை வாங்குபவன். மிகக் குறைவான பொருட்களையே பயன்படுத்துபவன். நான் கடைக்குச் சென்று வாங்கும் பொருள் என்றால் அது ஷேவிங் பிளேடு பாக்கெட் மட்டும் தான். நான் தினமும் சவரம் செய்து கொள்பவன் அல்ல என்பதால் ஒரு பிளேடு பாக்கெட் மூன்று மாதம் வரை கூட வரும். எனவே நான் அரிதாகவே கடைகளுக்குச் செல்வேன். அதனால் எனக்கு சாதாரண பெட்டிக்கடையிலிருந்து சூப்பர் மார்க்கெட் வரை அனைத்துமே எண்ணற்ற காட்சிகளாலும் அளவற்ற பொருட்களாலும் ஆனதாகத் தோன்றும். எனது ஆடைகளை என்னுடைய அம்மாவே வாங்கி என்னுடைய ஷெல்ஃபில் வைத்து விடுவார்கள். 

12 டன் இரும்பை சர்வசாதாரணமாக என்னால் வாங்க முடியும். எடை பார்த்து லாரியில் ஏற்றி கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் கொண்டு வந்து இறக்கி என மணிக்கணக்கான நேரம் எடுத்துக் கொள்ளும் வேலை அது. அதை இயல்பாகச் செய்வேன். ஆனால் ஒரு சட்டை வாங்க நான் திணறுவேன். எனக்கு நினைவு தெரிந்து ஒரு வெண்ணிற டி-ஷர்ட் வாங்கினேன். அதை அனைவரும் உனக்கு இது நன்றாக இல்லை என்றார்கள். வெண்ணிறம் எப்படி நன்றாக இல்லாமல் போகும்? ஆனால் எல்லாரும் சொல்வதால் அதை புறக்கணிக்கவும் முடியவில்லை. எனக்கு இன்னொரு பிரச்சனையும் உண்டு. என்னால் பொருளுக்கும் விலைக்குமான தொடர்பை புரிந்து கொள்ள முடியாது. எல்லா பொருட்களும் விலை அதிகமாக இருப்பதாகவே தோன்றும். அதனால் வாங்காமலேயே இருந்து விடுவேன். 

ஃபிளிப்கார்ட்டிலிருந்து தினமும் மின்னஞ்சல் வரும். அதில் பல்வேறு பொருட்கள் பல்வேறு கோணங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் விலையும் இருக்கும். பலமுறை பார்த்துப் பழக்கம் இருப்பதால் அவை எந்த விலை எல்லைக்குட்பட்டவை என்பதை அறிவேன். ஃபிளிப்கார்ட்டில் ஒரு கடிகாரமும் ஒரு அலைபேசியும் வாங்கினேன். இப்போது நான் பயன்படுத்துவது அதையே. எனது கடிகாரம் நன்றாக இருப்பதாக சிலர் சொன்னார்கள். நுகர்வின் உலகில் நான் இல்லாமல் இல்லை என்ற நிறைவடைந்தேன்.

ஃபிளிப்கார்ட் என்றதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2003ம் ஆண்டு என்று ஞாபகம். ‘’தி ஹிந்து’’ ஆங்கிலப் பத்திரிகையில் கடைசிப் பக்கத்தில் ஒரு சோப் கட்டி அளவில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. புத்தகங்கள் வாங்க ஒரு பிரத்யேக தளம் என்று ஃபிளிப்கார்ட் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. நான் கல்லூரி சென்று மாலை வீடு திரும்பியதும் இணைய மையம் சென்று ஃபிளிப்கார்ட் டாட் காம் தளத்திற்குச் சென்றேன். அந்த நிறுவனம் ஆரம்பித்து ஒரு சில மாதங்கள் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். அதில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. நான் மூன்று புத்தகங்களின் விலையைக் குறித்துக் கொண்டேன். என்னிடம் டெபிட் கார்டு இல்லை. நூலின் விலையை வங்கி வரைவோலை மூலம் அனுப்ப முடியும். அவ்வாறு அனுப்பினேன். ஒரு வாரத்தில் என் கைகளுக்கு அந்த புத்தகம் வந்தது. மிகவும் மகிழ்ந்தேன். மாநகரங்களுக்குச் சென்றால் மட்டுமே ஆங்கிலப் புத்தகங்கள் வாங்க முடியும் என்ற நிலையில் ஃபிளிப்கார்ட் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அடுத்த நாளே அவர்களுடைய தொலைபேசி எண்ணுக்கு அழைத்து ஃபிளிப்கார்ட்டை நான் மிகவும் விரும்புவதாகச் சொன்னேன். நிறுவனத்தினர் மிகவும் மகிழ்ந்தார்கள். உங்களுக்குத் தேவையான புத்தகங்களைச் சொல்லுங்கள் நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என்றார்கள். அடிக்கடி வங்கி வரைவோலை அனுப்பி ஃபிளிப்கார்ட்டில் புத்தகம் வாங்கியிருக்கிறேன்.

