Saturday 10 August 2019

நம் ஆன்றோர்கள் தேசம்

1960களில் ‘கல்கி’ இதழில் டி.கே.சி யின் மாணவரும் வடார்க்காடு மாவட்ட ஆட்சியராகவும் இருந்த தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ என்ற தொடரை எழுதியுள்ளார். அத்தொடர் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. எழுதப்பட்ட போதும் நூலாக வெளியான போதும் பரவலான வாசக கவனம் பெற்று இன்று வரை மறுபதிப்பு காண்கிறது. 

நம் சமூகத்தின் முகம் மாறிக்கொண்டேயிருக்கிறது. இன்று பசி அநேகமாக இல்லை. பட்டினி ஒழிக்கப் பட்டிருக்கிறது. வறுமையின் கோரப் பிடி இன்று இறுக்கமாக இல்லை; தளர்ந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இங்கே நாம் யோசிக்க வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. சமூகமாய் நாம் மாச்சர்யங்கள் இன்றி இணைந்திருக்கிறோமா?

எல்லோரா கைலாசநாதர் கோயிலை நான் கண்ட போது கண்ணீர் விட்டு அழுதேன். பாறை, மனிதனின் கலை உணர்வுக்கு நெகிழ்ந்து கொடுத்திருக்கிறது. ஒரு பெரிய குன்றில் ஒரு பேராலயத்தைக் கண்டு தலைமுறைகளாகக் குடைந்து அதை மிகப் பெரிதாய் உருவாக்கியிருப்பவர்களைக் கண்ட போது மானுடத்தின் விடுதலை என்றோ ஒரு நாள் சாத்தியமே என்ற நம்பிக்கை எழுந்தது.

மனிதனைப் பசி துரத்தியிருக்கிறது. பாதுகாப்பின்மை அச்சுறுத்தியிருக்கிறது. அவனது வேட்கைகள் அவனை அலைக்கழித்திருக்கின்றன. ஆனால் மானுடத்திரளிலிருந்து சில குரல்கள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. யாம் சமூக விலங்கல்ல; யாமே யாவும் என ஆத்மாவின் தவிப்பை அக்குரல்கள் ஒலிக்கின்றன.

கலைஞன் அறைகூவுகிறான். மானுடத்தின் எல்லைகள் அறுதியிடப்படப் போதெல்லாம் தன்னை களபலியாய் கொடுத்து அந்த எல்லைகளை விரிவுபடுத்தும் சமரைத் தொடங்கி வைக்கிறான். 

தொண்டை நாட்டிலும் நடு நாட்டிலும் சோழ நாட்டிலும் பாண்டிய சேர நாடுகளிலும் விண்ணவனுக்கும் முக்கண்ணனுக்கும் எத்தனை ஆலயங்கள்! எத்தனை துதிகள்! எத்தனை மனிதர்கள் மொழியை மானுட ஆத்ம தேட்டத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள். 

பாரதம் கர்மபூமி. உன்னதமான உணர்வால் அனைத்தும் உருகிக் கரையும் பூமி. அமிழ்தில் இனியது நம் ஆன்றோர்கள் தேசம்.