நேர்த்தி
--------------
பரிமள
விலாஸ், சாரங்கபாணி சன்னிதித் தெருவில் அமைந்திருக்கும் ஒரு பழைய அலுவலகம். இன்னும்
கான்கிரீட் கட்டிடமாகவில்லை. ஏன் இன்னும் மாறவில்லை என்று கேட்காதவர்கள் இல்லை. வருடா
வருடம் நீலத்தநல்லூரிலிருந்து ஓடு மாற்றுபவர்கள் வந்து ஓடு மாற்றிக் கொடுக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடம் பொங்கலுக்கும் சுண்ணாம்பு அடிக்கிறார்கள். வாசலில் காவி வெள்ளை பட்டை.
அதன் மேலே வெள்ளை. வீட்டின் உள்புறம் ஒரு பாதி நீல நிறம். மறுபாதி பச்சை நிறம். இப்போதும்
ஊழியர்கள் தரையில்தான் உட்காருகிறார்கள். அமர்வதற்கென்றே பின்னப்பட்ட பாய்கள் மூன்று
வருடத்துக்கொரு முறை புத்தூரிலிருந்து வருகிறது. தேக்காலான ஊஞ்சல் எண்ணையிடப்பட்டு
மிகச்சிறு சத்தத்துடன் சுத்தமாக காற்றில் நின்று கொண்டிருந்தது. கொல்லைப்பக்க கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்து வந்து பானையில் ஊற்றி வெட்டிவேர்
இட்டு அருந்தும் போது தண்ணீர் அமிர்தமாக இனிக்கும்; மணக்கும். பெயரைக் கேட்டதும் பலரும்
ஹோட்டல் என்று நினைத்து விடுவார்கள். அது ஹோட்டல் அல்ல; டிராவல்ஸ். டிராவல்ஸ் என்றும்
சொல்லி விட முடியாது. முன்பக்கம் டிராவல்ஸ் அலுவலகம். பின்பக்கம் பரிமள விலாஸ் உரிமையாளர்
ராஜகோபால ஐயர் வீடு. மனைவி கங்கா மகள் ஸ்ரீதேவியுடன் வசித்து வருகிறார்.
ஆறு
அம்பாஸிடர் கார் இருக்கிறது. அடுத்த தெருவில் ஒரு காலி மனையில் ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில்
வாகனங்கள் நிற்கின்றன.பெரிய மனைக்கட்டு. இப்போது பாதி இடம்தான் கம்பெனியிடம் இருக்கிறது.
மீதி அரசாங்கத்திடம். நம்ப முடியாத கதை.
சில
வருஷங்களுக்கு முன்னால், கும்பகோணத்துக்கு ஒரு பீஹார்காரர் சப்-கலெக்டராக வந்தார்.
டவுனில் குழந்தைகள் விளையாட ஒரு சிறு மைதானம் அமைக்க வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார்.
அதற்கு பொருத்தமான இடம் தேடிக் கொண்டிருந்த போது எங்கள் கம்பெனி இடம் அவர் கண்ணில்
பட்டிருக்கிறது. நேராக கம்பெனி ஆஃபிஸுக்கு வந்து விட்டார். ஐயர் அவரை வீட்டுக்குள்
அழைத்துச் சென்று ஊஞ்சலில் அமர வைத்தார். வெகு இளைஞர். ஐயரின் உறவினர்கள் சிலர் முக்கிய
இலாகாக்களில் செயலாளர்களாக இருந்தவர்கள். ஐயர் அவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
அங்கே இருந்த ராஜாஜியின் படத்தைப் பார்த்தார் சப்-கலெக்டர்.
ஐயர்
சொன்னார்: ‘’அப்பா சித்தப்பால்லாம் சுதந்திரா கட்சியில முக்கியப் பொறுப்புல இருந்தா’’.
சப்-கலெக்டர் தன்னுடைய தாத்தா ஜெயப்பிரகாஷ் நாராயணனுடைய லோக சங்கர்ஷ சமிதியில் இருந்ததாகச்
சொன்னார். விஷயத்துக்கு வந்தார்.
‘’நம்ம நாட்ல குழந்தைங்க சந்தோஷமா சந்திச்சு கட்டுப்பாடு
இல்லாம விளையாட இடம் இருக்கறதில்ல. இருபது வருஷம் முன்னாலல்லாம் தெருக்கள்ல மோட்டார்
டிராஃபிக் குறைவு. இப்ப ரொம்ப அதிகம். அதனால தெருவில விளையாட பேரண்ட்ஸ் அலோ பண்றதில்ல.
