Tuesday 1 October 2019

காலி வயிறு

நாம் நமது உணவுப் பழக்கங்கள் குறித்து யோசித்துப் பார்க்க வேண்டும். காலை எழுந்தவுடன் தேனீர் அருந்துகிறோம். பாலும் சர்க்கரையும் எளிதில் செரிமானம் ஆகக் கூடியவை அல்ல. அதுவும் காலைப் பொழுதில். நாளின் துவக்கமே தேனீர் அருந்தியதும் மந்தமாகும். பழக்கத்தால் நாம் அதனை உணர்வதில்லை. சர்க்கரைக்கு நம் உடல் பழகி விடுகிறது. இப்போது பெரும்பாலும் பாக்கெட் பால் பயன்படுத்தப்படுகிறது. அது நேரடியான கறவைப்பால் அல்ல. பல்வேறு விதமான வேதி மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட திரவம். நான் இந்த நவராத்திரி விரதத்தை நிறைவு செய்த பின்னர் பாலோ தேனீரோ காஃபியோ அருந்தப் போவதில்லை. இந்த விரதம் அளித்திருக்கும் முதல் பயன் இது.

காலையில் சுக்குத் தண்ணீர் குடிக்கலாம். எலுமிச்சை ஜூஸ் -தேன் கலந்து குடிக்கலாம். பிளாக் டீ அருந்தலாம். ஆனால் நம் உடல் காலை நாம் விழித்ததுமே பாலையும் சர்க்கரையையும் செரிப்பதற்கான  ரசாயனங்களை உருவாக்கத் துவக்குகிறது. அது நம் மனநிலையுடன் சென்று இணைந்து கொள்கிறது. நம்மால் மனம் விரும்புவதை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. 

காலியான வயிறுடன் இருப்பது யோகாசனங்கள்  செய்வதற்கான அடிப்படையை உருவாக்கிக் கொடுக்கிறது. நாம் நமது வாழ்க்கைமுறையால் பரபரப்பான மனநிலையுடன் இருக்கிறோம். வெளி விஷயங்களைக் கையாள்வதில் மட்டுமல்ல நம்மைப் பற்றி எண்ணிக் கொள்வதிலும் அந்த பரபரப்பு உருவாகி விடுகிறது. எளிய சிறிய யோகாசனங்களை தொடர்ந்து செய்யும் போது அது உடல் நிலையில் மட்டுமின்றி மனநிலையிலும் ஓர் சகஜத்தன்மையை உண்டாக்குகிறது. காலை ஐந்தரை மணிக்கு எழுந்து தினமும் அரைமணி நேரம் யோகா செய்ய முடியும் என்றால் நாம் உடல்நலத்திற்கு  உவப்பான செயலைச் செய்கிறோம்.  உடலும் நமக்கு பெரும் ஒத்துழைப்பை வழங்கும்.

யோகா செய்வது உடலை லகுவாக்குகிறது. மூட்டுகளில் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டு வருகிறது. உடல் எடையற்று இருப்பதால் நடக்கும் போதே பறப்பதைப் போல இருக்கிறது.

நாம் கொள்ளும்  கவலைகளில் பல நம் உடல்நலன் தொடர்பானதும்  நம் ஆரோக்கியம் தொடர்பானதும் ஆகும். பல சமயம் தீர்வுகள் சிக்கலைக் காட்டிலும் எளிதானவை. நாம் எளியவற்றை சிக்கலாக்கிக் கொள்கிறோம்.