Sunday 27 October 2019

சில குறிப்புகள்


சென்னைவாசியான ஒரு இளைஞர் எனது நண்பர். சமூகம் குறித்த அவதானம் உடையவர். காந்திய சிந்தனைகள் மீதும் இலக்கிய வாசிப்பின் மீதும் ஆர்வம் கொண்டவர். சென்னைவாசி என்பதால் சாமானியர்களின் அதிகார விருப்பு குறித்தும் சமூகத்தின் அரசியல், கருத்தியல் மற்றும் பொருளியல் அதிகாரத்தின் இயங்குமுறை குறித்தும் அறிந்தவர். அதனை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்.   ஓரிரு ஆண்டுகளுக்கு முன் கட்டிடப் பொறியியலில் பட்டம் பெற்று பின்னர் வங்கித் தேர்வுகள் எழுதினார். அதில் தேர்வாகி இப்போது வங்கி அதிகாரியாக மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் இன்னும் சில நாட்களில் பணியில் இணைய இருக்கிறார். இரண்டு நாட்கள் முன்னர் பணியாணை வந்தது. அதனை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது.

அவருக்கு 25 வயதாகிறது. முற்றிலும் புதிய இடத்தில் பணியில் இணைகிறார். அது ஒரு நல்ல வாய்ப்பு. நமது நாளை நமக்கு விருப்பமான வடிவத்தில் வகுத்துக் கொள்ள முடியும். அவர் கேட்டுக் கொண்டதின் பேரில், அவருக்கு நான் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்.

1. காலை 5 மணிக்கு எழுவதை பழகிக் கொள்ளவும். கதிர் முளைப்பதற்கு முன் எழுந்து ஒரு மணி நேரம் உலாவுவது என்பது நமக்கு வாழ்க்கை மீதான பிடிப்பையும் நம்பிக்கையையும் பலப்படுத்தும். உடல் இயக்கம் இலகுவாக இருக்கும்.

2. அரைமணி நேரம் யோகப் பயிற்சிகள் செய்யவும். சூர்ய நமஸ்காரம் ஆறு யோகாசனங்கள் ஒரே பயிற்சியில் இணைந்தது. எளிதானது. அதனைச் செய்யவும். பத்து நிமிடம் தியானம் செய்யவும்.

3. குறைந்தது காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் என ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் புத்தகம் வாசிக்கவும். மனதை எப்போதும் இளமையாக வைத்திருக்க சிந்திக்கும் மன அமைப்பு கொண்டவர்களுக்கு அது ஒரு நல்ல வழி.

4. தங்கியிருக்கும் இடத்தின் தரையைத் தினம் தண்ணீர் கொண்டு மெழுகவும். நாம் இருக்கும் இடத்தை நாமே தூய்மைப்படுத்திக் கொள்வது என்பது ஒரு நல்ல பண்பு. நமது மன ஒழுங்கை சீராகப் பராமரிக்கக் கூடியது.

5. பணி நேரத்துக்கு பத்து நிமிடம் முன்னர் எப்போதும் வங்கியில் இருக்கவும். அவசரமாக உதவி தேவைப்படும் யாரோ ஒருவருக்கு உதவி செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும். நம் மீது பலர் நம்பிக்கை கொள்வார்கள். நம்பிக்கையை உருவாக்குபவர்கள் தங்கள் பணிகளை எளிதில் செய்து முடிப்பார்கள்.

6. பணியில் இருக்கும் போது, மற்ற விஷயங்கள் அனைத்தையும் மறந்து விடவும். சொந்த விஷயம். குடும்ப விஷயம். பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும்.

7. பணி முடிந்து வீட்டுக்கு வரும் போது பணியின் சூழலை முற்றிலும் மறந்து விடவும்.

8. மிகக் குறைவான அளவே அலைபேசியையும் இணையத்தையும் பயன்படுத்தவும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் சேர்த்து மொத்தமாக அரைமணி நேரம்.

9. இரவு வீட்டுக்கு வந்ததும் ஒருவேளை உணவை நீ தயாரித்து உண்ணவும். சமையல் பழக இது நல்ல சந்தர்ப்பம். சமையல் தெரிந்த ஆண் சுயசார்பை அடைகிறான்.

10. தினமும் நாட்குறிப்பு எழுதவும். நம் அன்றாடத்தை அழகாக்கிக் கொள்ள சலிப்பு நம்மைச் சூழாமல் இருக்க நம் மனதைத் தொகுத்துக் கொள்ள அது உதவும்.

11. இரவு பத்து மணிக்கு உறங்கி விடவும்.

எந்த மாநிலத்தில் பணி புரிகிறோமோ அம்மாநில மக்களின் அன்றாட பழக்கவழக்கங்களை உணவுமுறைகளை மனப்போக்கை மொழியை வழிபாட்டை ஆர்வத்துடன் கவனிக்கவும். அதனைக் கற்கவும். புரிந்து கொள்ளவும். இந்தியப் பண்பாடு இந்தியப் பெருநிலத்தின் பல்வேறு மக்கள் தொகைகளால் பங்களிப்பு வழங்கப்பட்டது. நமது மண் கூட்டுப் பண்பாடு கொண்டது. ஒவ்வொரு பிரதேசத்தின் மேன்மையும் நம் அன்றாடத்துக்கு வழங்கியுள்ள பங்களிப்பை உணர அது ஒரு நல்ல வாய்ப்பு.

ஒரு புதிய நிலத்துக்கு செல்ல உள்ள நண்பனுக்கு வாழ்த்துக்கள்!