நேற்று ஒரு ஹார்டுவேர்
கடைக்குச் சென்றிருந்தேன். ஸ்டீல் மற்றும் சிமெண்டின் தற்போதைய மார்க்கெட் நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
கடையின் உரிமையாளர் எனது நண்பர். வெளியே சென்றிருந்தார். கடையில் அக்கவுண்டண்டான ஓர்
இளம்பெண் இருந்தார்.
காத்திருக்கும்
நேரத்தில் பொதுவாக பேசிக் கொண்டிருந்தேன்.
’’நீங்கள் என்ன
ஊர்?’’
‘’குத்தாலம் பக்கத்தில்
பழையகூடலூர் சார்”
‘’அப்படியா! குத்தாலத்துக்கு
சைக்கிள்ல வந்து அங்கேயிருந்து பஸ் பிடிச்சு வருவீங்களா?’’
‘’ஆமா சார்”
’’என்ன படிச்சிருக்கீங்க?’’
‘’எம். பி. ஏ”
’’நல்ல படிப்பாச்சே.
பேச்சுலர் டிகிரி என்ன பண்ணீங்க”
’’பி. காம்’’
‘’ரொம்ப நல்ல படிப்பாச்சே.
நீங்க பேங்கிங் எக்ஸாம் எழுதலாமே. இதுவரைக்கும் ஏதாவது எக்ஸாம் எழுதியிருக்கீங்களா?’’
‘’இல்ல சார்! எதுவும்
எழுதலை.’’
‘’எனக்கு ரொம்ப
வேண்டிய ஒரு பையன் பேங்க் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி இப்ப கர்நாடகா-ல அசிஸ்டெண்ட் மேனேஜரா
இருக்கார்மா. எனக்கு வேண்டிய இன்னொரு பையனும் எக்ஸாம் எழுதி ரிசல்ட்டுக்கு வெயிட் பண்ணிட்டு
இருக்கார். இன்னும் ஒரு வாரத்துல ரிசல்ட் வரும். நிச்சயம் செலக்ட் ஆயிடுவார்மா”
‘’காலேஜ்ல டிகிரி
வாங்கினதுக்குப் பிறகு இந்த வேலைக்கு வந்துட்டன் சார். நேரம் சரியா இருக்கு.’’
‘’எனக்குத் தெரிஞ்சு
ஆன்லைன் கோர்ஸ் பேங்கிங் எக்ஸாம் பிரிபேர் பண்றதுக்கு இருக்கு. அதுல கூட நீங்க படிக்கலாம்’’
‘’எங்க வீட்டுல
ரொம்ப கஷ்டம் சார்.’’
‘’நான் சென்னைல
இருக்கற என்னோட நண்பர்ட்ட கேட்டு விபரம் சொல்றன். பெரிய ஃபீஸ் எதுவும் இருக்காது. அது
எவ்வளவு அமௌண்டோ அதை நான் கொடுக்கறன். நீங்க பேங்க் எக்ஸாம்-ல செலக்ட் ஆகி வேலைக்குப் போனதும் திருப்பிக் கொடுங்க போதும்’’
‘’உங்க அக்கறைக்கு
ரொம்ப நன்றி சார்’’
கடை உரிமையாளர்
வந்து விட்டார். அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
‘’சார்! உங்க அக்கவுண்டண்ட்ட
பேங்க் எக்ஸாம் எழுத சொல்லியிருக்கன்’’
‘’நல்ல விஷயம்
தாராளமா செய்யட்டும்’’.
வீட்டுக்கு வந்ததும்
சென்னை நண்பருக்கு ஃபோன் செய்தேன்.
‘’அண்ணா! நமஸ்காரம்
அண்ணா. எப்படி இருக்கீங்க”
‘’நல்லா இருக்கன்
தம்பி. உன்னோட பிரிபரேஷன் எப்படி போவுது?’’
‘’நல்லா போயிட்டிருக்குண்ணா’’
‘’உங்கிட்ட ஒரு
கன்சல்டேஷனுக்காக ஃபோன் செஞ்சன். எனக்குத் தெரிஞ்ச ஹார்டுவேர் கடையில வேலை பாக்கற ஒரு பொண்ணு. பி.காம் படிச்சிருக்கு எம்.பி.ஏ பண்ணியிருக்கு.
நான் பேங்க் எக்ஸாம் எழுதச் சொன்னேன்.’’
‘’நல்ல விஷயம்னா.
