Sunday 11 August 2019

சுடர்

அரசமர விநாயகர் முன்
நின்றிருக்கிறாள்
ஓர் இளம் பெண்
மண் அகலை பீடத்தில் வைத்து
முதலில் எண்ணெயிட்டு
திரியை அதில் நனைத்து
பின் அகல் வாயில் திரி பொருத்தி
மென் விரல்களால் தீக்குச்சி உரசி
தீபம் ஏற்றுகிறாள்
ஒரு தீபம் சுடர்கிறது
அப்போது முளைத்திருக்கும் சந்தோஷத்தில்
ஓர் இனிய ஆர்வத்தில்
வீசும் காற்றுக்கு வேகமாய் அசைந்து கொண்டு
தீபச் சுடர் காண்கிறாள்
கண் மூடி பிராத்திக்கிறாள்
குடும்பத்துக்காக
தனக்காக
அவள் வணங்கிச் சென்ற பின்
அவள் ஏற்றிய சுடரை
காண்கிறார்
விநாயகர்
உலகில் எங்கெங்கோ சுடர்ந்து கொண்டிருக்கும்
அகல்களில் மீண்டும் ஒன்று
யுகயுகமாய் காட்டப்படும் பிரியங்களில்
அடுத்த ஒன்று
என்று நினைத்தவாறு
மூஷிதத்தைப் பார்க்கிறார்
ஐயன் மகிழ்ந்தது கண்டு
தானும் மகிழ்கிறது
மூஷித வாகனம்