Saturday 3 August 2019

கண்டதைப் படித்தால்

எனது கல்லூரி நாட்களில், நான் உ.வே.சா-வின் ‘’என் சரித்திரம்’’ நூலை வாசித்தேன். ஓர் இலக்கிய வாசகனாக அந்நூலில் அவர் மொழியின் மீதும் கல்வியின் மீதும் இலக்கியத்தின் மீதும் கொள்ளும் பெருங்காதல் அவர் காட்டும் காட்சிகளின் வழியே புலப்பட்டுக் கொண்டேயிருக்கும். உ.வே.சா மயிலாடுதுறையில்தான் தமிழ் படித்தார். அவரது ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி தெற்கு வீதியில் வசித்தவர். அவ்வீதியில் திருவாவடுதுறை மடத்தின் கிளை ஒன்று இருந்தது. இப்போதும் அதே இடத்தில் இருக்கிறது. அவர் வீட்டிலும்  அங்கும்தான் உ.வே.சா.வின் தமிழ்ப்பாடம் நடக்கும். உ.வே.சா அங்குதான் தங்கியிருந்தார். நடந்து கொண்டிருந்தது ஆங்கில ஆட்சி. தமிழில் காட்டும் ஆர்வத்தை இங்கிலீஷ் கற்றுக் கொள்வதில் காட்டினால் சர்க்கார் உத்யோகம் கிடைக்கும்; வருமானம் நன்றாக இருக்கும் என அவரது உறவினர்கள் பலர் ஆலோசனை கூறுகின்றனர். தமிழ்தான் படிப்பேன் என உறுதியாக இருக்கிறார்.

உ.வே.சா சொற்களின் வழியே அப்போது தமிழ் கற்பிக்கப்பட்ட முறையை கற்பனை செய்து கொள்கிறேன். காலை ஐந்து மணி அளவில் படிப்பு தொடங்கி விடும். எல்லா நூலையும் மனப்பாடம் செய்ய வேண்டும். மனப்பாடம் செய்வதே அக்கால மொழிக் கல்வியின் முதல்நிலை. மனம் மொழியாலானதாக ஆக வேண்டும். மனத்தில் மொழி மட்டுமே இருக்க வேண்டும். அவனே மொழி மாணவனாயிருக்க தகுதி கொண்டவன். ஒரு நாளில் கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரம் படிப்புக்கு ஒதுக்குகிறார்கள். ஆசிரியர் பாடம் சொல்கிறார். இலக்கியப் பிரதியை தான் அணுகும் விதத்தை ஆசிரியர் முன்வைக்கிறார். அது மாணவன் மனத்தில் அடித்தளமாய் அமைகிறது. உ.வே.சா இவ்விதமாக வெவ்வேறு ஆசிரியர்களிடம் குறைந்தது பதினாறு ஆண்டுகளாவது படித்திருப்பார் என்று தோன்றுகிறது. ஐந்து வயதிலிருந்து இருபத்தொரு வயது வரை.

உலகியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் முன்னரே மொழி மனதில் இருக்கிறது. ஆசிரியர் உருவாக்கிக் கொடுத்த அடித்தளத்திலிருந்து தன் கற்பனையால் மாணவன் தன்னை விரிவுபடுத்திக் கொள்கிறான். அன்று மொழி பயிலும் மாணவன் நிகண்டுகளைப் பயில வேண்டியிருந்தது. ஒரு பொருளைக் குறிக்கும் பல்வேறு சொற்களைத் தொகுக்கும் நூலே நிகண்டு எனப்படும்.

திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை இயற்றிய அபிதான மணிமாலை என்ற நிகண்டை  இன்று வாசித்தேன். இந்நூலைப் பதிப்பித்தவர் உ.வே.சா. தெய்வப் பெயர்த் தொகுதி, மக்கட் பெயர்த்தொகுதி, விலங்கின் பெயர்த்தொகுதி, இடப்பெயர்த் தொகுதி, பொருட்பெயர்த் தொகுதி என பல்வேறு பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நவீன வாசகனால் ஒரு பொருளைக் குறிக்கும் வெவ்வேறு சொற்களின் வழியே மொழியை , காலகட்டங்களை கற்பனை செய்து கொள்ள முடியும்.