Thursday 17 October 2019

வீடும் வாழ்வும்

இன்று காலை எனது நண்பரான கட்டிடக்கலை வடிவமைப்பாளரிடம் (ஆர்க்கிடெக்ட்)  பேசிக் கொண்டிருந்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அதை நான் அறிவேன். அடுத்த வாரம் அவர் பயின்ற அண்ணா பல்கலை.யில் பி. ஆர்க் பயிலும் மாணவர்களுக்கு ஒரு உரை அளிக்கப் போகிறேன் என்றார். சட்டென எனக்கு ஒரு பொறி தட்டியது.  கட்டிடக்கலையில் உயர் பட்டம் பெற்றீர்களா என்றேன். உயர் பட்டம் பெற சேர்ந்தேன். பாதியில் படிப்பை நிறுத்தி விட்டேன் என்றார். உங்கள் தகுதிகளில் அது மிக முக்கியமானது என்றேன். இருவரும் சிரித்தோம். அவரது துறை சார்ந்தும் பொது விஷயங்கள் குறித்தும் பரந்த அறிவு கொண்டர். நல்ல அறிஞர். பல பெரிய கட்டிடங்களை வடிவமைத்தவர். உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்தவர். வருடம் ஒருமுறை இமயத்தில் மலையேற்றம் செய்வார். இலக்கிய வாசகர். எனக்கு கிடைத்துள்ள நண்பர்களால் நான் பெரும் நிறைவு கொள்கிறேன். இது ஓர் அரிய பேறு.

எனது கட்டுமானங்களை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்ட் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அவர் கட்டிடங்களும் கட்டிக் கொடுக்கிறார். ரியல் எஸ்டேட்டும் செய்கிறார். இடம் வாங்கி அதில் பெரிய வீடுகளைக் கட்டி விற்பனை செய்கிறார். தொழிலில் நுணுக்கமும் நேர்த்தியும் கொண்டவர். அவர் எனது நண்பரின் நண்பர். அந்த முறையில் நான் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். என்னுடைய மனையின் வரைபடங்களை அனுப்புவேன். அவருக்கு அது கிடைத்த இரண்டாவது தினம் என்னிடம் கட்டிட பிளான்கள் வந்து சேர்ந்திருக்கும். மின்னல் போல அதிரடியாக வேலை செய்யக் கூடியவர். நாங்கள் பல வருடங்கள் நேரில் பார்த்துக் கொண்டது கிடையாது. ஃபோனில்தான் பேசியிருக்கிறோம். எங்களுக்குள் பரஸ்பர மரியாதையும் நட்பும் இருந்தது. அவர் உருவம் குறித்து என்னிடம் ஒரு மனச் சித்திரம் இருந்தது. பல வருடங்களுக்குப் பின் நாங்கள் சந்தித்துக் கொண்ட போது அவர் குறித்து என்னிடம் இருந்த மனச்சித்திரம் குறித்து சொல்லி சிரித்துக் கொண்டோம். இப்போதும் அவரைப் பற்றி எண்ணும் போது அந்த இரு சித்திரங்களும் மனதில் எழும். கட்டிட பிளான்களில் சிறந்த அறிவு கொண்டவர். அவர் கணிணித் திரையில் அவர் உருவாக்கும் கோடுகள் சில நிமிடங்களில் அற்புதமான மாய உலகங்களை உருவாக்கி விடும். மிகச் சிறு இடத்தைக் கூட நம்ப முடியாத வாய்ப்புகள் கொண்டதாக ஆக்கி விடுவார். 

நான் கட்டிடத் தொழிலுக்கு வந்த போது - பொறியியல் பட்டம் பெற்ற இரண்டாவது ஆண்டில் ( அதற்கு முன் ஒரு வருடம் தமிழ்நாட்டையும் இந்திய மாநிலங்களையும் ரயிலில் ஒரு சுற்று சுற்றி வந்தேன்)- சென்னையில் மிக அதிக அளவில் அபார்ட்மெண்ட்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அதனை அடிக்கடி பார்க்கும் போது எனக்கும் ஒரு அபார்ட்மெண்ட் கட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான ஒரு பொருத்தமான இடத்தை வாங்கினேன். பின்னர் சில பெரிய கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

