Saturday 31 August 2019

புத்திர சோகம்

யக்‌ஷன்: துயரங்களில் முதன்மையானது எது?

யுதிர்ஷ்ட்ரன் : புத்திரசோகம்

-யக்‌ஷப் பிரசன்னம், மகாபாரதம்.

இன்று காலை ஒரு கட்டிடப் பராமரிப்பு பணியாளர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். எனது நண்பர் ஒருவர் அவரைப் பரிந்துரைத்திருந்தார். நாடெங்குமே சிறு கட்டிடப் பராமரிப்பு பணிகளுக்குத் தேவைப்படும் தொழிலாளர்கள் தேவையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாகவே இருக்கின்றனர். நான் பராமரிப்புப் பணிகளை பெரும்பாலும் ஒத்துக் கொள்வதில்லை. என்னுடைய பணி கட்டுமானம். அதன் வேலைமுறை வேறு. பராமரிப்பின் வேலைமுறை வேறு. தவிர்க்க இயலாத சூழ்நிலையிலேயே நான் பராமரிப்புப் பணிகளுக்கு ஆளனுப்புவேன். இன்று ஒரு இடத்துக்கு ஆளனுப்ப அந்த பணியாளரை வரச் சொல்லியிருந்தேன்.

பணி விபரம் தெரிவித்த பின்னர் அவரைப் பற்றிய அவர் குடும்பம் குறித்த விபரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சமீப காலத்தில் அவர் தன் மகனை இழந்திருக்கிறார். ஒரு சாலை விபத்து. இன்னும் நான்கு நாளில் வளைகுடா நாடொன்றுக்கு செல்ல விசா , விமான பயணச்சீட்டு ஆகியவை தயாராக இருந்தன. இவர் ஒரு வீட்டில் பராமரிப்புப் பணியை மேற்கொண்டிருந்திருக்கிறார். ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ஒரு பெண்மணி பேசியிருக்கிறார். இந்த ஃபோனில் கடைசியாக பேசிய எண் உங்களுடையது. இந்த ஃபோனுக்கு சொந்தக்காரர் உங்கள் உறவினரா என்று கேட்டிருக்கிறார். தன் மகன் என்று பணியாளர் சொல்லியிருக்கிறார். ஒரு சாலை விபத்து. அடி மிகக் கடுமையாக இருக்கிறது. தலையில் அடிபட்டு இரத்தம் நிற்காமல் செல்கிறது என்று சொல்லியிருக்கிறார் அப்பெண்மணி. 

செய்தியை உள்வாங்க முடியாமல் திணறியிருக்கிறார். ஐந்து நிமிடத்தில் அடுத்த அழைப்பு. மரணச் செய்தி. சொல்லும் போது கண்கள் கலங்கி விட்டார். மகன். ஒரு தந்தை வாழ்நாள் முழுதும் வைத்திருந்த நம்பிக்கை. ஒரு தந்தை வாழ்நாள் முழுதும் ஓயாமல் எண்ணிய சிந்தனை. ஒரு தந்தை வாழ்நாள் முழுதும் மனதில் மந்திரம் என ஒலித்த பெயர்.

ஒரு தந்தையின் துயர் எப்படி இருக்கும்? இந்த உலகில் தினமும் கதிர் உதிக்கிறது. பூச்சிகள், பறவைகள், பிராணிகள், மனிதர்கள். நானாவித அலுவல்கள். எங்கு தேடியும் மகனைப் பார்க்க முடியப் போவதில்லை. தந்தை வரவே இயலாத மகனைத் தேடாமல் இருக்கப் போவதுமில்லை. 

யக்‌ஷனிடம் துயரத்தில் தலையாயது புத்திர சோகம் என்று சொன்ன யுதிர்ஷ்ட்ரன் பாரதப் போர் முடிந்த அன்று இரவு அஸ்வத்தாமனின் இரவுத் தாக்குதலில் தனது மகனை இழக்கிறான். மாமன்னனாக முடி சூடிய போதும் மைந்தன் துயரில் ஆழ்ந்திருந்தான் யுதிர்ஷ்ட்ரன்.

செய்தியைக் கேட்ட போது உலகமே உறைந்தது போல் இருந்தது என்றார். 
இந்த உலகம் ஒலியற்று இருந்தது என்றார். சில நிமிடங்களுக்கு கைகளைக் கூட அசைக்க முடியவில்லை என்றார். அன்று செய்து கொண்டிருந்த பராமரிப்புப் பணியை முழுக்க செய்து முடித்து விட்டே மகனின் இறந்த உடல் காண புறப்பட்டேன் என்றார்.

மனிதன் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளப்படக் கூடியவனா என்ன?