Sunday 29 September 2019

நவராத்திரி விரத துவக்கம்

இன்றிலிருந்து ஒன்பது நாட்கள் எவ்வகையான உணவும் உண்ணாமல் நீர் மட்டுமே அருந்தி விரதமிருக்க உள்ளேன். உணவைத் துறப்பதாக முடிவெடுத்ததுமே ஒரு பெரும் சுதந்திரம் சூழ்ந்து விட்டதான உணர்வு ஏற்படுகிறது. அது ஒருவகையான மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் படைப்பூக்கமான மனநிலையைக் கொண்டவன். எனவே எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பவன். வாழ்வின் ருசிகளையும் இனிமைகளையும் விரும்புபவன். காலியாக இருக்கும் வயிறு என்பது எண்ணங்களில் மன ஓட்டத்தில் சௌகர்யமான இடைவெளியை உண்டாக்குகிறது. அந்த இடைவெளி செயலாற்றுவதில் முக்கியமாக உதவுகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் ஒரு பின்னடைவைச் சந்தித்திருந்தது. இப்போது அந்த தடை நீங்கியிருக்கிறது. எனக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பெரிய கட்டுமானப் பணியைத் துவங்க உள்ளேன். நமக்கான பணியை - நமக்கான தொழிலை நாம் ஆர்வத்துடன் மேற்கொள்ளும் போது அளப்பரிய சக்தியை நாம் உணர்கிறோம். மேலும் சில புதிய பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. 

வாழ்க்கை பழக்கங்களால் ஆனது. மனித குலம் தன் ஆயுளை நீடித்து தாக்குப் பிடித்துக் கொள்ள பல்லாயிரம் ஆண்டுகளாக உணவு குறித்த பல்வேறு வழக்கங்களை உருவாக்கியிருக்கிறது. இந்தியா உடல் குறித்தும் உணவு குறித்தும் பல்வேறு வகையில் சிந்தித்த நாடு. அழியும் இயல்பு கொண்ட உடலை இறைமையை நோக்கிச் செல்லும் நகர்வின் முக்கிய படியாகக் கருதிய நாடு. எனக்கு எப்போதுமே ஆரோக்கியமான வாழ்வின் மீது பெரும் விருப்பம் உண்டு. 

என்னால் பசி பொறுக்க முடியாது. எனக்கு ஒவ்வொரு வேளை உணவையும் அம்மாவே பரிமாறுவார்கள். அம்மா வெளியில் சென்றிருந்தால் கூட அவர்கள் வரும்வரை காத்திருந்தே உண்பேன். எனவே எங்கே சென்றிருந்தாலும் நான் உணவருந்தும் நேரத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்து விடுவார்கள். ஒன்பது நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் என்பது அம்மாவுக்கு வருத்தம். வாரத்தில் ஒரு நாள் உணவருந்தாமல் இருந்தால் வருடத்துக்கு 52 நாட்கள் விரதமிருந்த கணக்காகும். ஏன் இப்படி ஒரே மூச்சில் ஒன்பது நாட்கள் விரதம் இருக்கிறேன் என்று உடலை வருத்திக் கொள்கிறாய் என்றார்கள். அவர்கள் சொல்வது சரிதான். இந்த விரதமிருந்ததும் அவ்வாறு செய்கிறேன்; அப்போதும் நவராத்திரி விரதம் இருப்பேன் என்று சொன்னேன். எனக்குள் இருக்கும் சிறுவனை அம்மா நன்றாக அறிவார்கள். 

நிறைய வேலையிருக்கிறது. பல விஷயங்கள் திட்டமிட வேண்டியுள்ளது. முக்கியமான செயலாக்கங்கள் உள்ளன. அன்னையர் எப்போதுமே பரிந்து கொடுப்பவர்கள். அன்னைத் தெய்வங்களிடமிருந்து மானுடன் பெற வேண்டியவை இன்னும் பல இருக்கின்றன.