Thursday 31 October 2019

மழைப்பயணம்


பூனாவில் வங்கிப் பணியில் சேர உள்ள நண்பனைக் காண்பதற்காக நேற்று சென்னை கிளம்பினேன். இன்றுதான் ஊர் திரும்பினேன். எங்கள் ஊர்க்காரர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. சென்னை எங்களுக்கு ஆறு மணி நேர பயண தூரத்தில் உள்ள ஊர். காலை 5 மணிக்குக் கிளம்பினால் 11 மணிக்கு அங்கு சென்று விடலாம். ஒருநாள் திட்டம் என்றால் காலை புறப்பட்டு வேலைகளை முடித்து விட்டு மாலை கிளம்பி இரவு ஊருக்கு வந்து விடலாம். திருச்செந்தூர்-சென்னை விரைவு ரயில் காலை 5.45க்கு மயிலாடுதுறை வரும். காலை 11.30க்கு எழும்பூரில் சேர்த்து விடும். அதில் சென்னை செல்வது பலவகையிலும் எங்களுக்கு வசதியானது. வேலையை முடித்து விட்டால் மாலை 4 மணிக்கு எழும்பூரில் புறப்படும் சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயிலைப் பிடித்தால் இரவு 9.15க்கு மயிலாடுதுறை. இரவு உணவுக்கு வீட்டுக்கு வந்து விடலாம்.

இப்போது ரயில் பயணங்களை முன்பதிவு செய்தால் மட்டுமே இலகுவாகப் பயணிக்க முடிகிறது. ஆதலால் திடீர் பயணங்கள் செய்ய பேருந்தே ஒரே வழி. காலை வெண்முரசு வாசித்து விட்டு மெதுவாகக் கிளம்பலாம். நடைப்பயிற்சியும் தடைப்படாது. ஆனால் பெரிய பகலை அங்குலம் அங்குலமாகக் கடந்து செல்ல வேண்டும்.

நேற்று மயிலாடுதுறையில் கிளம்பியதிலிருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் செல்வது வரை மழை. பேருந்தில் கண்ணாடி ஜன்னல். ஆறு மணி நேரமும் கண்ணாடியின் மறுபக்கத்தில் வழிந்து கொண்டிருக்கும் மழையைப் பார்த்த வண்ணமே பயணித்தேன். நல்ல மழை பெய்ததால் சாலையில் மக்கள்  யாரும் இல்லை. சாலையில் இரண்டு சக்கர வாகனங்களும் இல்லை. வயல்களில் மழைநீர் சேறுடன் குழம்பி சிவப்பாய் பொங்கி வடிந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு நல்ல மழை பொழியும் மாநிலம். ஆழ்துளைக் கிணறுகளால் பாசனம் செய்வதை விட வேறு மாற்று வழிகள் குறித்து சிந்திக்கலாம் என இந்த பயணத்தின் போது தோன்றியது. தமிழ்நாடு சாலைகளால் இணைக்கப்பட்டிருப்பது போல தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களின் விவசாய நிலமும் நீர்க்குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டால் விவசாயத்தை இங்கே மிகவும் இலாபகரமான தொழிலாக வளர்த்தெடுக்க முடியும் என்று பட்டது. இஸ்ரேலில் விவசாயிகள் விவசாயத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் பெற்று அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்துகின்றனர். எல்லா வயல்களும் அரசின் நீர்க்குழாய்களால் இணைக்கப்பட்டிருக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். தமிழ்நாட்டின் பொருளியல் முகத்தையே வேறொன்றாக மாற்ற முடியும்.

எனது நண்பன் மிகவும் இளையவன். 25 வயது. பெற்றோரால் ஒவ்வொரு கணமும் குழந்தையாகவே எண்ணப்பட்டு அக்கறை செலுத்தப்பட்டவன். ஒரு சில நாட்களைத் தவிர வீட்டைப் பிரிந்து அறியாதவன். அவன் பெற்றோர்களுக்கு நல்ல வேலை கிடைத்திருக்கிறது என ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் கண்மணியைப் பிரிய வேண்டுமே என்ற துயர். இந்த சூழ்நிலையில் அவர்களைச்  சந்திப்பது அவர்களுக்கு தைரியம் அளிக்கும் என எண்ணினேன். ஆகவே சென்றேன். மகிழ்ச்சியான மாலை. நான் இரவு புறப்படுவதாக திட்டமிட்டிருந்தேன். ஆனால் காலை தான் செல்ல வேண்டும் என அன்புக்கட்டளையிட்டனர். மீற முடியவில்லை. இரவு  அவர்கள் வீட்டில் தங்கியிருந்து விட்டு காலை சிற்றுண்டி முடித்து பயணம். மாலை வீடு வந்து சேர்ந்தேன்.