Sunday, 9 October 2022

கிழவரைப் பற்றி ஒரு கனவு

இன்று தி.ஜா -வின் ‘’கிழவரைப் பற்றி ஒரு கனவு’’ சிறுகதை வாசித்தேன். 

ஆயிரம் பிறை கண்ட ஒரு பெரியவர். இளமையிலேயே மனைவியை இழக்கிறார். அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை. மனைவி இறக்கும் போது குழந்தைக்கு 12 வயது. அந்த மகனை வளர்க்க தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்கிறார். மகன் நல்ல பதவிக்கு வருகிறான். அதிகாரவர்க்கத்தில் முக்கிய இடத்தில் இருக்கிறான். பெரியவர் பள்ளிக்கூட ஆசிரியர். பணி ஓய்வு பெறுகிறார். அதன் பின்னும் சில தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கிறார். ஒரு கோயிலில் கணக்கு எழுதுகிறார். மனைவி இறந்ததிலிருந்து வாழ்நாள் முழுக்க சுயமாக சமையல் செய்து சாப்பிடுபவர் பெரியவர். தள்ளாமையால் இனி அவ்வாறு முடியாது என்ற நிலை ஏற்படுகிறது. மகனிடம் வருகிறார். மகன் மிகக் கடுமையாக நடந்து கொண்டு இங்கிருந்து போய் விடுங்கள் என்று சொல்கிறான். 

மகன் தற்போது பணி புரியும் ஊரில் அவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்த போது பணியாற்றியிருக்கிறார். அப்போது அவருடைய அண்டை வீட்டுக்காரர் ஒருவரை நினைவு கூர்ந்து அவரைச் சென்று சந்திக்கிறார் பெரியவர். அவரிடம் தனது கதையைக் கூற அவர் கதைசொல்லியாக பெரியவர் கதையைக் கூறுவதாக தி.ஜா அமைத்துள்ளார். 

கதைசொல்லியின் குடும்பம் பெரியவருக்காக மனம் இளகுகிறது. பெரியவர் மகனின் நூதன மனநிலைக்கு என்ன காரணம் என விவாதிக்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் அற்ப புத்திகளில் ஒன்று இது என பேசிக் கொள்கிறார்கள். பெரியவர் ஒரு வார்த்தை சொல்கிறார். ‘’கடவுள் தியாஜ கருணை கொண்டவன் என்பார்கள். தனது மகன் தியாஜ கோபம் உள்ளவன்’’ என்கிறார். 

அற்பத்தனத்துக்கு எண்ணற்ற காரணங்கள். 

கதைசொல்லியின் மகளுக்கு பெரியவர் ஊருக்கு கிளம்பிச் சென்ற பின் ஒரு நூதனமான கனவு உண்டாகிறது. அந்த கனவில் பெரியவர், அவர் பிள்ளை, பெரியவரின் மருமகள், கதைசொல்லியின் குடும்பத்தினர் என அனைவரும் இருக்கின்றனர். 

மீண்டும் வழக்கமான சாதாரண நாளும்  அன்றாடச் செயல்பாடுகளும் நிகழத் தொடங்கியதை சொல்லி கதையை நிறைவு செய்கிறார் தி.ஜா.