ஸ்கூல்லயும் எப்பவும் ஸ்டடிஸ். பெரியவங்க இல்லாம அவங்க வாக்கிங் போக பயன்படுத்தாம குழந்தைகளுக்கு
மட்டுமான கிரவுண்ட்னு ஒரு ஐடியா தோணிச்சு.
நிறைய இடம் பார்த்தோம். உங்க இடம் பொருத்தமா இருக்குன்னு தோணுது. ஊர் நன்மைக்காக உங்கள்ட
உதவி கேட்டு வந்துருக்கன். கட்டாயம் இல்லை. யோசிச்சு சொல்லுங்க. அடுத்த வாரம் நானே
உங்க வீட்டுக்கு வரேன். அப்ப முடிவு சொல்லுங்க.’’
சப்-கலெக்டர்
பரிமள விலாஸுக்கு மறுமுறை வர வேண்டிய அவசியமே வரவில்லை. அடுத்த நாளே தன்னுடைய சம்மதத்தை
அவருடைய ஆஃபிஸுக்குச் சென்று தானே தெரிவித்து விட்டார் ஐயர். அக்கவுண்டண்ட் லட்சக்கணக்கான
ரூபாய் மதிப்புள்ள சொத்து என்பதால் ஆடிட்டரிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளலாம் என்றார்.
ஐயர் தன் மனைவியைப் பார்த்தார். ‘’சர்க்கார் எதிர்காலத்தில வேற காரணத்துக்குப் பயன்படுத்தாம
கொழந்தைங்க விளையாட மட்டும் பயன்படுத்துவான்னா தாராளமா கொடுக்கலாம். லாபமா நஷ்டமான்னு
பார்க்கத் தேவையில்ல’’. கங்கா மாமி சொல்லி விட்டார். இப்பவும் அந்த இடத்தின் பராமரிப்பை
எங்கள் கம்பெனிதான் பார்த்துக் கொள்கிறது.
பரிமள
விலாஸில் டிரைவர்கள் அனைவரும் காலை எட்டு மணிக்கு ஆஜராகி விடுவர். சுழற்சி முறையில்
ஒருத்தர் வீட்டுத் திண்ணையில் தங்கியிருப்பார். அவரும் சவாரிக்காக வெளியே சென்றிருந்தால்
ராஜகோபால ஐயரே காரை எடுப்பார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் ஈடுபட்டிருக்கும்
தொழில். உள்ளூர் அழைப்புகள் குறைவு. சென்னையிலிருந்து வருபவர்கள் கிளம்பும் போதே ஃபோன்
செய்வார்கள். ரயில் நிலையம் சென்று அழைத்துக் கொண்டு அவர்களை லாட்ஜிலோ அல்லது அவர்கள்
உறவினர்கள் வீடுகளிலோ விடுவது தொடங்கி இரண்டு மூன்று நாட்களில் கூடவே இருந்து ஷேத்ராடனம்
செய்து வைத்து மீண்டும் ரயில் நிலையத்தில் விடுவது வரை பரிமள விலாஸே பார்த்துக் கொள்ளும்.
கேட்பதற்கு எளிதாகவே இருக்கும். இருந்தாலும் மனிதர்கள் சம்பந்தப்பட்டது. ஐம்பது ஆண்டுகளாக
நல்ல பெயரெடுப்பது சாமானியமான விஷயம் இல்லை.
என்னுடைய
பெயர் ஆரென். பரிமள விலாஸில் அப்படித்தான் அழைப்பார்கள். சுவாமிமலைக்குப் பக்கத்தில்
இருக்கும் ஆதனூர் பெருமாளின் பெயர். ரங்கநாதன். எங்கள் சொந்த ஊர் அதுதான். இப்போது
சோலையப்பன் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து மனைவி குழந்தைகளுடன் இருக்கிறேன். அப்பாவும்
அம்மாவும் கூட இருக்கிறார்கள். ஆதனூரில் வீடும் சொற்ப நிலமும் இருக்கிறது. அப்பா விவசாய
வேலை இருக்கும் போது தினமும் சென்று வருவார். அம்மா பதினைந்து நாளைக்கு ஒருமுறை சென்று
வருவார்கள்.
டிரைவராக
நல்ல பெயரெடுக்க மூன்று விஷயங்கள் முக்கியம். சர்வசாதாரணமாக காத்திருக்க வேண்டும்.
பிறர் பேசுவதை மனதில் எந்த எண்ணமோ எதிர் எண்ணமோ இல்லாமல் வெறுமனே கேட்டுக் கொள்ள வேண்டும்.
