Thursday 26 December 2019

12 விழாக்கள் – சில வினாக்கள்


2020ம் ஆண்டில் 12 மாதங்கள் 12 விழாக்கள் எனத் திட்டமிட்டிருந்தேன். நண்பர்கள் பலர் இது குறித்து அறிந்து இது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பினர். எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதிகமாக எழுப்பப்படும் கேள்விகளையும் அதற்கு நான் அளித்த பதில்களையும் இங்கே குறிப்பிடுகிறேன்.

1. பயணத் திட்டத்தை உருவாக்கி விட்டீர்களா?

பயணத்திட்டம் என நண்பர்கள் உருவகித்துக் கொள்வது எப்போது கிளம்புகிறோம் எப்போது திரும்பி வருகிறோம் என்பதை மட்டுமே. என்னுடைய அனுபவத்தில் எனக்கு புறப்படுதலே முக்கியமானது. புறப்படுதல் என்றால் புறப்படும் கணம். அதற்கு முன் என்னுடைய லௌகிகப் பணிகளை முடித்து விடுவேன். பணிகள் முடிந்ததுமே புறப்படும் மனநிலை வந்து விடும். பயணம் குறித்த உற்சாகம் பிறந்து விடும். உற்சாகம் உருவானதுமே கிளம்பி விடுவேன்.

12 விழாக்களுக்கான சுருக்கமான பயணத்திட்டம் இதுவே. ஒவ்வொரு மாதமும் 7 நாட்கள். விழா நடைபெறும் இடத்துக்கு ரயிலில் செல்ல 2 நாட்கள். விழாவில் மூன்று நாட்கள். ஊர் திரும்ப 2 நாட்கள். (2+3+2=7).

2. பயண ஏற்பாடுகள் செய்து விட்டீர்களா?

பயண ஏற்பாடுகள் எனக் குறிப்பிடுவது ரயில் முன்பதிவு, செல்லும் ஊரில் தங்குமிடம் பதிவு செய்தல் ஆகியவையே. நான் அதற்கு பெரிய முக்கியத்துவம் தர மாட்டேன். நான் வசதிகளுக்கு எதிரானவன் அல்ல; ஆயினும் வசதிகளைப் பொறுத்து பயணத்தை முடிவு செய்பவனும் அல்ல. பயணத் துவக்கத்துக்கான நல்சமிங்ஞை கிடைத்ததும் கிளம்பி விடுவேன்.

3. முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யவில்லையெனில் பயணம் எப்படியிருக்குமோ என்ற கவலை ஏற்படாதா?

ஏற்படாது. நான் இந்தியாவெங்கும் சுற்றியவன். எத்தனையோ முறை சுற்றியிருக்கிறேன். செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்ததும் அங்கே அப்போது எனக்கு இருக்கும் மனநிலைக்கு ஏற்றார் போல் தங்குமிடத்தை ஏற்பாடு செய்து கொள்வேன். பொதுவாக நான் தங்குமிடத்துக்கு குறைவாகவே செலவு செய்வேன்.

4. செல்லும் ஊரில் என்ன செய்வீர்கள்?

காலை சூர்யோதயத்துக்கு முன் ஊர் சுற்ற கிளம்பி விடுவேன். புதிய நிலத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே புத்துணர்ச்சி தரும். அந்த ஊரை அங்கே வாழும் மனிதர்களைப் பார்த்தவாறு சாலைகளில் நடந்து செல்வேன். மனம் உற்சாகமாக இருப்பதால் அப்பொழுதுகள் துல்லியமாக நினைவில் பதிவாகும். மனித முகங்களின் வழியாக நாம் அறியும் இந்தியா ஒன்றுண்டு.

5.செல்லும் ஊரில் எங்கு செல்வீர்கள்?

அந்த ஊரில் இருக்கும் தொன்மையான ஆலயங்களுக்குச் செல்வேன். இந்தியாவின் தொல் ஆலயங்கள் என்பவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கும் உயிரோட்டமான உணர்வை உணரச் செய்பவை. பின்னர் அங்கேயிருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்வேன். இந்திய வரலாற்றில் அந்த ஊர் எவ்விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் பார்ப்பேன். அந்த ஊரின் பரபரப்பான கடைவீதிகளையும் சந்தைகளையும் சென்று காண்பேன். அந்த ஊரின் பொருளாதாரமும் மக்கள் வாழ்நிலையும் மக்கள் மனோபாவமும் எதனால் ஆனது என்பதைக் குறித்த நேரடி மனப்பதிவை அதன் மூலம் பெற முடியும்.

6. விழாக்கள் இந்த ஆண்டு பயணத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பது எதனால்?

ஒரு பண்பாட்டு விழா என்பது அச்சமூகம் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் கொண்டுள்ள சமூக ஒருங்கிணைப்பை வெளிப்படுத்துவது. விருந்தினர்களை சிறப்பாக உபசரிப்பது என்பதை இந்திய மரபு தனது விழுமியமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்த்தெடுத்துள்ளது. விழாக்களை பல்லாயிரம் மக்களை தம் நகர் நோக்கி வரவேற்கும் வாய்ப்பாகவே இந்தியர்கள் கண்டுள்ளனர். எனவே இந்திய விழாக்கள் நம்மை வருக வருக என அழைக்கின்றன. அந்த பண்பாட்டு அழைப்பை ஏற்றே இந்த ஆண்டு முழுதும் விழாக்கள் என்னுடைய பயணத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

7. சக பயணிகளுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

நாம் பயணிக்க உள்ள விழாக்கள் குறித்து இடங்கள் குறித்து அங்குள்ள மக்கள் குறித்து இந்தியப் பண்பாட்டிற்கு அந்த விழா வழங்கியுள்ள பங்களிப்பு குறித்து எழுதப்பட்டுள்ளவற்றை வாசிக்கவும். விழாக்கள் நம் பேதங்களை அறிந்து அவற்றை நீக்கிக் கொள்வதற்கான வாய்ப்பே. எல்லா விழாக்களும் அவ்வாறே.
விழா நடைபெறும் நகரங்களில் அலைந்து திரியுங்கள். உங்கள் ஆழ்மனம் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும்.

8. புறப்படுவதற்கு முன்னான மனநிலை எப்படி இருக்கிறது?

ரிஷிகேஷில் ஒவ்வொரு அந்திப் பொழுதும் கொண்டாட்டமே. மாலை 4 மணியிலிருந்து அந்த நகரமே கங்கையின் படித்துறைகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். இந்தியாவின் வெவ்வேறு பிரதேசங்களை அடையாளம் காட்டும் வெவ்வேறு வண்ண ஆடைகள் அணிந்த மக்கள் திரள். நெற்றிக் குங்குமம் அணிந்த பெண்கள், குதூகலிக்கும் குழந்தைகள், வண்ண மலர் நிறைந்த தீபத் தொன்னைகளை வாங்கி கையில் வைத்திருக்கும் ஆண்கள், இறை நாமத்தை எப்போதும் உச்சரிக்கும் முதியவர்கள், உலகெங்கிலுமிருந்து குவிந்திருக்கும் பயணிகள் என ரிஷிகேஷ் அணி பூண்டிருக்கும்.

கங்கைச் சுடராட்டுக்கு முன்பான மனநிலை இப்போது இருக்கிறது.