எனது நண்பர் ஒருவர் கடந்த சில மாதங்களாக ஒரு புதிய கார் வாங்குமாறு கூறிக் கொண்டேயிருக்கிறார். இப்போது இருக்கும் காரை ஏன் மாற்ற வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. பழையதாகி விட்டது அதனால் மாற்ற வேண்டும் என்கின்றனர் நண்பர்களும் நலம் விரும்பிகளும். வண்டியின் இயக்கம் நன்றாகத்தான் இருக்கிறது. மயிலாடுதுறையின் நகர அமைப்பில் கடைவீதியில் காரைப் பார்க் செய்வ்து என்பது இயலாத காரியம். கடைவீதிக்குப் பக்கத்தில் இருக்கும் தெருக்களில் காரை நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டும். எனவே நான் மயிலாடுதுறைக்குள் டூ-வீலரில் செல்வதையே விரும்புவேன். வெளியூர் செல்வதாயிருந்தால் நான் ரயிலையே முதல் தேர்வாகக் கொள்வேன். சிரமமின்றி ஓய்வாகப் பயணிக்கலாம். மக்களைச் சந்திக்கவும் அவதானிக்கவும் அவர்கள் எண்ணங்களை அறியவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். செலவும் மிகக் குறைவு. எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் நகருக்குள் சைக்கிளில்தான் செல்வார். வெளியூருக்கு ரயிலில் செல்வார். என்னிடம் ஒருமுறை சொன்னார். அவரிடம் ஒரு ஹெலிகாப்டர் சொந்தமாக வைத்துக் கொண்டு பயணிக்கும் அளவுக்கு செல்வம் இருக்கிறதென. அது அவருடைய பக்கத்து வீட்டுக் காரருக்குக் கூட தெரியாது. மிக எளிய வீடு அவருடையது. எளிய பொருட்களால் ஆனதாக அவருடைய வீடு இருக்கும். சமீபத்தில் மனைவியுடன் ஐரோப்பா சென்று வந்தார். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்குச் சென்று வந்தவர்.அவர் மிகக் குறைவாகவே பேசுவார். என்னிடம் மிகவும் பிரியத்துடனும் சகஜமாகவும் இருப்பார். அவசியம் என்றால் மட்டுமே ஒரு முறைக்கு இரு முறை யோசித்து எதையும் வாங்குமாறு சொல்வார். இருந்தாலும் பல விதங்களில் தொடர் வற்புறுத்தல் என்பதால் ஒரு புதிய கார் வாங்கலாமா என்று பரிசீலிக்கத் துவங்கினேன்.
என்னிடம் இப்போது இருப்பது மாருதி ஆம்னி. அதில் எட்டு பேர் பயணிக்க முடியும். சிறிய வாகனம். 800 சிசி எஞ்சின் திறன் கொண்டது. அளவிலும் அடக்கமானது. ஆனாலும் பெரிய வாகனம் என உரிமையாளரை நம்ப வைப்பது.
புதிய வாகனமாக மஹிந்திரா ‘’தார்’’ வாங்கலாமா என்று யோசித்தேன். மஹிந்திரா மாருதியைப் போலவே ஓர் இந்திய நிறுவனம். ராஜஸ்தானின் ‘’தார்’’ பாலைவனத்தை நினைவுபடுத்தும் பெயர். ராஜஸ்தானின் ராஜபுத்திரர்கள். சித்தூர்கர் கோட்டை முற்றுகை. அன்னியர்களிடமிருந்து பண்பாட்டைக் காக்க நெருப்பில் குதித்து ஆத்ம நிவேதனமாகின்றனர் ராஜபுத்ர பெண்கள். ஹால்திகாட் யுத்தம். பிருத்விராஜ் சௌஹான். சம்யுக்தா தேவி. சதுரங்கக் குதிரைகள் நாவல். ‘’தார்’’ என்ற பெயரிலிருந்து கற்பனையில் ரொம்ப தூரம் சென்று விட்டேன். அந்த வண்டியை எடுத்துக் கொண்டு இந்தியா முழுதும் செல்கிறேன். கார்கில். லடாக். ஆஜ்மீர். டேராடூன். அல்மோரா. கல்கத்தா. அப்பப்பா பயணியாக இருப்பது தான் எவ்வளவு பெரிய பேறு!