தன் மன ஓட்டத்தை முகத்தில் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த பண்புகள் கொண்ட
எதிராளியை எந்த மனிதரும் மிக விரும்புவர். வாடிக்கையாளர்கள் என் மீதும் எங்கள் நிறுவனம்
மீதும் பிரியத்துடன் இருந்தார்கள். இருக்கிறார்கள்.
நான்
வேலைக்குச் சேர்ந்த போது கங்கா மாமி நிறை மாத கர்ப்பிணி. அவர்களுக்குப் பிரசவ வலி வந்த
போது ஐயரும் அவர் மைத்துனரும் நானும் தான் காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம்.
இப்போது ஸ்ரீதேவி படிப்பது பன்னிரண்டாம் வகுப்பில். இரட்டை ஜடை போட்டுக் கொண்டு சைக்கிள்
மிதித்துக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறாள்.
கங்கா
மாமியின் சகோதரி நர்மதாவின் கணவன் வழி உறவினர் குடும்பம் ஒன்று தை மாதத்தில் வந்தது.
அந்த சவாரிக்கு நான்தான் சென்றேன். ஒரு இளம்பெண்.
அவளது கணவர். அவரது அம்மா. அத்தம்பதிகளின் ஆறு வயது மகன் சியாம். வைத்தீஸ்வரன் கோவிலில்
சாமி தரிசனம் செய்து விட்டு சிதம்பரம் கோவிலுக்குச் செல்ல வேண்டும். வண்டியில் யாரும்
யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. பாட்டியம்மாதான் அவ்வப்போது லேசாக அசைந்து உடல்வலி மிகும்
போது ஆயாசமாக ‘ஹரி ஹரி’ என்பார். சியாம் அவன் அம்மா மடியில் அமர்ந்து ஜன்னலுக்கு வெளியே
பார்ப்பான். அவன் அபூர்வமாகப் புன்னகைத்தான்.
மற்றபடிக்கு முகத்தில் எந்த சலனமும் இருக்காது. தண்ணீர் கேட்க மாட்டான். நேரத்துக்கு
அவன் அம்மா உணவு ஊட்டி விடுவாள். பெரிய விருப்பம் இன்றி கொஞ்சமாக சாப்பிடுவான். அவன்
எதுவும் பேசவில்லை என்பதை கவனித்தேன். அவன் அம்மாவின் கவனம் முழுதும் அவன் மீது இருந்தது.
எப்போதும் எதிலோ ஆழ்ந்திருப்பதாக அவனுடைய முகம் இருந்தது. அம்மா கையைப் பிடித்துக்
கொண்டு நடந்தான். அவ்வப்போது லேசாகத் தடுமாறினான். அவனுக்கு இயல்பாக நடப்பதும் தடுமாறுவதும்
தெரிந்தது. மனிதக் கூட்டத்தை பார்வையில் தெரியும் காட்சிகளை அவன் ஆர்வத்துடன் பார்த்தான்.
கோயிலில் பெற்றோருடன் வந்திருக்கும் குழந்தைகளைப் பார்க்கும் போது சற்று துள்ளினான்.
‘’இந்து!
வைத்தீஸ்வரன் எல்லாத்தையும் பார்த்துப்பான். சியாம் இனிமே அவனோட குழந்தை.’’ அந்த பாட்டி
அந்த பெண்ணிடம் சொன்னார்கள். வண்டி வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து சிதம்பரம் சென்று கொண்டிருந்தது.
‘’சியாம்
உடம்பு சரியாச்சுன்னா எடைக்கு எடை வெல்லம் தரேன்னு ஸ்வாமிட்ட நேர்ந்துட்டு இருக்கன்மா’’
நான்
யூகித்துக் கொண்டேன். மறுநாள் அவர்கள் காலையில் எங்கும் செல்லவில்லை. நான் வழக்கம்போல்
எட்டு மணிக்கு ஆஜராகி விட்டேன். கங்கா மாமி விபரம் சொன்னார்கள். சியாம் ஒரே குழந்தை.
கல்யாணமாகி ஏழு வருடம் கழித்து பிறந்த குழந்தை. ஒரு வயது வரை சாதாரணமாகத்தான் இருந்திருக்கிறான்.
பின்னர் அவன் செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் இருந்திருக்கின்றன. மருத்துவர்கள்
அவன் மூளைக்கும் நரம்பு மண்டலத்துக்கும் இருக்கும் ஒருங்கிணைப்பில் சில சிக்கல்கள்
இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இது தானாகவே சரியாகும் என்று சொல்லியிருக்கின்றனர்.
இதற்கென வைத்தியம் கிடையாது. எத்தனை ஆண்டுகளில் சரியாகும் என்றும் சொல்லி விட முடியாது
என அபிப்ராயப்பட்டிருக்கிறார்கள்.