பி. காம் கிராஜூவேட்ஸுக்கு கணக்கு நல்லா வரும்னா. இங்கிலீஷ்ல மட்டும் கொஞ்சம் கவனம் கொடுத்தா ஈஸியா பாஸ் பண்ணலாம்னா’’
‘’ஆன்லைன் கோர்ஸ்
எது நல்லா இருக்கும்?’’
‘’ஆன்லைன் கோர்ஸ்
இருக்குன்னா. ஆனா அதை விட பெட்டர் ஒரு மாசம் சென்னைக்கு வரச் சொல்லுங்கன்னா. இருக்கறதிலயே பெஸ்ட்டான கோச்சிங் இன்ஸ்ட்டிடியூட்ல
சேரட்டும். எல்லா இன்ஸ்டிடியூட் பக்கத்திலயும் நிறைய லேடீஸ் ஹாஸ்டல் இருக்கு. கிளாஸ்
ஒரு மாசம்தான் நடக்கும். கொஸ்டின் சால்வ் பண்றதோட எல்லா டெக்னிக்கையும் சொல்லித் தந்திருவாங்க.
எப்படி பிரிபேர் பண்ணனும்னு வழிகாமிச்சிடுவாங்க. அதுக்கப்பறம் தொடர்ந்து அப்டேட்ஸ்,
கொஸ்டின் பேப்பர்ஸ், ஸ்டடி மெட்டீரியல்ஸ் மெயில்ல அனுப்புவாங்க. டவுட்ஸ கிளியர் பண்ணுவாங்க’’
‘’கோர்ஸ் ஃபீஸ்
எவ்வளவு ஆகும்?’’
‘’பதினைஞ்சாயிரம்
ஆகும்னா”
‘’ஹாஸ்டல் ஃபுட்
ஒரு பத்தாயிரம் ஆகுமா”
‘’அவ்ளோதான்னா
ஆகும்’’
‘’அந்த பொண்ணு
வீட்டுல கஷ்டம்னு சொல்லுச்சு. கோர்ஸ் ஃபீஸும் ஹாஸ்டல் ஃபீஸும் நான் கொடுக்கறன்னு சொல்லியிருக்கன்.
டுவெண்டி ஃபைவ் சமாளிச்சுக்கலாம்’’
‘’நல்ல விஷயம்னா.
தகுதி படைச்ச ஒருத்தருக்கு தேவையான நேரத்துல உதவி செய்யறது அவசியமான ஒண்ணுன்னா’’
இன்று அந்த கடைக்கு
மீண்டும் சென்றேன். அந்தப் பெண்ணைச் சந்தித்தேன்.
விபரம் சொன்னேன்.
‘’சார்! எனக்கு
வீட்டுல கல்யாணத்துக்குப் பார்த்துகிட்டு இருக்காங்க. ஜனவரிக்குள்ள முடிஞ்சிரும்னு
எதிர்பாக்கறாங்க. கல்யாணத்துக்கு அப்புறம்தான் மத்ததப் பத்தி யோசிக்க முடியும்.’’
‘’அதாவதும்மா ஆணா
இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் நாம கத்துகிட்ட விஷயம்தான் நமக்கு பெருசா உதவி செய்யும்.
ஒரு பழமொழி கேட்டிருப்பீங்க. ‘’பெற்ற பிள்ளை
கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது’’ன்னு.’’
‘’நீங்க சொல்றது
உண்மைதான் சார்! என் சூழ்நிலை இப்படி இருக்கு.’’
நான் என்னுடைய
விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன்.
‘’நீங்க எப்ப வேணாலும்
கான்டாக்ட் பண்ணுங்க அம்மா. நான் உங்களுக்கு உதவி பண்ண தயாரா இருக்கன்”
நான் விடைபெற்றுக்
கொண்டேன்.
தமிழ்நாட்டுக்
கல்வியில் என்ன தான் நடக்கிறது? ஏன் கல்லூரி அந்தப் பெண்ணுக்குத் தேவையான வழிகாட்டலையும்
அறிவுறுத்தலையும் பட்டம் பெறும் போது வழங்கி அனுப்பவில்லை? பாடத்திட்டத்தில் மாற்றம் என்றால்
அதை அரசியல் பிரச்சனையாக்குகிறார்கள். இன்னொரு மொழி படியுங்கள் என்றால் தமிழ் அழிந்து
விடும் என்கிறார்கள். நுழைவுத்தேர்வுகள் கூடவே கூடாது என்கிறார்கள். சாமானியர்களுக்கு
தமிழ்நாட்டின் கல்லூரிகள் எவ்வகையில் உபயோகமாய் இருக்கின்றன? இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பார்கள்?
ஈஸ்வரோ ரக்ஷதோ.