கார் வாங்கச் சொன்ன நண்பரும் நானும் எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு ‘’தார்’’ எங்களைக் கடந்து சென்றது. நான் அதைப் பார்த்துப் பரவசமாகி ‘’இதுதான் இதுதான்’’ என்று கூவினேன். நண்பர் சற்று தயக்கத்துடன் ‘’ஜீப் போல இருக்கே’’ என்றார். அதனால் என்ன என்று எனக்குத் தோன்றியது. நான் இணையத்தில் வாசித்த ‘’தார்’’ பெருமைகளை அவரிடம் விரிவாக எடுத்துரைத்துக் கொண்டிருந்தேன். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ‘’ஜீப் வேண்டாம்; நாம் ஏதாவது நல்ல காராக வாங்குவோமே’’ என்றார். நடந்ததை அம்மாவிடம் சொன்னேன். எல்லாரையும் போல நீ யோசிப்பதில்லை; செயல்படுவதில்லை என்பது தானே உனது தனித்துவம் என்று சொன்னார்கள். அம்மா என்னைப் புரிந்து வைத்திருக்கிறார் என சந்தோஷப்பட்டேன். இந்த உலகில் நம்மைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒருவர் இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய சந்தோஷம். பிறகு அம்மா சொன்னார்கள்: ‘’பிரபு! நீ புது கார் வாங்கலன்னாலும் பரவாயில்லை; எக்காரணம் கொண்டும் நீ சொன்ன மஹிந்திரா ஜீப்பை வாங்கிட்டு வந்து வீட்டுல நிறுத்திடாத”.
வீட்டின் அமைப்பில் சில மாறுதல்களைக் கொண்டு வரலாமா என்று மனதில் ஒரு யோசனை சமீபநாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. கட்டிடம் என்பது எனது தொழில் என்பதால் சொந்த வேலை செய்ய மனம் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை; இடத்திற்கு அங்கு வாழும் மனிதர்களே அர்த்தம் அளிக்கிறார்கள் என்பது என்னுடைய ’’ஃபேவரைட் தியரி’’. எனது வீடு இரண்டு தளங்கள் கொண்டது. தரைத்தளமும் முதல் தளமும். தரைத்தளத்தில் கூடம், உணவுக்கூடம், சமையலறை, ஒரு சிறு அலுவலக அறை மற்றும் ஒரு அறை. முதல் தளத்தில் இரு அறைகள். முதல் தளத்தில் என்னுடைய அறை இருக்கிறது. நான் முதல் தளத்துக்கு உறங்கும் போது மட்டுமே செல்வேன். எப்போதும் கூடத்திலும் என் அலுவலக சிறு அறையிலுமே இருப்பேன்.
போர்டிகோவிற்குக் கீழே ஏறத்தாழ 100 சதுர அடி கொண்ட இடம் இருக்கிறது. அதனை ஒரு அறையாக மாற்றலாமா என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அதனை வரவேற்பு அறையாக ஆக்க முடியும். என்னுடைய அலுவலக அறையில் ஒரு புத்தக ஷெல்ஃப் அமைக்க வேண்டும். மேஜைக்கு அடியில் இருக்குமாறு கோப்புகளை வைக்க ஒரு பிளைவுட் ஷெல்ஃப் அமைக்க வேண்டும். மாடியில் எனது அறையில் ஒரு புத்தக ஷெல்ஃப் அமைக்க வேண்டும். என்னிடம் நிறைந்திருப்பவை புத்தகங்கள். என் உற்ற தோழமையும் புத்தகங்களே. ஆசாரி எப்போது வேலை ஆரம்பிக்கலாம் என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார். கட்டிடப் பொறியாளர்களிடம் உலகத்தில் இனிய ஓசை எது என்று கேட்டால் டிரில்லிங் மெஷின் இயங்கும் சத்தமும் ஜல்லி அள்ளப்படும் சத்தமும் கான்கிரீட் மெஷின் சுழலும் சத்தமும் என்பார்கள். உலகின் இனிய இசைகளில் ஒன்றுக்காக செவிகள் காத்திருக்கின்றன. தீபாவளிக்கு முன் பணியைத் துவங்கலாம் என இருக்கிறேன்.
மாற வேண்டும் என்ற எண்ணமே மாற்றத்தைக் கொண்டு வருகிறது. ஈஸ்வர ஹிதம்.