Wednesday 4 December 2019

வண்டியும் ஓடமும்


சமீபத்தில் ஒருவரைச் சந்தித்தேன். அவரைச் சந்திப்பது அதுவே முதல் முறை. எனது நண்பர் ஒருவர் அவரை சந்திக்கச் சொன்னார். எனது நண்பர் தனது குடும்ப சொத்து ஒன்றை விற்க விரும்பினார். அவர் அமெரிக்கா செல்கிறார். திரும்பி வர பத்து வருடம் வரை கூட ஆகலாம். நான் சென்று சந்தித்தவர் துவக்க அறிமுகங்களுக்குப் பின் விஷயத்துக்கு வந்தார்.

’’தம்பி! மூணு வருஷமா சொத்து எதுவும் வாங்கறதில்ல. முன்ன மாதிரி நிலவரம் இல்ல. நிறைய கெடுபிடி’’

‘’சொத்து வாங்கறதுல புதுசா எதுவும் ரூல்ஸ் இல்லையே. முன்ன இருந்தது தான இப்பவும்.’’

‘’இல்லப்பா. ஆதார் கொடு. பிஏஎன் நம்பர் கொடுன்னு ஒரே தொல்லை’’

‘’தமிழ்நாட்டுல ரொம்ப வருஷமாவே அஞ்சு லட்சத்துக்கு மேல சொத்து வாங்கினா பிஏஎன் நம்பர் வேணும்ங்கற ரூல் இருக்கு. அது ஒண்ணும் புதுசு இல்லயே’’

‘’இல்லப்பா. இப்ப உள்ள நிலம சரியில்ல’’

‘’சரியில்லன்னு எதைச் சொல்றீங்க. வீட்டு மனை வாங்க வீடு கட்ட எல்லா பேங்க்-கும் எப்பவும் உள்ளத விட அதிகமாவே கடன் தர்ராங்க. வீட்டுக்கடன் வட்டிக்கு அரசாங்கம் மானியம் தருது. இன்கம் டாக்ஸ் எக்ஸெம்ப்ஷன் சிலாப் உயர்ந்திருக்கு’’

‘’நான் என் விஷயத்தையே உதாரணமா சொல்றன். நான் 2004ல பத்தாயிரம்  சதுரடி மனை ஒன்ன வாங்கினேன். சதுரடி 80 ரூபாய்னு’’

நான் எட்டு லட்சம் ரூபாய் என மனதுள் கணக்கிட்டுக் கொண்டேன்.

---’’வாங்கி ரெண்டு வருஷத்துல அந்த இடத்தோட விலை டபுள் ஆச்சு’’

பதினாறு லட்சம்.

---’’அப்புறம் அந்த ஏரியால சதுரடி 400க்கு போச்சு’’

நாற்பது லட்சம்.

---‘’2009ல அந்த இடத்தை சதுரடி 800 ரூபாய்க்கு கொடுத்துடலாம்னு முடிவு பண்ணேன்’’

எண்பது லட்சம்.

‘’என்னோட சொந்தக்காரன் ஒருத்தன் ஏன் அந்த இடத்தைக் கொடுக்கலாம்னு சொல்ற. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணு டபுள் ஆகும்னு சொன்னான். அது படியே செஞ்சன். அப்படியே ரெண்டு வருஷத்தில் டபுள் ஆச்சு.’’

ஒரு கோடியே அறுபது லட்சம்.

---’’சொந்தக்காரனே ஒரு பார்ட்டியோட வந்து சதுரடி 1400க்கு கேட்டான். நான் 1600 வந்தாதான்னு உறுதியா நின்னன்’’

எங்களுக்குத் தேனீர் வந்தது. தேனீர் பருகினோம். ஒரு சிறு இடைவெளி.

’’மூணு வருஷமா டெட் லாக் தம்பி.அந்த இடத்தைக் கொடுத்துடலாம்னு பாக்கறன். யாராவது பார்ட்டி இருந்தா சொல்லுங்க’’

எனக்கு சற்று ஏமாற்றம். அவர் சொத்து வாங்குவதில் ஆர்வம் உள்ளவர் என்பதாலேயே என் நண்பர் என்னை அவரிடம் அனுப்பியிருந்தார். அவர் தன் சொத்தை விற்க வேண்டும் என்று என்னிடம் சொல்கிறார். அவரிடம் அதை வெளிப்படுத்த முடியாது.

’’ஸ்கொயர் ஃபீட் என்ன ரேட் வந்தா கொடுக்கலாம்?’’

’’தம்பி 800ன்னு கேட்டாக் கூட கொடுத்திடுவோம். ஜெனியூன் பார்ட்டி – சிங்கிள் பேமெண்ட்னா 750க்கு முடிச்சுக்கலாம்.’’

என் நண்பரின் சொத்து தொடர்பான விபரங்களை மீண்டும் ஒருமுறை சொன்னேன். பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக வருத்தப்பட்டார். அவரது நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டேன். கிளம்பி விட்டேன். வாசல் வரை வந்து வழியனுப்பினார். வாசலில் வைத்து சொன்னார்.

‘’தம்பி! 750 கூட வேணாம். 650ன்னா முடிச்சிடுங்க”

வண்டியும் ஓடத்தில் ஏறும்; ஓடமும் வண்டியில் ஏறும் என்ற மலையாளப் பழமொழி என் நினைவில் வந்தது.