Tuesday, 15 October 2019

பழக்கம்

எனக்கு இப்போது ஒரு நண்பர் இருக்கிறார். அப்படியென்றால், சமீப காலமாக அடிக்கடி சந்திக்கும் நண்பர். நான் எவரிடமும் மூன்று விஷயங்கள் குறித்து பேசுவதேயில்லை; என்னிடம் ஒரு மூத்த முக்கியமான வட இந்திய சமூக சேவகர் ஒருவர் வழங்கிய அறிவுரை. எவரிடம் பேசினாலும் அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு குறித்து பேசக் கூடாது என்பது. தமிழ்நாட்டில் நண்பர்கள், உறவினர்கள் என எவர் கூடினாலும் இந்த மூன்று விஷயங்கள் குறித்துதான் பேசுவார்கள். அரசியல் எவராலும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயம் அல்ல. அது லட்சக்கணக்கானோரின் நேரத்தாலும் செயலாலும் ஆனது. அரசியல்வாதிகளே வீட்டிலோ நண்பர்களிடமோ உறவினர்களிடமோ சக அரசியல்வாதிகளிடமோ அரசியல் பேச மாட்டார்கள். பொதுவான விஷயங்களையே பேசுவார்கள். அரசியல் பேசுவதெல்லாம் கட்சிக் கூட்டங்களில் தொண்டர்களிடம் மட்டும்தான். அதிகாரத்தின் உயர்நிலைகளில் நிகழும் விஷயங்களின் ஒரு சிறு பகுதியையே நாம் அறிகிறோம். நமக்கு முழுமையான விபரம் கிடைக்காத ஒன்றைப் பற்றி பேசும் போது அதில் நம் விருப்பு வெறுப்புகள் மட்டுமே இருக்கும் என்பதால் பேசக் கூடிய இருவருக்கும் ஒருவரைப் பற்றி இன்னொருவருக்கு ஒரு நல்ல புரிதல் உருவாக வாய்ப்பு குறைவு. சினிமா கலை சார்ந்தது. ஒருவரின் கலை உணர்வும் இன்னொருவரின் கலை உணர்வும் அளவில் தரத்தில் ஈடுபாட்டில் வேறுபாடு கொண்டிருக்கும். ஆதலால் சினிமா குறித்து பேசும் போதும் நல்ல புரிதலை உண்டாக்க முடியாது. விளையாட்டு ஒவ்வொருவரின் விருப்பம் சார்ந்தது. ஒருவருக்கு கிரிக்கெட் பிடிக்கும். இன்னொருவருக்கு ஹாக்கி பிடிக்கும். இன்னொருவருக்கு டென்னிஸ். அந்த விளையாட்டிலும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வீரரைப் பிடிக்கும். விவாதங்கள் முடிவில்லாமல் செல்லும். 

