Wednesday 16 October 2019

விண் சுடர்


சிவபெருமான் சிரசில் சந்திரனைச் சூடியிருப்பதை அனைவரும் அறிவோம். பெருமாள் தன் மணிமுடியில் சந்திரனைச் சூடியிருக்கிறார் தலைச்சங்க நாண்மதியம் என்ற வைணவத் தலத்தில். இவ்வூர் மயிலாடுதுறையிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் ஆக்கூர் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களில் ஒன்று. சந்திரன் தலைச்சங்க நாண்மதியப்  பெருமாளை வணங்கி அருள் பெற்றதாக ஐதீகம். சங்க இலக்கியங்களிலேயே தலைச்சங்கம் என்ற இந்த ஊர் குறிப்பிடப்படுகிறது. பூம்புகார்க் கடலிலிருந்து எடுத்து வரப்பட்ட சங்குகள் வணிகர்களால் இங்கே விற்பனை செய்யப்பட்டதால் இவ்வூர் தலைச்சங்கம் என பெயர் பெற்றிருக்கிறது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாவது பழைய கோவிலாக இருக்கக் கூடும். கற்றளி சிறிதாக இருக்கிறது. பின்னர் சமீபகாலத்தில் முன்னர் இருக்கும் மண்டபமும் மதிலும் கட்டப்பட்டிருக்கிறது. இன்று எனக்கு ஒரு பிராத்தனை இருந்தது.  மனதில் இருக்கும் சில சஞ்சலங்களைக் கடக்க ஆத்மபலம் வேண்டியிருக்கிறது. ஆலய வழிபாடு எனக்கு மனவலிமையைத் தருகிறது. விநாயகர் நான் எப்போதும் வழிபடும் கடவுள். அணுகுவதற்கு எளியவர். எங்கும் இருப்பவர். யானைமுகத்தைக் கண்டாலே மனதில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். அதன் பின் சிவாலயங்கள். பெருமாள் கோவில்கள். காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் போதே பிள்ளையார் கோவிலில் வணங்கி விடுவேன். உத்தமர் கோவிலும் அன்பிலும் சென்று வர வேண்டும். தீபாவளிக்கு முன்னரோ அல்லது பின்னரோ திருப்பதி சென்று வர வேண்டும். இன்று காலை கட்டிட அனுமதி தொடர்பான பணிகள் சிலவற்றை மேற்கொண்டேன். சூழ்நிலை சாதகமாக இருக்கிறது. நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சீர்காழி கடைத்தெருவில் ஒரு பெரிய இடம். அதன் உரிமையாளர் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் ஒரு அபார்ட்மெண்ட் பிரமோட் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 காலை மூன்று மணி நேரம் ஆலயத்தில் இருந்தேன். அங்கே ஒரு லஷ்மி நரசிம்மர் சன்னிதி இருக்கிறது. நரசிம்மர் உக்கிர மூர்த்தி. லஷ்மி அமைதியின் வடிவம். லஷ்மி அருகில் இருக்கும்போது நரசிம்மர் உக்கிரம் தணிந்து அருள்முகம் கொள்கிறார். உக்கிரத்தை விடவும் பலம் மிக்கதா அமைதி?

ஒரு பட்டரும் அவருக்கு உதவியாக ஒரு சேவார்த்தியும் இருக்கிறார்கள். சென்னையிலிருந்து இரண்டு குடும்பங்கள் வந்து பெருமாளை சேவித்து விட்டு போயினர். ஒரு குடும்பம் ஐயங்கார் குடும்பம். சேலத்திலிருந்து பத்து பேர் கொண்ட குழு நாங்கூர் திவ்ய தேசங்களை சேவித்து விட்டு தலைச்சங்கம் வந்திருந்தது. அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நாகப்பட்டினம் சௌந்தர்ராஜனைச் சேவிக்கச் செல்கிறார்கள்.

தெய்வ சன்னிதி முன் நிற்கையில் மனதில் ஓர் அமைதி பிறக்கிறது. அந்த அமைதி மனத்தெளிவை அளிக்கிறது. தெளிவிலிருந்து நம்பிக்கை பிறக்கிறது. நம்பிக்கை கொள்ளும் போது வாழ்க்கை இனிமையான அனுபவமாகிறது.

தண்ணார் தாமரைசூழ்*  தலைச்சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாள்மதியை*  விரிகின்ற வெம்சுடரை*
கண்ஆரக் கண்டுகொண்டு*  களிக்கின்றது இங்கு என்றுகொலோ?
என்பது திருமங்கை ஆழ்வார் பாசுரம்.

‘’விண்ணோர் நாள்மதி விரிகின்ற வெம்சுடர்’’ என்ற வரி மந்திரம் போல் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.