தி.ஜானகிராமனின் ‘’யோஷிகி’’ சிறுகதையை இன்று வாசித்தேன்.
20 ஆண்டுகளுக்கு முன்னால் முதல் முறை இந்த கதையை வாசித்தது நினைவுக்கு வந்தது. அதன் பின் பலமுறை வாசித்திருக்கிறேன். ஜானகிராமன் சொற்களில் உரையாடல்களில் உரையாடலின் இடைவெளிகளில் மாயங்கள் பல நிகழ்த்தும் மகத்தான கலைஞன்.
கதைசொல்லி ஜப்பான் செல்கிறான். ஜப்பானிய சமூகம் கதைசொல்லியை மிகவும் கவர்ந்து விடுகிறது. ஜப்பானிய மக்களின் நேர்த்தியும் ஒழுங்கும் அவன் உள்ளத்தை நிறைக்கிறது. ஜப்பானியர்களின் அழகியலும் நற்பண்புகளும் புன்னகையும் கதைசொல்லியை அதிசயிக்க வைக்கிறது. கதைசொல்லியை மட்டும் அல்ல ஜப்பானைக் காணும் எவரும் அதனை உணர முடியும்.
யோஷிகி கதையை இவ்வாறு துவக்குகிறார் தி. ஜா. ‘’கியாத்தோ ஸ்டேஷனில் இறங்கியதும் ஒரு டாக்ஸியைப் பிடித்து கொக்குஸாய் ஹோட்டலுக்கு விடச் சொன்னேன்.’’ இதுதான் முதல் வரி. கியாத்தோவை நம் மனம் அந்த நகர் எப்படி இருக்கும் என கற்பனை செய்யத் துவங்குகிறது. ஒரு வாசகனை முதல் வார்த்தை முதல் வரியிலேயே கதைக்குள் கொண்டு வருவது என்பது சிறுகதையின் வடிவ லட்சணங்களில் முக்கியமான ஒன்று.
கதைசொல்லி இதுவரை நேரில் சந்தித்திராத மனிதர் யோஷிகி. கியாத்தோ வரும் அன்றே இருவரும் சந்திப்பதாகவும் அங்கே உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதாகவும் முடிவாகியிருந்தது. தவிர்க்க இயலாத காரணங்களால் யோஷிகியால் வர முடியவில்லை. ஹோட்டலின் பணிப்பெண் ஹிரோமி ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செய்து தருகிறாள். மேலும் வாசிக்க இரு புத்தகங்களை அளிக்கிறாள். புனைவு ஒன்று அபுனைவு ஒன்று.
கதைசொல்லியும் ஹிரோமியும் ஈடுபடும் ஒரு உரையாடல் சுவாரசியமானது. கதைசொல்லி சைவ உணவு உண்பவன். ஹோட்டல் மெனுவில் அனைத்தும் புலால் உணவாக உள்ளது. ஹிரோமி மீனும் முட்டையும் கொண்டு வரட்டுமா என்று கேட்கிறாள். மீன் தாவரமா என வினவுகிறான் கதைசொல்லி. பிஸ்கட்டும் காஃபியும் தருமாறு கேட்டுக் கொள்கிறான் கதைசொல்லி. கொண்டு வரக் கிளம்பும் போது ஹிரோமியிடம் பால் விட்ட காஃபி என்கிறான். நீங்கள் முழு சைவம் என்று சொன்னீர்களே ; எனக்காக எதையும் மாற்றிக் கொள்ள வேண்டாம் என்கிறாள் ஹிரோமி. ‘’பால் விட்ட காஃபி ‘’ எனக் ‘’கதறினான்’’ கதைசொல்லி என எழுதுகிறார் தி.ஜா.
யோஷிகிக்கும் கதைசொல்லிக்கும் ஜப்பானியர் இயல்பு குறித்து பேச்சு நடக்கிறது. அப்போது இந்திய மண்ணின் யோகம் குறித்து யோஷிகி கூறுகிறார். எந்நிலையிலும் மனம் சலனமற்று ஒரே நிலை கொள்ளல் என யோஷிகி கூறுகிறார்.
யோஷிகியால் ஒரே நாள் மட்டுமே கதைசொல்லியுடன் செலவிட முடிகிறது. அந்த ஒருநாளில் முழுமையாக கதைசொல்லி உடனிருந்து கியாத்தோவின் பௌத்த ஆலயங்களையும் ஷிண்டோ ஆலயங்களையும் அழைத்துச் சென்று காட்டுகிரார். திட்டமிட்டவாறு மூன்று நாளும் இருக்க முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து விட்டு புறப்படுகிறார் யோஷிகி. மறுநாள் கதைசொல்லியை ரயில் நிலையத்தில் வழியனுப்ப ஹிரோமி வருகிறாள். யோஷிகியால் ஏன் மூன்று நாட்களும் இருக்க முடியவில்லை என்ற காரணத்தை அப்போது கூறுகிறாள்.
ஜப்பானியரின் புன்சிரிப்பைப் போல ஆடாமல் அசங்காமல் சென்றது கதைசொல்லி பயணித்த ரயில் என எழுதுகிறார் தி.ஜா. மனம் ஆடாமல் அசங்காமல் இருப்பது தான் யோக நிலை என்ற யோஷிகியின் எண்ணத்துடன் இணைத்து வாசிக்க வேண்டிய வரி இந்த சிறுகதையின் கடைசி வரி.