நான் இந்த மூன்று விஷயங்களை எவரிடமும் பேசுவதில்லை என்பதால் நான் சந்திக்கும் எவரிடமும் எனக்கு நிறைய நேரமும் பேசுவதற்கு நிறைய விஷயமும் இருக்கும். என்னுடன் கட்டுமானப் பணியில் பணிபுரிந்த தொழிலாளர் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன்னால், பணி புரிந்து கொண்டிருந்த போது உடல்நிலை மிகவும் சோர்வாக இருப்பதாகக் கூறினார். நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தேன். காசநோய் இருப்பது தெரிய வந்தது. அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருந்துகள் வாங்கித் தந்தேன். அந்த பணியாளர் ஓர் இளைஞர். அவருக்கு காசநோய் குறித்தோ அதன் விளைவுகள் குறித்தோ தெரியவில்லை. அவர் உடனிருப்பவர்கள் அவரிடம் இது குறித்து வெவேறு விதமாகக் கூறி பீதியூட்டுவார்கள் என்பதால் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அவர் வீட்டுக்குக் கூட விபரம் தெரியாது. அப்போதெல்லாம் அரசு மருத்துவமனையில் வாராவாரம் மருந்து கொடுப்பார்கள். ஒவ்வொரு வாரமும் உடன் செல்வேன். மருத்துவமனை ஊழியர்கள் நோயாளி வந்தால் போதும் நீங்கள் ஏன் ஒவ்வொரு வாரமும் வந்து சிரமப்படுகிறீர்கள் என்பார்கள். ஆனால் அவர் செல்லாமல் இருந்து விட்டால் உடல்நிலை சிக்கலாகுமே என்பதால் நான் எப்போதும் உடன் செல்வேன். என்னுடைய வீட்டிலும் யாருக்கும் இது தெரியாது. ஒரு மாதம் தொடர்ச்சியாக கவனம் கொடுத்த பின் அந்த பணியாளரே அரசு மருத்துவமனைக்குச் சென்று மருந்தை வாங்கி வந்து என்னிடம் காட்டி விட்டு தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொண்டிருந்தார். ஆறு மாதம் மருந்து எடுத்துக் கொண்டார். உடல்நிலை பூரணமாக குணம் அடைந்தது. பூரண குணம் பெற்ற பின் வெளிநாட்டில் கட்டுமான வேலை கிடைத்து சென்று விட்டார். திரும்பி வந்ததும் அவருக்குத் திருமணம் நடந்தது. நான் சென்றிருந்தேன். என்னுடைய கட்டுமானத்திலும் பின்னர் பணி புரிந்தார். சில நாட்களுக்கு முன்னால் அவரும் அவர் மனைவியும் குழந்தையும் டிவிஎஸ் 50ல் செல்வதைப் பார்த்தேன். எனக்கு அவர் என்னுடைய தொழிலாளராக நினைவில் இருந்தாரேயொழிய அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது என் நினைவை விட்டே அகன்று விட்டது. அவர் சென்ற நிமிடங்கள் கழித்துதான் அந்த நினைவுகள் திரும்ப வந்தன. ஒரு சரியான செயலை சரியான நேரத்தில் செய்தோம் என்ற நிறைவு இருந்தது. மனித உறவுகளில் நிறைவு எஞ்சி நிற்குமாயின் அதை விடச் சிறப்பானது வேறொன்றில்லை.

ஊரில் என்னுடன் பழக்கத்திலிருப்பவர்கள் மிகக் குறைவு. என்னை அறிந்தவர்களும் மிகக் குறைவு. ஆதலால் எப்போதும் எனக்கு பெரும் சுதந்திரம் இருக்கும். நான் எனக்கேயான பிரத்யேக உலகில் உலவிக் கொண்டிருப்பேன். எனக்கு அடுத்தவர்கள் பற்றிய செய்திகளில் ஆர்வம் மிகக் குறைவு. சின்ன வயதிலிருந்தே அப்படி பழக்கம். என்னுடைய தொழில் சார்ந்து நான் தெரிந்து வைத்திருக்க வேண்டியவர்களை மட்டுமே தெரிந்து வைத்திருப்பேன். என்னால் என் தொழில் சார்ந்து எந்த பணியையும் மற்ற எவரையும் விட விரைவாகவும் சிறப்பாகவும் செய்து விட முடியும்.

நான் எவரைச் சந்தித்தாலும் அவர்களிடம் அவர்கள் உடல்நலன் குறித்தும் அவர்கள் குழந்தைகள் கல்வி குறித்தும் அவர்களுடைய பணி குறித்தும்  விசாரிப்பேன். உடல்நலன் குறித்து அக்கறையில்லாமல் இருப்பார்கள். நான் சொல்லி சிகரெட்டை முழுமையாகக் கைவிட்ட நண்பர்கள் உண்டு.  குழந்தைகள் கல்வி குறித்து அறியாமையுடன் இருப்பார்கள். உடல்நலனுக்கு நடைப்பயிற்சியும் யோகாவும் செய்யச் சொல்வேன். குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்கு ஏதேனும் ஆலோசனைகள் சொல்வேன். நான் சொல்லி வெளியூரில் ஹாஸ்டலில் சேர்த்து கல்வியில் முன்னேற்றம் கண்ட குழந்தைகள் உண்டு. நான் சொல்லியதால் தங்கள் துறையை மாற்றிக் கொண்டு மிக நல்ல வேலைகளுக்குச் சென்றவர்கள் உண்டு.

மிக அதிக நபர்களுடன் பழக்கம் இல்லாதவன் என்பது ஒருபுறமும் பழகியவர்களுடன் ஆழமான நட்பில் இருந்திருக்கிறேன் என்பது இன்னொரு புறமும் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் நான் இருக்கிறேன்.