நான் விரும்பி வாங்கியவை புத்தகங்களே. என்னுடைய ஆறு வயதிலிருந்து புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். சிதம்பரத்தில் என்னுடைய பத்தாவது வயதில் என்னுடைய தந்தை எனக்கு ‘’ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்’’ என்ற நூலை வாங்கித் தந்தார். அந்நூலை இரண்டு தினங்களில் வாசித்தேன். என் அம்மாவிடம் புத்தகம் வாங்க பணம் கேட்பேன். எப்போது கேட்டாலும் அம்மா தருவார்கள். இப்போதும் எனக்கு பழக்கம் அப்படித்தான்.

2004ம் ஆண்டு என்று நினைவு. எனது நண்பர் ஒரு பதிப்பாளர். புத்தகக் கண்காட்சியில் அவருக்கு உதவி செய்யும் விதமாக பத்து நாட்கள் கூட இருந்தேன். முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை. அப்போது இரண்டு பெரிய பிக் ஷாப்பர் பைகளில் தேசிய புத்தக நிறுவனமும் சாகித்ய அகாதெமியும் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல்களை ‘’கண்ணீரைப் பின்தொடர்தல்’’ நூலில் உள்ள பட்டியலைக் கண்டவாறு வாங்கி தூக்க முடியாமல் மூச்சு பிடித்து தூக்கி மயிலாடுதுறை கொண்டு வந்தது நினைவுக்கு வருகிறது. என்னிடம் 600 புத்தகங்கள் வரை இருக்கும் என்று எண்ணுகிறேன். இப்போது வரை எண்ணிப் பார்த்ததில்லை. இன்னும் அதிகமாகக் கூட இருக்கும். 

எனது மேஜையை ஒழுங்குபடுத்தி வைப்பேன். ஓரிரு நாளில் பத்து புத்தகங்கள் அதில் வந்து அமர்ந்து விடும். என் அறை முழுதும் புத்தகங்கள். அவை எடுத்துக் கொள்ளும் இடம் போகவே அறையில் எனக்கான இடம். அவற்றை எவ்வகையிலும் தொகுக்க முடியாது என்பதால் அப்படியே விட்டு விட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு படைப்பாளியின் படைப்பையும் கால வரிசையில் வைத்திருப்பேன். ஜெயமோகன் என்றால் ரப்பர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி, காடு என. சுந்தர ராமசாமி படைப்புகளை ஒரு புளிய மரத்தின் கதை, ஜே. ஜே சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் இவ்வாறு. இப்போது எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து விட்டன. மீண்டும் தொகுக்கலாம். தொகுக்க இயலாமலும் போகலாம். அது என் விருப்பம் சார்ந்தது அல்ல. புத்தகங்களின் விருப்பம் சார்ந்தது. 

வாசிப்பு மாரத்தானை நிமித்தமாகக் கொண்டு புத்தக அடுக்குகளில் இன்னும் வாசிக்காமல் இருக்கும் புத்தகங்களை வாசித்து விடலாம் என இருக்கிறேன். ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு கணம் திகைப்பாகவும் இருக்கிறது.

பாரதியின் சரஸ்வதி ஸ்தோத்திரத்தை தியானிக்கிறேன்.

தானென்னும் பேய்கெடவே - பல சஞ்சலக் குரங்குகள் தளைப்படவே
வானெனும் ஒளிபெறவே - நல்ல வாய்மையிலே மதி நிலைத்திடவே
வானெனப் பொழிந்திடுவீர் - அந்த திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்
ஊனங்கள் போக்கிடுவீர் நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்