ஸ்ரீதேவி
அவனைத் தூக்கி வைத்துக் கொண்டு வாசலுக்கும் கொல்லைக்கும் அலைந்து கொண்டிருந்தாள்.
‘’சொல்லு.
அக்கா சொல்லு. அ க் கா’’
‘’க்கா’’
’’சொல்லு.
அக்கா யாரு?’’
அவன்
ஸ்ரீதேவியைப் பார்த்து சிரித்தான்.
இருவரும்
ஊஞ்சலில் அமர்ந்து கொண்டனர். தேவி மெதுவாக ஆட்டினாள். வேகமாக ஆட்டினாள். வேகமாக ஆட்டும்
போது சியாம் உற்சாகமானான். ஊஞ்சலுக்கு முன் ஒரு நைலான் கயிறு தொங்கும். ஊஞ்சலில் அமராமல்
படுத்திருக்கும் போது அந்த கயிற்றைப் பிடித்து இழுத்தால் ஊஞ்சல் மெல்ல அசையும். வேகமாக
இழுத்தால் இன்னும் வேகமாக அசையும். சியாமுக்கு அந்த நுட்பம் பிடிபட்டது. தனியாக ஊஞ்சலில்
ஏறி கயிற்றைப் பிடித்து ஆட்டத் துவங்கினான். ஊஞ்சலின் அசைவுக்கு ஏற்ப கேட்கும் கிரீச்சிடல்
அவனுக்கு ஆர்வமளித்தது. ஸ்ரீதேவி அவனை சைக்கிளில் குழந்தைகள் மைதானத்துக்கு அழைத்துச்
சென்றாள். அங்கிருந்த பிள்ளைகளைக் கண்டதும் குதூகலமானான் சியாம். கைகளை காற்றில் அடித்து
கால்களால் எம்பி எம்பி குதித்தான். முகமெங்கும் சிரிப்பு. சிரிப்பே முகமாகி விட்டதைப்
போல.
அவர்கள்
குடும்பத்தை நான்தான் ரயில் நிலையத்தில் கொண்டு விட்டேன். சியாம் அவர்களுடன் செல்லவில்லை.
ஊஞ்சலில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தான்.
‘’இந்து!
இங்க ஒரு மாசம் இருக்கட்டும். அவனுக்கும் புதுசா நிறைய பேர் முகத்தைப் பார்த்து அங்க
இங்க நடந்து ஓடி ஏதாவது செஞ்சுட்டு இருக்கட்டும்.’’ கங்கா மாமி சொல்லி விட்டார்கள்.
பரிமள
விலாஸில் யாராவது ஒருத்தர் கையில் சியாம் இருப்பான் அல்லது ஒரு கையிலிருந்து இன்னொரு
கைக்கு மாறிக் கொண்டிருப்பான். கார் உதிரி பாகங்கள் மாற்றும் போது அங்கு வந்து சிறு
கருவிகளை கையில் வைத்துக் கொள்வான். இயக்கிப் பார்ப்பான். யாருடனாவது மைதானத்துக்குச்
செல்வான். ஓடுவதும் குதிப்பதும் எதன் மீதாவது ஏறுவதுமே எப்போதும் வேலை. பக்குவம் கொண்டவர்கள்
செய்யும் செயல்களில் கூடிவரும் நேர்த்தி அவன் செயல்களில் கூடிக்கொண்டு இருந்தது.
ஐயர்
அவனை திருச்சிக்கு அழைத்துச் சென்று ஒரு நரம்பியல் மருத்துவரிடம் காட்டினார்.
‘’மனித
மூளை பிரும்மாண்டமானது. மனுஷ வாழ்க்கை அதை விட பிரும்மாண்டமானது. மருத்துவம் அதை புரிஞ்சுக்க
பல விதத்திலயும் முயற்சி செய்யுதுன்னு சொல்லலாம். பையன் ஆர்வமா இருக்கான். சந்தோஷமா
இருக்கான். அவன் நிகழ்காலத்தில இருக்கான். எதிர்காலத்தில நல்லது நடக்கும்னு நம்புவோம்.
நிச்சயம் நடக்கும்.’’
சில
வருடங்களுக்குப் பின்னால் சியாம் குடும்பத்தினர் கும்பகோணம் வந்திருந்தனர். வைத்தீஸ்வரன்
கோயிலுக்கு சென்றார்கள். அந்த சவாரியை நான்தான் ஓட்டினேன். சியாம் துலாபாரத்தில் அமர்ந்து
அதன் சங்கிலியை ஆர்வமாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். மறுதட்டில் வெல்லம்
இருந்தது.
*