வீடுகள் கட்டிக் கொடுத்தவன் என்ற முறையில் எனக்கு சில அவதானங்கள் உண்டு. வீடு பௌதிகமான ஓர் இருப்பு மட்டும் அல்ல. அதில் வாழும் - வசிக்கும் மனிதர்களின் சுபாவமும் மன அமைப்புமே வீட்டை உயிர்ப்புடன் இருக்கச் செய்யும். ஓர் இடத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது  என்பது பயன்படுத்துபவர்களின் எண்ணங்களைப் பொறுத்தது. மயிலாடுதுறை போன்ற ஊர்களில் நான் கட்டிடம் கட்ட வந்த போது ஒரு மனை என்பது 40 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்டது. அதில் கீழ்த்தளத்தில் வெளிச்சம் நிறைந்ததாக காற்றோட்டத்துடன் கூடியதாக 1100லிருந்து 1200 சதுர அடி வரையிலான வீட்டைக் கட்ட முடியும். அதே பரப்புடன் அப்படியே முதல் தளமும் இரண்டாவது தளமும் எழுப்பலாம். இடம் இருக்கிறதே என்று அடைத்துக் கட்டினால் வெளிச்சமும் காற்றோட்டமும் இல்லாமல் ஆகும்.

நான் வாங்கியிருந்த வீட்டு மனை இரண்டு கிரவுண்டு அளவுள்ளது. ஆர்க்கிடெக்ட்டிடம் வீடுகள் பெரியவையாக வாங்குபவர்களுக்கு எல்லா விதத்திலும் வசதி மிக்கதாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். அவர் அருமையான ஒரு பிளானையும் எளிவேஷனையும் அளித்தார். அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வடிவமைப்புகள் கேரள பாணியைச் சேர்ந்தவை. வான் நோக்கி சிறகு விரிக்கும் பறவையைப் போன்ற எளிவேஷன் கொண்டது நான் கட்டி விற்பனை செய்த அபார்ட்மெண்ட். ஆனால் அந்த வடிவம் கட்டிடக்கலை அறிந்தவர்களுக்கு மட்டுமே நுட்பமாக புலப்படும். மற்றவர்களுக்கு அழகானது என்ற எண்ணத்தை உண்டாக்கும்.

அபார்ட்மெண்ட் வாங்கியவர்களில் ஒருவர் அமெரிக்காவில் வசிப்பவர். அவர் பிறந்தது வளர்ந்தது அனைத்துமே சென்னையில். அவரது சொந்த ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். அங்கே அவரது குலதெய்வம் கோயில் உள்ளது.  ஆண்டுக்கு ஒருமுறை மனைவி குழந்தையுடன் இங்கே வருவார். சாமி கும்பிடுவார். அப்போது ஒரு வாரம் வரை தங்கியிருந்து பக்கத்தில் உள்ள சிவாலயங்களுக்கும் விஷ்ணு கோவில்களுக்கும் சென்று வருவார். மாதம் ஒரு முறை அவரது பெற்றோர்களும் உறவினர்களும் வந்து தங்கி விட்டுச் செல்வர். அவர்கள் எங்கு சென்றாலும் என்னையும் உடன் அழைத்துச் செல்வார்கள். அவர் சென்னையில் தனது சொந்த இடத்தில் ஒரு அபார்ட்மெண்ட் கட்டி விற்பனை செய்தவர். சென்னையில் தான் கட்டிய அபார்ட்மெண்டை விட இந்த அபார்ட்மெண்ட் சிறப்பாக இருக்கிறது என்று சொல்வார். 

மயிலாடுதுறையின் மிக முக்கியமான தொழில் அதிபர் ஒருவர் அபார்ட்மெண்ட்வாசி. வீடு கட்டுவதின் எந்த சிரமமும் தனக்கு அனுபவமாகாமலே தான் ஒரு சிறந்த இல்லத்தை அடைந்திருப்பதாக எல்லாரிடமும் கூறுவார். 

வீடு பவித்ரமானது. புனிதமானது. அந்த உணர்வு எல்லா மனிதர்களிடமும் இருக்குமாயின் இந்த உலகமும் வாழ்வும் கணந்தோறும் அற்புதமானதாக இருக்கும்.